Skip to main content

வந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்ற புத்தகங்கள்


அழகியசிங்கர்


நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பிக்கும்போதே எனக்கு ஆயிரம் பிரதிகள் அச்சிடுவது என்பது நடுக்கமாக இருக்கும்.  ஆயிரம் சந்தாதார்கள் இல்லை. ஆயிரம் பேர்கள் படிப்பவர்களைக் கண்டுபிடிப்பது வெகு கஷ்டம்.   இத்தனைக்கும் விருட்சம் மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட மிகக் குறைவான விலை கொண்ட பத்திரிகை.  ஒரு கதை ஒரு கவிதை ஒரு கட்டுரை இருக்கும்.  அவ்வளவுதான் பத்திரிகை முடிந்து விடும்.

அதேபோல் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வந்தபோது, எனக்கு அது புது அனுபவம்.  நண்பர்கள் நன்கொடை அளிக்க முதலில் ஒரு கவிதைத் தொகுதியைத்தான் அடித்தேன்.  500 பிரதிகள். 

அந்தக் கவிதைகள் எல்லாம் பிரமாதமாக எழுதப்பட்ட கவிதைகள். இப்போதும் உலகத் தரமான கவிதைகள். அந்தக் கவிஞர் தன்னை எதிலும் முன்னிலைப் படுத்த விரும்பாதவர்.  புத்தக விலையும் மிகக் குறைவு. ஆனால் அதை எனக்கு விளம்பரப்படுத்தத் தெரியவில்லை.  என் கவி நண்பருக்கும் விளம்பரப்படுத்தத் தெரியவில்லை.  ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவில்லை.  பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.  

பல புத்தகப் பிரதிகளை நான் இலவசமாகத்தான் கொடுத்தேன்.  10 ஆண்டுகளுக்கு மேல் அப் புத்தகக் கட்டு என்னிடம் இருந்து என்னை மிரட்டிக்கொண்டிருந்தது.  

சரி, கவிதைதான் போகட்டும்.  ஒரு சிறுகதைத் தொகுப்புக் கொண்டு வரலாமென்று சில கதைகள் என்ற என் குறுநாவல்களைத் தொகுத்துக் கொண்டு வந்தேன்.  பெரும்பாலான என் குறுநாவல்கள் எல்லாம் கணையாழி தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்.   கதைகளும் பரபரப்பாக விற்கவில்லை.  ஆனால் லைப்ரரி ஆர்டர் வந்து தப்பித்துவிட்டது.  ஆனால் கவிதைத் தொகுதிக்கு எப்போதும் அந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. 

சரி தனிப்பட்ட ஒருவரின் கவிதைத் தொகுதியைத்தான் கொண்டு வந்தால் விற்பதில்லை, எல்லார் எழுதிய கவிதைகளையும் கொண்டு வரலாமென்று.  ழ பத்திரிகையிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டு வந்தேன். புதுமாதிரியாக கவிதைத் தொகுதிக்குப் பின் அட்டையில் ஒரு விளம்பரம் வெளியிட்டேன்.  கவிதைத் தொகுதிக்கு ஆகும் செலவை அந்த விளம்பரம் ஏற்றுக்கொண்டது.  முகப்பில் ஆத்மாநாம் ழ என்று வரைந்ததை வைத்தேன். அந்தக் கவிதைத் தொகுதிக்கு விமர்சனங்கள் வந்தன.  பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின.  நெல்லை சு முத்து அந்தப் புத்தகத்தை சிலாகித்து தினமணியில் ஒரு பக்கம் கட்டுரை எழுதியிருந்தார்.  ஆனால் அப்போதும் கூட்டம் போடுவது எப்படி என்று தெரியவில்லை.  ஆனால் அந்தப் புத்தகம் விற்றுவிட்டது.

நான் புத்தகங்களை பல விற்பனையாளர்களுக்கு அனுப்புவேன்.  அவர்கள் புத்தகங்களையும் திருப்பியும் அனுப்ப மாட்டார்கள்.  விற்றும் தர மாட்டார்கள்.  500 பிரதிகள்தான்.

திரும்பவும் புத்தகம் கொண்டு வர நன்கொடை கிடைக்குமா என்று முயற்சி செய்தேன்.  ஏனென்றால் வங்கியில் பணிபுரியும் என் மாதச் சம்பளம் மிகக் குறைவு.  வீட்டில் நான் புத்தகம் போடுகிறேன் பணம் கொடு என்று கேட்டால், நானும் மனைவியும் சேர்ந்து இருக்க முடியாது.  

நன்கொடை கிடைத்தது.  மிகக் குறைவான தொகைதான்.  அந்தத் தொகையுடன் கொஞ்சம் என் பணத்தையும் சேர்த்தால் புத்தகம் உருவாகிவிடும்.  நான் அப்போது ஐராவதம் என்ற என் எழுத்தாள நண்பரின் கட்டுரைகளைத் தொகுத்துக் கொண்டு வரலாமென்று நினைத்தேன்.  அவர் தான் எழுதியதை சேர்த்து வைத்துக்கொள்ளாதவர்.  விட்டேற்றியாக இருப்பவர். என்னால் அந்த முயற்சியை செய்ய முடியவில்லை.  ஆனால் ஞானக்கூத்தன் அவர்களின் கணையாழியில் கவிதைக் குறித்து எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் தொகுத்தேன்.  கவிதைக்காக என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் கொண்டு வந்தேன்.  ஞானக்கூத்தன் எப்போதும் ஒரு புத்தகம் வருகிறதென்றால் ஒத்துழைப்பு கொடுப்பவர்.  

