அழகியசிங்கர்
4வது சென்னை புத்தகத் திருவிழா ஒய்எம்சிஏ ராயப்பேட்டை மைதானத்தில் நாளையிலிருந்து துவங்குகிறது. நேற்று ஸ்டால் எண் என்ன கிடைக்குமென்று அமர்ந்திருந்தேன். முக்கியமாக முதல் வரிசைதான் கிடைக்குமென்று என் மனதில் பட்டது. ஆனால் முதல் வரிசையில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். இல்லாவிட்டால் 5 கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் 11ஆம் எண் கிடைத்தது. இது ஒருவிதத்தில் நல்லது. ஏன் எனில் வருபவர்கள் நடந்து வரும்போது ஒன்றை விட்டுவிடுவார்கள். 11 வரும்போது மேலே பார்ப்பார்கள். விருட்சம் வெளியீடு என்று இருந்தால், உள்ளே நுழைந்தாலும் நுழைவார்கள்.
ஆனால் நாளை மதியம்தான் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகப் போகிறேன். அதாவது கிட்டத்தட்ட 11 அல்லது 12 மணி அளவில். 8 அட்டைப் பெட்டிகள் தயாரித்து விட்டேன். எல்லாப் புத்தகங்களிலும் ஐந்து விதம் அடுக்கி விட்டேன். மொத்தம் 400 புத்தகங்கள்தான். சந்தியா, கிழக்கு, ஆனந்தவிகடன், நக்கீரன் சாகித்திய அக்காதெமி புத்தகங்களை வாங்கி விற்க உள்ளேன். நான் பதிப்பாளன் கம் விற்பனையாளன். நஷ்டம் வந்தால் ஏழுமலையான் உண்டியலில் போட்டதாக நினைப்பேன். லாபம் வந்தால் ஏழுமலையான் கொடுத்ததாக நினைத்துக்கொள்வேன்.
Comments