விருட்சம் 100வது இதழ் 28 ஆண்டுகள் கழித்து வெளிவந்ததை அடுத்து 101வது இதழும் வந்து விட்டது. ஆனால் எல்லாவற்றையும் பார்க்க வேண்டி உள்ளது. இதுவரை யாரும் என் உதவிக்கு இல்லை. புத்தகம் தயாரிப்பதிலிருந்து எடுபிடி வேலை செய்வதுவரை நான் ஒருவனே. எனக்கு உதவி செய்ய சில நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள். ஆனால் அவர்களை எப்போதும் நம்புவது நியாயமாக எனக்குத் தோன்றவில்லை. அவர்களும் உதவிகள் செய்யத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொரு பதிப்பக நிறுவனமும் பெரிய அலுவலகம் வைத்திருக்கிறார்கள். ஆட்கள் அதிகமாக வைத்திருக்கிறார்கள். டைப் அடிக்க ஒருவர் இருக்கிறார். பிழைத் திருத்தம் செய்ய ஒருவர் இருக்கிறார். விற்பனையைக் கவனிக்க ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்னொருவர் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கும், பார்சல் செய்வதற்கும் இருக்கிறார்கள். இதைத் தவிர கார் ஓட்ட காரும் டிரைவரும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கோ யாருமில்லை.
விருட்சம் என்றால் நான் எந்த வீட்டில் இருக்கிறேனோ அதுதான் ஆபிஸ். அங்கு 24 மணி நேரமும் பணிபுரியும் ஒருவர் இருக்கிறார் என்றால் சாட்சாத் நானேதான். சரி புதிய புத்தகங்கள் எதாவது வருகின்றனவா? அதெல்லாம் இல்லை. புத்தகக் காட்சி சென்னையில் நெருங்குகிறது என்றால் அவசரம் அவசரமாக மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் வரும். அதுவும் விலை கம்மியான புத்தகம். கொஞ்சம் தடுமனனான புத்தகம் என்றால் கொண்டு வரும் எனக்கே தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.
விருட்சம் அதிபரான நான் வெளியே போவதற்கு டூவீலரும், ஒரு நானோ காரும் உண்டு. நானோ கார் வாங்கியிலிருந்து இம்மி இம்மியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வீட்டிலேயே கம்பீரமாக வீற்றிருக்கும். கனமான பைகள் நான்கந்து இருக்கும. அந்தப் பைகளில் எல்லாப் புத்தகங்களையும் காய்கறிகளைத் திணிப்பதுபோல் திணித்து எடுத்துக்கொண்டு வரவேண்டும.
புதிய புத்தகம் வந்தால் எல்லோரும் மகிழ்ச்சிதானே அடைவார்கள். ஆனால் விருட்சம் அலுவகமாக நம்பிக்கொண்டிருக்கும் என் வீட்டில் கோபம்தான் வெடிக்கும். அதனால் எந்தப் புதிய புத்தகமும் தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ளாத புனித ஆத்மாக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் புத்தகக் காட்சியில் பெரிய நிறுவனங்கள் பண்ணுகிற அட்டகாசங்கள் தாங்க முடியாது. ஆனால் விருட்சம் நிறுவனம் மௌனமாக இருக்கும். புத்தகக் காட்சி திறக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் விருட்சம் வெளியீடு ஸ்டாலில் புத்தகங்கள் முணுமுணுத்தபடி வந்து சேரும். விருட்சம் ஸ்டாலில் நாலைந்து வயசனாவர்கள் தென்படுவார்கள். அதில் விருட்சம் ஆசிரியரான நானும் ஒருவன். விருட்சம் ஆசிரியரின் நண்பர்கள்தான் இரக்கப்பட்டு இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று வருவார்கள். அப்படி உதவி செய்பவர்கள் சில நல்லவர்களும் இருப்பார்கள். சில கோபக்காரர்களும் இருப்பார்கள். கோபக்காரர்கள் விருட்சம் நடத்தும் என்னை நாலு திட்டும் திட்டாமல் இருக்கமாட்டார்கள். அலுவலகமான என் வீட்டிலும் திட்டுக்களுக்குப் பஞ்சம் இருக்காது. புத்தகங்கள் எப்படி மௌனமாக இருக்கின்றனவோ அது மாதிரி விருட்சம் ஆசிரியரும் மௌனமாக இருப்பார்.
