Skip to main content

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..




அழகியசிங்கர்

                                                                                                                        (தொடர்ச்சி..)








திரும்பவும் சந்திப்பு நிகழ்கிறது.  பா ராகவன் குறித்து நாவலைப் பற்றிப் பேச.

ஜெகன் : வணக்கம்.

மோகினி : வணக்கம்.

அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகன் : யதி நாவலை நானும் முழுவதுமாகப் படித்து விட்டேன். 

மோகினி : இந்த நாவலை இலக்கியத் தரமான நாவலாகக் கருதுகிறீர்களா?

அழகியசிங்கர் : நிச்சயமாக. பரிசுக்குரிய நாவலாகவும் கருதுகிறேன்.

ஜெகன் : நம்ப முடியாத சம்பவம் இதில் நிறைய இருக்கின்றன.

அழகியசிங்கர் : நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும்.  இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம் இருக்கிறது. 

மோகினி : அடுக்கடுக்காக பல நிகழ்ச்சிகள்.  பல சம்பவங்கள். எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் எதாவது கிடைக்கும்.

ஜெகன் : உண்மைதான். ஆனால் படிக்கும்போது நம்புவது கடினம்.

அழகியசிங்கர் : இந்தப் பிரதியில் நான் ஒரு இடத்தில் படித்தேன்.  சித்ரா என்ற கதாபாத்திரம் விமல் என்ற கதாபாத்திரத்துடன் பேசுகிற மாதிரி.  உண்மையில் சித்ரா ஒரு ஆவி உலகத்தில் நடமாடும் கதாபாத்திரம்.

மோகினி : இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது.

அழகியசிங்கர் : சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்த டேவிட் என்ற படத்தைப் பார்த்தேன்.  விக்ரமுடன் அவர் அப்பா பேசுவதுபோல் பல காட்சிகள் வருகின்றன.  ஆனால் டேவிட் அப்பா உயிருடன் இல்லை.  இது ஒரு சர்ரியலிஸ படமாக இருக்கும்போது தோன்றுகிறது.  அதே போல் யதி ஒரு சர்ரியலிஸ நாவலாக இருக்கும். பல நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட நாவல்,

ஜெகன் : இதில் இடாகினிப் பேயெல்லாம் வருகிறது.  அதை இரண்டாவது பையன் வினய்தான் தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறான்.

மோகினி : சித்ராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தபின் கல்யாணத்திற்கு முதல் நாள் வினோத் காணாமல் போய்விடுகிறான்.  சித்ரா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  ஆவி ரூபத்தில் அவனைப் பழி வாங்க நினைக்கிறாள். அவன் அண்ணன் வினய் மூலமாக முயற்சி செய்து பார்க்கிறாள்.  

ஜெகன் : நாவல் முடிவில் நால்வரும் அவர்கள் அம்மாவிற்குப் பிறந்தவர்கள் இல்லை என்பதுபோல் வருகிறது.

மோகினி : எல்லாம் பூடகமாகக் கொண்டு போயிருக்கிறார்.  கடைசி வரை அவர்கள் அம்மா  தன் பிள்ளைகளிடம் நீங்கள் என் பிள்ளைகளென்று சொல்லவில்லை.  

ஜெகன் : இந்த இடத்தில் இந்தப் பிரதியில் இப்படி வருகிறது எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்?  ஏதோ ஒரு பெண் வடிவிலிருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம்.  ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம் என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான்.

மோகினி : அதேபோல் இன்னொன்றைச் சொல்லவேண்டும். அம்மாவின் அப்பா காலராவில் இறந்து போன நிகழ்ச்சியும் வருகிறது. 

அழகியசிங்கர் : இதை இன்னொரு முறை படித்தால்தான் புரியும்.  படிப்பதுகூட அங்கங்கே பக்கங்களைப் புரட்டிக்கொண்டு படிக்கலாம். எனக்கு என்னவோ எதைத் தேடிக்கொண்டு போனார்களோ அது நால்வர்களுக்கும் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. சொறி முத்து சித்தர் என்ற கதாபாத்திரம் விசித்திரமாக இருக்கிறது. அம்மாவின் மரணத்தில் பங்குகொள்ள மூத்த அண்ணன் கூட நாய் ரூபத்தில் வந்து விடுகிறான். படித்த திருப்தியை உண்டாக்கிய நாவல்.

Comments