கவிதைக்காக என்ற அந்தப் புத்தகத்தை இன்று கவிதைகள் எழுதும் பலரும் படிக்க வேண்டிய புத்தகம். பல அரிய தகவல்களை எழுதியிருப்பார். உண்மையில் கல்லூரிகளில் பாட நூலில் வைக்க வேண்டிய புத்தகம்.  யாருக்குத்தான் அந்த அருமை தெரியும்.  1000 பிரதிகள் அச்சடித்து விட்டேன். என் வீட்டு பரண்மீது வைத்தேன்.  என் மனம் அந்தக் கட்டுகளைப் பார்க்கும்போது படக் படக்கென்று அடித்துக்கொள்ளும்.  கூடவே வீட்டில் உள்வர்களின் திட்டுக்களும் அந்தக் கட்டுகளும் சேர்ந்து கொள்ளும்.

ராகவன் காலனியில் அப்போது எலிகள் நடமாட்டம் ஜாஸ்தி.  புத்தகத்தின் பைன்டிங்கை ஒரு பதம் பார்த்துவிட்டது.  பல புத்தகப் பிரதிகள் வீணாகப் போய்விட்டன.  ரசமிழந்த கண்ணாடியாகப் புத்தகம் என் கண் முன் தென்பட்டது.  ஆனால் லைப்ரரி ஆர்டர் வந்து புத்தகம் தப்பித்து விட்டது.  பரண் காலியானது.  வீட்டில் உள்ளவர்கள் திட்டுவதைக் குறைத்துக்கொண்டு முணுமுணுக்கும் லெவலுக்குப் போய்விட்டார்கள். 

என் கணக்கு ஆயிரம் ஐந்நூறு என்று ஊசலாடிக்கொண்டிருந்தது.  கவிதை என்றால் ஐந்நூறு கதைப் புத்தகம் என்றால் ஆயிரம்.    என் எழுத்தாள நண்பர்கள் யாரும் நான் புத்தகம் போடுவதற்கு ராயல்டி மாதிரி பணம் தர வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார்கள்.  மேலும் அவர்களாகவே சில சமயம் பணம் கொடுத்து புத்தகம் போட உதவி செய்வார்கள்.  காசியபனின் அசடு புத்தகம் போடும்போது அவராகவே அதற்குப் பணம் கொடுத்து உதவி செய்தார்.  திரும்பவும் ஆயிரம் பிரதிகள்.  திரும்பவும் லைப்ரரி படையெடுபப்பு.  இந்த முறை அசடு புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைக்கவில்லை. பெரிய ஏமாற்றம்.  காசியபனுக்கும் வருத்தம்.  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது.  ஒரு கடிதம் எழுதினேன்.  üதமிழில் மிக முக்கியமான புத்தகம் இது.  தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு செல்ல உதவி செய்யவும்,ý என்று டைப் அடித்து வயதான காசியபனை லைப்ரரி டைரக்டரைப் பார்க்க அழைத்துச் சென்றேன். டைரக்டரைப் பார்த்து, 'இவர்தான் காசியபன்..அசடு என்ற நாவலை எழுதியவர்,' என்று அறிமுகப்படுத்தினேன்.  அந்த டைரக்டர் நல்லவர்.  காசியபனைப் பார்த்தவுடன், மறுபரிசிலனையில் அந்தப் புத்தகத்திற்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்.   அசடு ஆயிரம் லைப்ரரி கிளைக்களுக்குச் சென்று விட்டது.  அதில் கிடைத்தத் தொகையில் முஹம்மது கதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்தேன்.  அப்போது பாபர் மசூதி இடித்தச் சமயம் ஆனதால் முஹம்மது கதைகள் என்றால் தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்று அஞ்சி பெயரை கோணல் மரம் என்று வைத்துவிட்டேன்.  வழக்கம்போல புத்தகம் பரபரப்பாக விற்கவில்லை.

இது ஒரு தொடர்கதை.  இன்னும் அதிகமாக எழுதிக்கொண்டே போகலாம். நான் இத்துடன் விட்டுவிடுகிறேன்.  1000 பிரதிகள் அச்சடித்து வந்த நான், 500 பிரதிகளுக்கு மாறினேன்.  500 பிரதிகள் அச்சடித்த நான் 300 பிரதிகளுக்கு மாறினேன்.  300 பிரதிகள் அச்சடித்த நான் 30 பிரதிகளுக்கு மாறி விட்டேன்.  என் பென்சன் பணத்தைப் புத்தகத்திற்கு செலவு செய்கிறேன்.   ஒரு புத்தகம் விற்றத் தொகûயில் கிடைக்கும் பணத்தில் இன்னொரு புத்தகம் வர உதவுகிறது.  என் புத்தகங்களை விற்றுக் கொடுக்கும் விற்பனையாளர்களுக்கு என் நன்றி.  என் புத்தகங்களைப் பற்றி விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றி.  சிலாகித்து ஒரு சில எழுத்தாளர்கள் பேசினால் ரொம்ப ரொம்ப நன்றி.  வாசகர்கள் தேடிவந்து என் கடையில் நான் கொண்டு வந்த புத்தகங்களை வாங்கினால் அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகள். 

இந்த முறை என் புத்தகம் ஒன்று வர வேண்டுமென்று சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.   ஒரு புது முயற்சி.  136 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.100.  ஜென் தத்துவத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி கவிதை வரிகள். இதோ ஒரு கவிதை.
மழைப் பெய்துகொண்டிருந்தது
மழையையே பார்த்துக்கொண்டிருந்தேன்
வேறு ஒன்றும் யோசிக்கவில்லை


                                                                         06.07.2016

Comments