அழகியசிங்கர்
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது என் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்பின் அடுத்த ஆண்டுதான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். என் புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களைப் பார்த்துக் கேட்பேன் :
'எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்?' என்று.
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள். நானும் ஒரு பைத்தியம். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.
சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா? நிச்சயமாக இல்லை. புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு. போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா? என்று. யாரும் படித்து விட்டேன் என்று சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் படித்து விட்டேன். இன்னும் படிக்க வேண்டும் என்பார்கள். இன்னும் சிலரோ இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். பெரும்பாலோர் நேரம் கிடைப்பதில்லை என்றுதான் சொல்வார்கள்.
பெரும்பாலோர் அவர்களுக்குப் பிடித்தப் புத்தகங்களைத்தான் வாங்குவார்கள். ஆனால் படிப்பதில் ஏனோ ஒருவிதத் தயக்கம் அல்லது வேகம் இல்லாமல் போவது ஏன்?
அதனால் கீழ்க்கண்ட அறிவுரைகளை புத்தகம் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் (எனக்கும் இந்த அறிவுரைகளைச் சொல்லிக்கொள்கிறேன்) :
1. நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை உங்கள் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருங்கள். நீங்கள் எடுத்துப்
படிக்கிறீர்களோ இல்லையோ உங்கள் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
2. நீங்கள் கவிதைப் புத்தகங்களை விரும்புகிறவர்களாக இருந்தால், முதலில் கவிதைப் புத்தகங்களை எடுத்து வாசித்துவிடுங்கள். ஒரு மாதத்தில் நீங்கள் 4 அல்லது 5 கவிதைப் புத்தகங்களைப் படித்துவிடலாம்.
3. நீங்கள் அலுவலகம் போவராக இருந்தால், அலுவலகம் போகும்போது கிடைக்கும் நேரத்தில் படிக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மட்டும் புத்தகத்தை எடுத்தப் படித்து விடாதீர்கள். உங்களை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
4. என்னைப் போல வீட்டில் சும்மா இருப்பவராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தைப் படிப்பது என்று தீர்மானமாக இருங்கள்.
5. தேர்வு எழுதும்போது எப்படி மாணவர்கள் முனைப்புடன் செயல்படுகிறார்களோ அதேபோல் புத்தகம் படிப்பதிலும் முனைப்புடன் செயல்படுங்கள்.
6. உங்கள் எழுத்தாள நண்பர்கள் யாராவது உங்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் நீங்கள் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் புத்தகங்களை உடனடியாகப் படித்து விடுங்கள். அபிப்பிராயமும் சொல்லிவிடுங்கள். ஒருவர் முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று இதை சொல்கிறேன். நான் அதுமாதிரி என் கதைப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன்.
7. வேலைக்குப் போகிறவர்கள் சனி, ஞாயிறுகளில் நிறையா நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் புத்தகங்களைப் படித்து விடலாம்.
8. புத்தகம் படிக்க நீங்கள் ஒரு தீர்மானம் வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு புத்தகம் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற தீர்மானம்தான் அது. அந்தத் தீர்மானத்துடன் புத்தகத்தைப் படித்தீர்கள் என்றால், புத்தகத்திலேயே தேதியைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
9. தயவுசெய்து நீங்கள் படித்தப் புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள். இரவல் கொடுத்தால் உங்களுக்குத் திரும்பவும் புத்தகம் கிடைக்காது. மேலும் அப் புத்தகத்தை அவர்கள் வாங்கி வைத்துக்கொள்வார்களே தவிர, படிக்க மாட்டார்கள். தி ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவலை அப்படித்தான் இரவல் கொடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய முயற்சி செய்து அந்தப் புத்தகத்தை மீட்டேன். அப் புத்தகம் ரொம்பவும் மோசமான நிலையில் கிடைத்தது.
10. நீங்கள் வாங்கிப் படிக்கும் புத்தகத்தைப் படித்தவுடன் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் அது குறித்து எந்த அபிப்பிராயத்தையும் வெளியே பிறர் காதுபடி சொல்லாதீர்கள். அப்படிச் சொல்வது எழுதுபவர்களுக்குத் துன்பத்தைத் தரும். அதேபோல் ஒரு புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், மனம் திறந்து பாராட்டுங்கள்.
11. ஒரு புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படிக்கமுடியாவிட்டால் கவலைப் படாதீர்கள். அடுத்தப் புத்தகக் காட்சியிலும் புத்தகம் வாங்குவதைத் தவிர்க்காதீர்கள். புத்தகத்தைச் சேகரிப்பது வேறு, புத்தகம் படிப்பது வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் எதாவது உங்களுக்குத் தோன்றினால் குறிப்பிட வேண்டுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.
Comments