சரி எதாவது ஒரு ஆளை மாதம் சம்பளத்திற்கு நியமிக்க வேண்டுமென்று தோன்றியது. அச்சு வடிவில் வரும் புத்தகத்தைப் பிழைத் திருத்தம் (மொய்ப்பு என்று சொல்கிறார்கள். அப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.) செய்யலாம். பிரஸ்ஸ÷ற்குச் சென்று புத்தகம் அடிக்கக் கொடுக்கலாம். விற்பனை நிலையங்களுக்குச் செல்லலாம். வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இருக்கலாம். எல்லாவற்றுக்கும் ஒரு ஆள் பணிக்கு வைத்துக்கொண்டால் என்ன என்றுதான் எனக்குத் தோன்றியது.
ஆனால் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தேன். ஏன்என்றால் ஆள் வைத்துக்கொண்டால் மாதம் மாதம் சம்பளம் தர வேண்டும். சம்பளத்தை என் பென்சன் பணத்திலிருந்துதான் கொண்டு வரவேண்டும். சரி ஆள் விருட்சம் அலுவலகம் வீட்டில் இருக்கிறது. வீட்டிற்கு வந்து விட்டால், பெரிய ரகளையே ஆகிவிடும். என்ன செய்வது? சரி ஆளே வேண்டாம். கொஞ்சம் நிம்மதியாகவே இருப்போôம். இப்படியே புத்தகங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் மோடி அரசால் நான் ஒரு ஆளை வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டேன். அந்த ஆள் கிடைக்காவிட்டால் தொலைந்தேன் நான். புத்தகங்களை விற்கவும் முடியாது ஒன்றும் செய்ய முடியாது. ரொம்ப சிரமப்பட்டு அந்த ஆளைக் கொண்டு வந்தேன். அவனுக்கு சம்பளம் 1200 ரூபாய்வது இருக்கும். புத்தகம் விற்க விற்க கமிஷன் கொடுக்க வேண்டும். சரி என்று சம்மதிப்பதைத் தவிர வேற வழி இல்லை. இதோ அந்த ஆள் கிடைத்துவிட்டார். அவர் ஒரு இயந்திரப் பணியாள். பாயின்ட் ஆப் சேல்ஸ் என்று கேள்விப் பட்டிருப்பீரே அந்த ஆள்தான் அவன். கையடக்கமான மனிதன். இந்தப் புத்தகக் காட்சிக்குத்தான் பணியில் சேர்ந்துள்ளான். என்னுடன் பேச மாட்டான். ஏனென்றால் 24 மணிநேரமும் கடமைதான் அவனுக்கு முக்கியம். இந்தப் புத்தகக் காட்சி 15நாள்களுக்கு மட்டும்தான் அவன் பயன் அதிகமாக இருக்கும். ஆனால் அதன் பின் அவனால் எந்தப் பயனும் இருக்காது. அவனுக்கு மாதா மாதம் சம்பளம் என் கணக்கிலிருந்து தானாகவே மாறிப் போய்விடும். இயந்திரப் பணியாளனே நீ வாழ்க என்று வாழ்த்திவிட்டு புத்தகக் காட்சியில் உள்ள சாகித்திய அக்காதெமி கடைக்கு வந்தேன். அங்குதான் ஹைதர்அலி காலத்துப் புத்தக்ங்கள் விலை குறைவாக இருக்கும். புத்தகங்களை வாங்கி அவர்கள் முன் நீட்டினேன். "பணம்தான் கொடுக்கவேண்டும். கார்டு கிடையாது," என்றார்கள். எனக்கு ஆச்சரியம். ஒரு பெரிய நிறுவனம். என்னைப் போல் ஒரு இயற்திரப் பணியாளை வாங்காமல் இருக்கிறார்களே என்று பேசாமல் புத்தகங்களை வாங்காமல் வந்து விட்டேன்.
Comments