அழகியசிங்கர்
என்னுடைய கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன்.
இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன்.
பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன்.
ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான். முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை. எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார். அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும்.
அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால் என்னைப் பார்த்து முடிந்தால் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடவும்.
ஒருவர் மாத்திரம் திரும்பத் திரும்ப அவர் கதைகளைப் படித்துக்கொண்டிருப்ôர். அவர் வேற யாருமில்லை நான்தான். நான் பலவிதமாக கதைகள் எழுதியிருக்கிறேன். கதையே இல்லை என்பதுபோல் கதை எழுதியிருக்கிறேன்.
என் கதைகளைப் பற்றி ரைட்டர்ஸ் கேப்பில் சாருநிவேதிதா 50 நிமிடங்களுக்கு மேல் பேசி உள்ளார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக நான் நினைக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பேசினார்கள். பழுப்பு நிறப்பக்கங்கள் என்ற பெயரில் சாருநிவேதிதா பல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி உள்ளார். ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவும்.
Comments