அவ்வளவுதான்
அழகியசிங்கர்
என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் அடுத்தப் புத்தகம் படிப்பதற்குத் தயாராக இருக்கிறது. புத்தகங்கள் அதிகமாக இருக்கின்றன. படிப்பது குறைவாக இருக்கிறது.
ஒரு புத்தகம் படித்தவுடன் எனக்கு சில தினங்களுக்குள் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். படித்தப் புத்தகத்தைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் நான் படித்தது மறந்து போய்விடும்.
இந்தக் காரணத்திற்காக நான் முகநூலில் புத்தகங்கள் பற்றி எழுதி விடுகிறேன். என் பிளாகிலும் பதிவு செய்து விடுகிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இதைச் செய்கிறேன்.
இதையெல்லாம் தொகுத்து நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளேன். இரண்டு தொகுதிகளிலும் 41 புத்தகங்களைப் பற்றி எழுதி உள்ளேன். 6000 பக்கங்கள் வரை படித்திருக்கிறேன்.
என் ஆரம்ப காலத்தில் நான் பல புத்தகங்களில் கோடுகள் போட்டிருப்பேன். இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக கோடு போட்டேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அந்தப் புத்தகங்களில் கோடு போட்டு படித்திருக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படாமல் இல்லை. என்ன படித்ததேன் என்பது ஞாபகத்தில் இல்லை.
என் புத்தகங்களைப் படித்து யாராவது அதில் குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கினால் என் முயற்சி வெற்றி அடைந்ததாக நினைப்பேன். அப்படி இல்லாவிட்டால் என் வரைக்கும் என் முயற்சி வெற்றி என்று நினைத்துக்கொள்வேன்.
இதைப் படித்துவிட்டு நான் எப்போதும் புத்தகமே படித்துக்கொண்டிருக்கும் புத்தகப் புழு என்று நினைத்தால் அதுவும் தவறானது. எதுவும் படிக்காமல் பல நாட்களைக் கழித்திருக்கிறேன்.
புத்தகம் படிப்பது என்பது ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை நாம் நுகரும்போது நம்முடைய வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
Comments