ஞானக்கூத்தன் 'சூரியனுக்குப் பின்பக்கம்' என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரியாது.
இந்தக் கவிதை 'தீபம்' இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு. 'சூரியனுக்குப் பின் பக்கம்' என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் 'ழ' வெளியீடாக ஒரு கவிதைப் புத்தகம் கொண்டு வந்தார்.
அந்தப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லை. டிசம்பர் 1998ல் ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும்போது, 'சூரியனுக்குப் பின் பக்கம்' கவிதையைச் சேர்க்க வேண்டுமென்று ஞானக்கூத்தன் குறிப்பிட்டார்.
'ழ' வெளியீடாக நீங்கள் கொண்டு வந்த 'சூரியனுக்குப் பின்பக்கம் 'கவிதைப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லையா?' என்று கேட்டேன்.
'இல்லை,' என்றார்.
'எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் இந்தக் கவிதை வந்தது?' என்று கேட்டேன்.
'1974ஆம் ஆண்டு தீபம் பத்திரிகையில் வந்தது/' என்றார்.
நா.பார்த்தசாரதியின் வீடு என் வீட்டிற்குப் பக்கத்திலிருந்தது . அங்கே போனேன். நா.பாவின் வீடு ஒரு அடுக்ககமாக மாறி இருந்தது.
அவர் புதல்வரை 1974 ஆம் ஆண்டு தீபம் இதழ்களைக் கேட்டேன். அவர் கொண்டு வந்து கொடுத்தார். அங்கே இருந்தவாறு தாள்களில் ஞானக்கூத்தனின் விட்டுப் போன கவிதைகளை எழுதினேன். சூரியனுக்குப் பின் பக்கம் அதில் ஒரு கவிதை.
நான் எழுதிக்கொண்டு வராவிட்டால் எல்லாம் விட்டுப் போயிருக்கும். ஞானக்கூத்தனும் தானாகவே அங்கே சென்று போய் எழுதிக்கொண்டு வந்திருக்க மாட்டார்.
'சூரியனுக்குப் பின்பக்கம்' ஒரு வினோதமான கவிதை. ஞானக்கூத்தனால் மட்டும்தான் அப்படி எழுத முடியும். இதோ நீங்களும் அந்தக் கவிதையை இங்கே வாசியுங்கள்.
சூரியனுக்குப் பின்பக்கம்
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் உடனே
நான் சொல்வேன்:
அனைத்தும் வல்ல இராட்சதரை.
எதனால் என்றால்
அவரில் சிலரைக்
கனாப் பொழுதில் நான் கண்டேன்.
அவர்கள் தொகையால்
எண்ணற்று
ஒன்றாய்க் கூடி
சூரியனைப் பாறைகொண்டு தூளாக்கிக்
கையால் இழுக்கும் வண்டிகளில்
அடுக்கிக் கொண்டு சென்றார்கள்
எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்
சொன்னான் ஓரரக்கன்:
இன்றைக் கெங்கள் உணவுக்கு.
உடம்பும் பொலிவும் ஒரு சேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக் கொண்டு பலர் சென்றார்
நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல்.
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் சொல்வேன்:
இராட்சதரை
எதனால் என்றால் சூரியனை
யார் இடித்தார் உணவுக்கு?
தினமும் காலையில் இந்தக் கவிதையை ஒருமுறையாவது படித்துவிடுவேன். சூரியனையே உணவாக எடுத்துக்கொண்டு செல்லும் இராட்சதரை நினைத்துப் பார்க்கிறேன். அதுவும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துக்கொண்டு போகிறார்களாம். நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல தூக்கிக் கொண்டு போகிறார்களாம்.
உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது இந்தக் கவிதை? சூரியனை உண்மையில் யாராவது நெருங்க முடியுமா? அதுவும் உணவாக அதைப் பிளந்து எடுத்துக் கொண்டு போக முடியுமா?
ஞானக்கூத்தன் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்.
Comments