Skip to main content

ஒரு மேதையின் ஆளுமை

அழகியசிங்கர்





புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை.

புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஒரு மேதையின் ஆளுமை.'

சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார்.

பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந்த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார்.

அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங்களை எடுத்துக் கொண்டு போகும்போது தவறி கீழே சைக்கிளைப் போட்டுவிட்டார். எல்லா ஃபாரங்களும் கீழே விழுந்து டைப்ஸ் உதிர்ந்துவிட்டன். அதை என்னிடம் அவர் சொன்னபோது கேட்பதற்கு வருத்தமாக இருந்தது.

பொன் விஜயன் ஒரு நாவலாசிரியர், கவிஞர். பிடிவாதமாக சில கருத்துக்களை வைத்தக்கொண்டு மாற்றிக்கொள்ள மாட்டார். அவர் கொண்டு வந்த புத்தகம்தான் ஒரு மேதையின் ஆளுமை.

சமீபத்தில் நான் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது. அதில் நான் மொழி பெயர்த்த அபுர சன்சார் என்கிற சத்யஜித்ராயின் திரைக் கதையைக் கண்டு பிடித்தேன். எனக்கு எல்லாம் மறந்தே விட்டது. அதை அப்படியே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 80 பக்கங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

சாமான்ய மனிதர்களில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு சினிமா படங்கள் எடுத்தவர் சத்யஜித்ராய். (ரா வா ரேவா தெரியவில்லை). மரணம் அடிக்கடி அவர் படத்தில் குறுக்கிடும். பிரிவு தாங்க முடியாமல் இருக்கும்.

அபுர் சன்ஸôர் திரைக் கதையிலும் மரணம் குறுக்கிடுகிறது. அந்த மரணத்தால் ஏற்படும் விளைவுகளையும் நெகிழ்வுடன் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.

Comments