அழகியசிங்கர்
101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன். ஸ்டேஷன் உள்ளே இந்தக் கடை இருக்கும். அதேபோல் டிஸ்கவரியில் கொடுத்திருக்கிறேன். இப்போதுதான் மெதுவாக ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். புத்தகக் காட்சியின்போது சிலர் வாங்கிச் சென்றிருக்கலாம்.
விருட்சம் பத்திரிகை மூலம் என் நோக்கம் என்ன? பத்திரிகையைப் புரட்டினால் ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் பத்திரிகையைப் படித்துவிட வேண்டும். எளிதாக அப்படி படித்துவிடக் கூடிய பத்திரிகைதான் இது. எதாவது ஒரு கதையையோ கவிதையையோ படிக்கும்போது ஒருவித ருசி வேண்டும். அதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒரு பத்திரிகை என்றால் அதை உடனே படித்துவிட வேண்டும். எளிமையாக இருப்பதால் அது ஆழமாக இருப்பதில்லை என்ற அர்த்தம் இல்லை. எளிமையும் ஆழமும் சேர்ந்தால் அது பெரிய பலம்.
நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன். இந்தக் கதையை அசோகமித்திரன் எனக்குக் கொடுத்தார். நகுலன் எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எளிமையான ருசியான கதை ஆனால் ஆழமான கதை.
அசோகமித்திரன் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். நாடகத்தின் பெயர் ஆகா கான் மாளிகை. நான் விருட்சம் இதழில் வெளிவந்த சிறந்த நாடகமாக இதைக் கருதுகிறேன். பொங்கல் 1996 என்ற பெயரில் சோ சுப்புராஜ் ஒரு கதை எழுதி உள்ளார். வெளிநாட்டில் தமிழர்கள் படும்பாட்டை விவிரிக்கும் கதை. எஸ் சங்கரநாலராயணன் மகிழ்ச்சியின் தூதுவன் என்ற கதையை எழுதி உள்ளார். அவர் கதைத் தலைப்பின் முன் விரித்து சுருண்டு என்ற வார்த்தைகள் எப்படி வந்தன என்ற அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை. கதை என்று சொல்லி முடிப்பதற்குள் கதையை எழுதி அனுப்பி விடுகிற வேகம் அவரிடம் உள்ளது. குழல்காரனைப் பற்றிய உருக்கமான கதை. சுப்ரஜா ருசி என்ற கதையை எழுதி உள்ளார். நமுத்துப் போன கடலையைக் கூட ருசிக்க முடியவில்லை. தாஜ் எழுதிய சைத்தான் கட்டுரை வடிவில் உள்ள கதைதான்.
இடைவெளி என்ற பானுமதியின் கதையில் ஆண் பெண் உறவின் சிக்கலை துல்லியமாக படம் பிடித்துக் காட்டி உள்ளார். ஏன் எழுதினார் என்ற தலைப்பில் அழகியசிங்கராகிய நான் ஒரு கதை எழுதி உள்ளேன். ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்திருந்தார். என் வீட்டுச் சூழலை வைத்து ஒரு கதை எழுதி அது தினமணிகதிரில் வெளிவந்துவிட்டது. என்னையும் அப்பாவையும் தவறாக படம் பிடித்துக் காட்டியிருந்தார். ரொம்ப நாளாக அந்தக் கதைக்கு மாற்றாக ஒரு கதை எழுத நினைத்தேன். அந்தக் கதைதான் ஏன் எழுதினார் என்ற தலைப்பில் நான் எழுதிய கதை. இதைத் தவிர பலர் கவிதைகள் எழுதி உள்ளார்கள். பெருந்தேவி 4 கவிதைகள் எழுதி உள்ளார். சிபிச்செல்வன் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார். நோயல் விமர்சனப் புத்தகத்தைப் பற்றி முத்துக்குமார் விமர்சனம் எழுதி உள்ளார். பிரபு அவர் பயணத்தைப் பற்றி கட்டுரை எழுதி உள்ளார். நானும் வேடிக்கையாக ஜெகன் மோகினி கட்டுரை எழுதி உள்ளேன்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய பத்திரிகை நவீன விருட்சம். நான் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகையை எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். 102 வது இதழ் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வந்துவிடும்.
Comments