Skip to main content

மூன்று தொகுப்பு நூல்களும், முன்னூறு யோசனைகளும்



அழகியசிங்கர் 



சில மாதங்களுக்கு முன்னால் நான் சி சு செல்லப்பாவின் புதல்வரைச் சந்தித்தேன். அவரிடம் எழுத்து பழைய இதழ்கள் கிடைக்குமா என்று கேட்டேன்.  அவர் இல்லை என்று சொன்னார்.  இன்னொரு தகவலும் சொன்னார்.  'நானும் அப்பாவும் சேர்ந்து அப்பவே எழுத்து பழைய இதழ்களை பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,' என்றார். எனக்கு அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  ஆனால் வேறு வழி இல்லை.  இப்போதும் எழுத்து பழைய இதழ்களை வாங்க பலர் இருப்பார்கள்.  ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்போது வந்து வாங்கப் போகிறார்கள் என்பது தெரியாது. 
இதேபோல் விருட்சம் பழைய இதழ்கள் என்னிடமும் அதிகமாக உள்ளன.  புத்தகக் காட்சியில் விற்க முயலாம்.  ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இதெல்லாம் சாத்தியம் என்பது தெரியவில்லை.  நானும் எதாவது ஒரு பேப்பர் கடையைத் தேடிப் போக வேண்டிவரும்.  விருட்சம் இதழ்கள் மட்டுமல்லாமல் தெரியாமல் அதிகமாக அச்சடித்தப் புத்தகங்களுக்கும் எதாவது வழி செய்ய வேண்டும். 
சிறுபத்திரிகையெல்லாம் கொஞ்சமாகத்தான் அச்சடிக்கிறோம். கொஞ்சம் பேர்களுக்குத்தான் அனுப்புகிறோம்.  ஆனாலும் மீந்தி விடுகின்றன.  என்ன செய்வது?  அவ்வளவு சரியாக கணக்குப் போட்டு பத்திரிகையை அடிக்க முடியவில்லை.  புத்தகங்களைக் கொண்டு வர முடியவில்லை.
பழைய பேப்பர் கடையில் எழுத்து இதழ்களைப் போட்டுவிட்டேன் என்று சொன்னபோது சி சு செல்லப்பாவின் புதல்வருக்கு வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை.  ஒரு வழியாக நம்மை விட்டுப் போய்விட்டது என்ற நிம்மதிதான் அவர் பேச்சில் தென்பட்டது.  அது நியாயமாகக் கூட எனக்குப் பட்டது.  
ஒரு விதத்தில் யோசித்துப் பார்த்தால் வாசகர்கள்தான் இதெல்லாம் தீர்மானிப்பதாகத் தோன்றுகிறது.  எத்தனைப் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்பதை வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.  அதை மீறி நாம் அச்சடித்தால் வைத்திருக்க வேண்டியது.  இன்னொரு விஷயம் எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பது.  அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது புரியவில்லை.
குறைவாகவே அச்சடிப்போம். குறைவாகவே வினியோகிப்போம்.  இன்னும் கேட்டால் இன்னும் அச்சடிப்போம்.  

                                                                                  ***************

ழ என்ற சிற்றேடு நின்று போனபிறகு ஆரம்பித்தப் பத்திரிகைதான் விருட்சம்.   ழ பத்திரிகையிலிருந்து கவிதைகளைத் தொகுத்து முழுத் தொகுப்பு கொண்டு வர நினைத்தேன்.  முழுதாக தொகுப்பது சாத்தியமில்லை என்பதால், 48 கவிஞர்களின் தொகுப்பாகக் கொண்டு வந்தேன்.  1990ல் வெளிவந்த தொகுப்புநூலை திரும்பவும் இரண்டாவது பதிப்பாக 2013ல் அச்சடித்தேன். முதல் பதிப்பு 1990ல்  அச்சடித்திருந்தேன். புத்தகம் உள்ளே ழ இதழ்களின் அட்டைப்படங்களைக் கொண்டு வந்தேன்.  300 பிரதிகள் அச்சடித்துவிட்டேன். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100. இதோ 3 வருடங்கள் ஓடிவிட்டன.  அதிலிருந்து ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.  


நகுலன்
வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை.  சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை.  நவீனன்
விருப்பப்படி அவன் இறந்தபிறகு அவன்
பிரேததத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்து விட்டார்கள்.  எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.

ழ கவிதைகள் தொடர்ந்து நான் கொண்டு வந்த இன்னொரு தொகுப்பு நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 1. 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தொகுப்பிற்குப் பிறகு இரண்டாம் பதிவாக 2006ல் வெளிவந்துள்ளது.  இதோ 11 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இதோ இன்னும் புத்தகப் பிரதிகள் இருந்துகொண்டே இருக்கின்றன.  எப்போது பேப்பர் கடையில் போடலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  1988 ஆம் ஆண்டிலிருந்து 1993ஆண்டு வரை விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது.  94 கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகள் கொண்ட கவிதை நூல் இது. விலை ரூ.120.  பல அற்புதமான கவிதைகள் கொண்ட நூல் இது.

பிரமிள் 
தவளைக் கவிதை

தனக்குப் புத்தி
நூறு என்றது
மீன் -
பிடித்துக் கோர்த்தேன்
ஈர்க்கில்.
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது
ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
'எனக்குப் புத்தி
ஒன்றே'
என்றது தவளை
எட்டிப் பிடித்தேன்
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -
நூறு புத்தரே
கோர்த்தரே 
ஆயிரம் புத்தரே
மல்லாத்தரே
கல்லேத்தரே
ஒரு புத்தரே
தத்தரே
பித்தரே

என்னுடைய மூண்றாவது தொகுதி நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 2. இதிலும் 93 கவிஞர்களின் 100 கவிதைகளுக்கு மேல் உள்ள கவிதைகள் உள்ளன.  விலை ரூ.100. 1993-1998 வரை விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல்.  2007 ஆம் ஆண்டு முதல் பதிப்பு மட்டும் வந்துள்ளது.  இதோ பத்து வருடங்கள் ஆகிவிட்டன.  என் இருப்பிடத்தை விட்டுப் பிரிய மனமில்ûலாமல் பிரதிகள் இருக்கின்றன.  நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  எப்போது பேப்பர் கடையில் கொண்டு போடுவது என்று.  ஆனால் எனக்கு மனசே வரவில்லை.  அதிலிருந்து ஒரு கவிதை .


ஞானக்கூத்தன்


குதிரை


   மரத்துக்குக் கீழே குதிரை
அதற்குக் கொடுக்கப்பட்ட
புல்லைக் குனிந்து குனிந்து
தரையிலேயே தின்றவாறு நிற்க

குதிரைக்குப் பக்கம் இவன் போனான்.
'குதிரை, குதிரை'  என்றான்.
இவனைக் குதிரை கவனிக்காமல்
தன்
பாட்டுக்குப் புல்லைக்  கொரித்தது
மீண்டும் இவன் சொன்னான்
குதிரை, குதிரை, குதிரை'

விட்டது  பட்டென் றொருஉதை
அந்தக் குதிரை
தரையில் உருண்டான்.
அப்பால் ஒருமுறைக்கூட
குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.
'புத்தகங்களை வாங்கி வைக்கிறோம்..படிக்கறோமா' என்ற தலைப்பில் இன்றையக்  கூட்டம்.  விருட்சம் ஸ்டால் எண்.600.  புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.  நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
 


Comments