துளி : 121
இன்று கடுகு இறந்து விட்டதாக திருப்பூர் கிருஷ்ணன்
சமீபத்தில் கமலாவும் நானும் என்ற கடுகுவின் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்து வந்தேன். நான் நூலகத்திலிருந்து போய் புத்தகம் எடுப்பேனே தவிர, உடனே புத்தகம் படித்து விடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்.
பொதுவாக நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து வருவதற்குக் காரணம் தொடர்பு விட்டுப் போகம லிருப்பதற்குத்தான் . 'கடுகு' புத்தகத்தோடு இன்னும் இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்தேன். ஒன்று 'தேவன்' எழுதிய 'கோமதியின் காதலன்' இன்னொன்று 'சுஜாதா' எழுதிய 'உள்ளம் துறந்தவன்.'
மூன்று புத்தகங்களையும் நூல் நிலையத்திற்கு எடுத்துக் கொண்டு போவேன். திரும்பவும் புதுப்பித்துக்கொண்டு எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்.
வாரத்தில் ஒருநாள் நூலகத்திலிருந்து எடுத்து வருகிற புத்தகங்களைக் கொஞ்சமாவது படித்து விடுவது என்று நினைத்துக் கொள்வேன். அத்துடன் சரி.
கடுகு மரணமடைந்த செய்தியை அறிந்தவுடன் அவருடைய புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டேன். கொஞ்சமாவது படிக்கலாமென்ற எண்ணத்தில்.
ஜே.எஸ். ராகவன் என்ற எழுத்தாளர் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் தொடர்ந்து நகைச்சுவை கட்டுரை எழுதுவார். நான் ஒவ்வொருமுறை மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையைப் பார்க்கும்போது அவருடைய கட்டுரையைக் கட்டாயம் வாசிப்பேன் .
என் பத்திரிகையில் அவருடைய கட்டுரை ஒன்றையும் பிரசுரம் செய்தேன். ஏன் என்றால் சிறுபத்திரிக்கை என்றால் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு படிக்கக் கூடாது என்ற எண்ணத்தால்தான் ராகவன் கட்டுரையைப் பிரசுரம் செய்தேன்.
அந்தத் தருணத்தில்தான் நூல்நிலையத்தில் கடுகுவைக் கண்டு பிடித்தேன். அசந்து விட்டேன். அவர் எழுத்துக்களை விருட்சத்தில் கொண்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. அவர் எழுத்துக்களைப் படிக்கும்போது எல்லாவற்றையும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகிற தன்மை தெரிந்தது.
புத்தக என்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார். இசை விமர்சகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசம் உண்டு. பாடத் தெரிந்தவன் பாடுகிறான். பாடத் தெரியாதவன் விமர்சகனாகிறான். இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சற்று மாற்றிச் சொல்கிறார்கள் எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான். எழுதத் தெரியாதவன் பிளாக்கைத் துவங்கித் தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான்.(தானே பாராட்டிக்கொள்ளவும் செய்கிறான்).
அவரும் கடுகு தாளிப்பு என்ற பெயரில் ஒரு பிளாக்கைத் துவங்கி இந்த மூன்றையும் இல்லை இல்லை முதல் இரண்டைச் செய்து வந்து கொண்டிருக்கிறார்.
கடுகு மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு கட்டுரைகளை உடனே படித்துவிட்டேன். ஒன்று பாரதி ராஜாவைப் பற்றியது. இன்னொன்று ஆர்.கே நாராயணன் பற்றியது.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னும் எழுதலாமென்று நினைக்கிறேன்.
Comments