Skip to main content

புத்தாண்டு கவிதைகளும் புனிதமில்லா கவிதைகளும்.....


அழகியசிங்கர்


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து ஒரு கவிதை அனுப்பினார்.  போனில் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை அனுப்பி உள்ளேன் என்றார்.  நான் படிக்கவே இல்லை.  சிறிது நேரம் கழித்து, 'நீங்கள் படிக்கவில்லையா?' என்று கேட்டார்.  'இல்லை,' என்றேன்.  'ஏன்?' என்று கேட்டார்.  'அதெல்லாம் சரியாக வராது,' என்றேன்.  நண்பருக்கு என் மேல் வருத்தம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவர் மனம் நோகக்கூடாது என்று அந்தக் கவிதையை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.  நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கவிதை இருந்தது. 

அதேபோல் கல்யாணத்திற்கு, கவிதை எழுதுபவர் போனார்  என்றால் ஒரு கவிதை எழுதி கண்ணாடிச் சட்டம் போட்டு கவிதையை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார்.  அதைப் போல் அபத்தம் எதுவுமில்லை என்று கவிதை எழுதுபவருக்கு ஏனோ தெரிவதில்லை. மேலும் கவிதை யார் மீது எழுதப்பட்டிருக்கிறதோ அவர் சிறிதும் ரசனை இல்லாதவராக இருந்தால் பெரிய ஆபத்து.  இன்னும் சிலர் யாராவது மரணம் அடைந்துவிட்டால் உடனே ஒரு துக்கக் கவிதை எழுதி விடுவார். பண்டிகைகளை முன்னிட்டு எத்தனைபேர்கள் எத்தனை விதமாய் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  கவிதையைக் கிண்டல் செய்வதோடல்லாமல் பண்டிகைகளையும் கிண்டலடிக்கிறார் என்பது ஏனோ தெரிவதில்லை.  

அப்படியென்றால் கவிதை என்றால் எதை வைத்துக்கொண்டுதான் எழுதுவது என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

உங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள்.  தானாகவே கவிதை வரும். முன்பெல்லாம் பட்டிமன்றத்தில் ஒரு தலைப்பு கொடுத்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள்.  பெரும்பாலும் கல்லூரிகளில் இந்த அபத்தம் நடைபெறும்.  அப்படி பட்டிமன்ற கவிதை வாசிப்பு இப்போது போன இடம் தெரியவில்லை.  சரி நான் புத்தாண்டை ஒட்டி சில கவிதைகளை எழுத முயற்சி செய்கிறேன்.  சரியாக வருகிறதா என்று பார்க்கலாம்.

கவிதை 1

புத்தாண்டு தினமே
வருக வருக 
நீவிர் வந்த வேளை
எங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டரில் 
கேஸ் இல்லை
ஞாயிற்றுக்கிழமை வேறு
தஞ்சாவூர் மெஸ்ஸிற்குப் போகவேண்டும்
அத்தனைப் பேருக்கும் சாப்பாடு வாங்க..

கவிதை 2

எங்கள் தெருவில்
இரவு பன்னிரண்டு வரைக்கும் காத்திருந்தார்கள்
ஹோ என்று சத்தம் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்கள்
சிலர் கோலம் போட்டுக்கொண்டிருந்தாரகள்
முள் பன்னிரண்டைத் தொட்டவுடன்
படபடவென்று பட்டாசு வெடித்துத் தள்ளினார்கள்
புத்தாண்டு வந்து விட்டதாக கூக்குரலிட்டார்கள்
என் தூக்கம் கெட்டது

கவிதை 3

புத்தாண்டில் நான் மாற விரும்புகிறேன்
தினமும் டைரி எழுத விரும்புகிறேன்
காலையில் வாக் செய்து என் டயப்படிக்கை
குறைக்க விரும்புகிறேன்
குறைவாக சாப்பிட விரும்புகிறேன்.
யாருடனும் அளவாய் பேச விரும்புகிறேன்
சரி சரி அளக்காதே

என் நண்பர் ஒருவருக்கு திருமணம்.  அவருக்கு நான் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்.

கவிதை 1

நீ கையைப் பிடிக்கும் பெண்ணின் பொருட்டு
சொல்கிறேன்
திருமணத்திற்குப் பிறகாவது
நீ திருந்தி வாழ முயற்சி செய்
உன்னைப் பற்றி ஜம்பம் 
அடித்துக்கொள்ளாதே
குடிக்காதே
சிகரெட் பிடிக்காதே
அவ்வாறெல்லாம் செய்யாமல் இருந்தால்
உன்னை விட்டு அந்தப் பெண் போய்விடுவாள்
உனக்கு என் கல்யாண வாழ்த்துகள்

மணமகள் எனக்குத் தெரிந்தவர்.  அவருக்கு என் வாழ்த்துகள்.

கவிதை 2
நான் எழுதும் கவிதை இது
சீர்காழியில் உன்னைப் பார்த்தபோது
எளிமையின் வடிவமாய் இருந்தாய்
ஆலப்புழை மாற்றல் பெற்று
நீ சென்றபின் 
என்னை அழைப்பாய் என்று நினைத்தபோது
உன் கல்யாணப் பத்திரிகை வந்து சேர்ந்தது
எங்கிருந்தாலும் நீ வாழ்க

உண்மை கவிதைகள் மேலே குறிபப்பிட்டபடி இருக்கலாம்.  ஆனால் பொய்யாக கண்ணாடியில் சட்டமிட்ட கவிதைகளை மணமகனுக்கோ மணமகளுக்கோ ஆஹா ஓஹோவென்று எழுதப்பட்டிருக்கலாம். 

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், காரணத்தை வைத்து கவிதைகள் எழுதுவதை விட்டுவிடுங்கள் என்பதற்காகத்தான்.





Comments