Skip to main content

நீல. பத்மநாபனின் 'சிந்தை முட்கள்'

நீல. பத்மநாபனின்  'சிந்தை முட்கள்'


அழகியசிங்கர்இந்த ஆண்டு நான் கொண்டு வந்த மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள்.  ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் என்று நம்புவர்களும் உண்டு.

நான் ஆரம்பத்தில் அவருடைய சில நாவல்களைப் படித்திருக்கிறேன்.  பள்ளிக்கொண்டபுரம் என்பது ஒரு நாவல்.  இன்னொரு நாவல் பைல்கள்.  பைல்கள் நாவல் என்று சொல்வதைவிட ஒரு நீண்ட குறுநாவல் என்று கூட சொல்லலாம்.  ஆனால் நீல பத்மநாபன் எழுத்து காலத்திலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார்.  இதை முதலில் நான் நம்ப மறுத்தேன்.  பின் அவருடைய கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா நீல பத்மநாபன் கவிதைகள் என்று கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  

ரொம்ப நாட்கள் கழித்துதான் அவர் கவிஞர் என்பதை அறிவேன்.  அவருடைய கவிதைத் தொகுதிகள் மூன்றை விருட்சம் வெளியீடாக நானே கொண்டு வந்துள்ளேன்.  சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம்.  கிட்டத்தட்ட 39 கவிதைகள் கொண்ட சிந்தை முட்கள் என்ற கவிதைத் தொகுதி.  கவிதைகள் மூலம் தன் இயலாமையை ஆவேசத்தை நீல பத்மநாபன் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்.  

நம் வாழ்க்கையில் நாம் நினைப்பதுபோல் எதுவும் நடப்பதில்லை.  சிலசமயம் பாதகமாகக் கூட எதாவது நடந்து விடும். என் விஷயத்தில் பாதகமாக நடந்த பல விஷயங்கள் சிலசமயம் நன்மையாக முடிந்து விடும்.  ஒரு புத்தகக் காட்சியின் போது பாதகமான நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது.  மயிலாடுதுறையிலிருந்து பொங்கல் போது வந்த ஒரு டீலக்ஸ் பஸ் முதலைப் பண்ணை என்ற இடத்தில் விபத்தில் சிக்கிக்கொண்டது.  அந்த வண்டி காலை நேரம் மூன்று மணிக்குக் கிளம்பி வந்திருக்கிறது.  டிரைவர் அசதியில் சற்று தூங்கி விட்டார்.  வண்டி ஓரமாக உள்ள ஒரு மின்சாரகம்பத்தில் மோதி விட்டது.  அதன் பலன் ஒரு கீளினரின் கால்கள் போய்விட்டன.  ஒரு இன்ஜினியர் பாண்டிச்சேரியில் ஏறியவர் இறந்து விட்டார்.  அந்த வண்டியில் வந்த என் பெண் கெட்டிக்காரத்தனமாய் தன் ஒரு வயது நிரம்பிய என் பேத்தியை இறுகக் கட்டிக்கொண்டாள்.  அதனால் அவளுக்கு மூக்கில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.  என் மாப்பிள்ளைக்கு ஒன்றும் ஆகவில்லை.  

அன்று புத்தகக் காட்சிக்கு நான் செல்லவேண்டும்.  நான் லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்ததால் நான் போய்ப் பார்க்கவில்லை என்றால் எல்லாம் குழப்பமாகிவிடும்.  ஏன்என்றால் எனக்கு உதவி செய்ய யாருமில்லை.

அந்தச் சமயத்தில் ரா ஸ்ரீனிவாஸன் என்ற என் நண்பரும், லதா ராமகிருஷ்ணனும்தான் கடையைப் பார்த்துக்கொண்டார்கள்.  என் பெண்ணை உடனே மலர் மருத்துவமனையில் சேர்த்து மூக்கில் எலும்பு முறிவுக்கான சின்ன அறுவைச் சிகிச்சையைச் செய்யும்படி ஆகிவிட்டது. 

