Skip to main content

கேட்டாலும் சொல்ல மாட்டேன்.....


அழகியசிங்கர்




தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார்.  "எவ்வளவு இன்று விற்றது?" இதற்கு என் பதில் மௌனம்...பலத்த மௌனம்.  எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன்.  அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன்.  இதுவரை சொல்லவில்லை.  ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை.   ஆனால் அது தெரிந்து விடுகிறது.  என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன.

ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம்.  அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள்.

இதில் என்ன ஜென் தத்துவம்.  இனிமேல்தான் இருக்கிறது.
என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும்,  இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள்.

உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன.  வெளியே நாங்கள் இருக்கிறோம்.   சிலர் புத்தகங்களுடன் வெளியே செல்கிறார்கள்.  சிலர் வெறுமனே செல்கிறார்கள்.

நானும் நண்பரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு டீ அருந்திக்கொண்டிருக்கிறோம்..  இன்னும் சில மணி நேரம் கழித்தும் டீ அருந்திக்கொண்டிருக்கிறோம். டேபிளில் பில் புக் இருக்கிறது..பேனா இருக்கிறது.  நாங்கள் டீ அருந்திக் கொண்டிருக்கிறோம்.  

கேட்டாலும் சொல்ல மாட்டேன் எவ்வளவு விற்றது என்று.  இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.  மனைவியிடம் சொன்னால் போதும் நிம்மதி போய் விடும். 
 

Comments