அந்த ஒருநாள் புத்தகக் காட்சியில் என் ஸ்டாலைப் பார்த்துக் கொண்டிருந்த ரா ஸ்ரீயும், லதா ராமகிருஷ்ணனும் ஒரு புத்தகம் கூட விற்கவில்லை என்றார்கள்.  அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  

அந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பினார்கள் என் பெண் குடும்பத்தினர்.  அதன்பின் பெண்ணிற்கு பஸ்ஸில் செல்வதே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.  என் பேத்தி என் மூக்கில் போட்டிருந்த பேன்டேஜ்ஜைப் பார்த்து அழுதது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஒரு புத்தகக் காட்சி சில தினங்கள் என்றுதான் நாம் நினைக்கிறோம்.  ஆனால் அதைக் கடப்பதற்குள் பல பதட்டங்கள் நடந்து விடும்.  அதனால்தான் நம்மை மீறிய ஒரு சக்தியை நினைத்து நாம் வணங்காமல் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

நீல பத்மநாபன் கவிதைகளைப் படிக்கும்போது ஒருவித ஆவேசம் வெளிப்படும்.  நம் வாழ்க்கையில் நடக்காத சின்ன சின்ன விஷயங்களைக் குறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடியவராக எனக்கு நீல பத்மநாபன் தெரியவருகிறார்.

சிந்தை முட்கள் என்ற இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படியாக உள்ளன. அதிலிருந்து ஒரு நீண்ட கவிதையை இங்கு தர விரும்புகிறேன். சரியா?

துளஸி

புதுவீடு கட்டி மனைவி மக்களுடன்
குடிவந்து சில நாட்களில்
முற்றத்து சிமெண்ட் தரையில்
பூ ஜாடியொன்று வாங்கி வந்து
உன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன்
வளர்த்தத் துவங்கினாள் வீட்டுக்காரி.
பெரிய ஈடுபாடில்லாதிருந்தும்
கொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை...
காலைக் குளியலின் புத்துணர்ச்சியில்
பக்திப்பரவசத்துடன் முற்றத்தில் வந்து
நீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும்
குங்கும பொட்டிட்டு இறை துதிகள்
ஜபித்தவாறு கண்மூடி நின்று உன்னையும்
எதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை
வாரி இறைக்கும் பால சூரியனையும்
நமஸ்கரிக்கும் பொழுதுகள்...
விசேஷ தினங்களில் ஊதுவத்திப்புகையாலும்
கற்பூர ஆரவத்தியாலும் சேவை...
இப்போ சில நாட்களாக மேல் சன் ஷேடில்
குடியேறிய புறாக்களின் கும்மாளம்
கும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த
எச்சாபிஷேகத்தில் வெகுண்டு
கிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே
தருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா
கவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில்
உன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது
உனை சேவிப்பதலிருந்த பழைய வேகம்
மெல்ல குறைவது தெரிந்தது...
அதோடு குழந்தைகள் கூட கொஞ்ச நாட்கள்
இருந்துவிட்டு வர அவள் வெளியூர் பயணம்...
முதலில் சில நாட்கள் அலட்டிக்கொள்ளாத நெஞ்சம்...
நாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்...
உன் தனிமையும் சேர்ந்து கொண்டபோது...
உள்ளுக்குள் என்னமோ ஒரு...
சொல்லத்தெரியவில்லை...
வெயிலில் நீ வாடி வதங்கி நிறைபதைக் காணும்போது...
சகிக்கமுடியா மன அவசம்...
இப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்
பூஜை அறை புகும் முன்
ஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது
இந்நாள் வரை வேறு யாரிடமிருந்தும்
கிடைத்தறியா ஒட்டுணர்வு...

78பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ 60 தான்.  புத்தகக் காட்சியில் உள்ள 600வது ஸ்டாலில் வந்திருந்து இக் கவிதைத் தொகுதியை வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்.  அல்லது 9444113205, 9176613205 என்ற என் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments