அழகியசிங்கர்
நவீன விருட்சம் ஆரம்பித்தபோது எல்லாம் நான்தான். பத்திரிகையைத் தயாரிப்பது. தயாரித்தப் பத்திரிகையை தபாலில் போடுவது. பின் நவீன விருட்சம் சார்பில் புத்தகங்களைத் தயாரிப்பது. தயாரித்தப் புத்தகங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது. ஒரு சாக்கு மூட்டையில் புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமந்து எடுத்துக் கொண்டு போவேன் புத்தகக் காட்சிக்கு. திரும்பவும் விற்காத புத்தகங்களை சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வருவேன்.
பெயருக்குத்தான் அப்பா பெயரைப் பயன்படுத்தினேன் தவிர அவருக்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது தெரியாது. முன்பெல்லாம் ஒரு புத்தகம் 400 பக்கங்கள் தாண்டிவிட்டால் பயந்து விடுவேன். அப்படி பக்கங்கள் தாண்ட அனுமதிக்க மாட்டேன். என்ன காரணம் என்றால், புத்தகத்தை எப்படிப் பாதுகாத்து வைப்பது எப்படி விற்பது என்ற பயமிதான். இப்போதெல்லாம் அலட்சியமாக பலர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள்.விற்றும் விடுகிறார்கள்.
அழகியசிங்கர் கவிதைகள் என்ற என் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன். 180 கவிதைகள் வரை அத் தொகுப்பு நூலில் வந்தது. என்ன துணிச்சல் உனக்கு என்று மனம் கேட்டுக்கொண்டது. 180 பக்கம் என்று வந்ததால் 18 சரியான எண் இல்லை என்று தோன்றியது. கூட ஒருசில கவிதைகளையும் சேர்த்தேன். கவிதைகளுக்குப் பின்னால் ôதடிழுவனட, ஞானக்கூத்தனட, நகுலன், வெங்கட் சாமிநாதன் போன்ற படைப்பாளிகள் விமர்சனம் செய்திருந்தார்கள். அப் புத்தகம் 300 பிரதிகளுக்கு மேல் போய்விட்டது. ரூ.150 என்று விலை வைத்தேன். அப்போது நான் கொண்டு வந்த புத்தகங்களில் அதுதான் விலை அதிகம். என்னை விளம்பரப்படுத்திக்கொள்வதில் நான் எப்போதும் பூஜ்யம். முயற்சி செய்தாலும் என்னால் முடிவதில்லை. மோசமாக நான் எதுவும் எழுதியிருக்க மாட்டேன். ரொம்ப எளிமையாக என் அனுபவங்களை எழுதியிருப்பேன். ஒவ்வொரு புத்தகக் காட்சியின் போதும் யாராவது ஒரு புத்தகம் அழகியசிங்கர் கவிதைகள் வாங்கினால், எப்படி என்று யோசிப்பேன். அப்போது அதன் விலை கொஞ்சம் அதிகம். ஆனால் இப்போதோ அந்த விலை ஒன்றுமில்லை. இன்னும் என்னிடம் கொஞ்சம் கூட குறையாத பிரதிகளைக் கொண்ட புத்தகங்களில் அதுவும் ஒன்று.
அதிலிருந்து ஒரு கவிதையை இங்கு தர விரும்புகிறேன் :
அழகி
அடுக்குமாடி
கட்டிடத்திலிருந்து
வெளியில் வந்த
அழகி அவள்
ஒயிலாய்
படி இறங்க
எதிர் அடுக்குமாடி
இளைஞன்
அவளையே
பார்த்து வாய்ப்பிளந்தான்
அழகி
அவனைப் பார்த்து
கையசைத்தாள்
திகைத்த இளைஞன்
உற்சாகத்துடன்
காற்றில் ஈந்தான் முத்தங்களை
அழகி
நாணுவதுபோல்
தலைகுனிந்து
சிரித்தபடி சென்றாள்
ஒவ்வொரு நாளும்
இளைஞன் காத்திருக்க
அழகியோ
காணவில்லை
இலைகளை உதிர்த்தவண்ணம்
மரமொன்று
எள்ளி நகையாடியது
அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் இப்போதும் விற்பனைக்கு என் அரங்கில் உள்ளது.
(அழகியசிங்கர் கவிதைகள் - விலை ரூ.150 - விருட்சம் வெளியீடு)
மே 2016ஆம் ஆண்டு நான் கொண்டு வந்த புத்தகம் அதற்கு மட்டும் ஆகாயம் என்ற கவிதைத் தொகுப்பு. 114 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.80 எண்பது ஆண்டுகள் அகவை முடித்த வைதீஸ்வரன் அவருடைய மொத்தத் தொகுதியிலீருந்து 80 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த புத்தகம்.
அவருடைய கவிதை ஒன்றை இங்கு தர விரும்புகிறேன் :
ரிப்பேர்
மழையற்ற நாளில்
குடை ரிப்பேர்காரன்
மரத்தடியில்
அண்ணாந்து கிடந்தான்
உயரே
இறகு நைந்த சில கிழக்காகங்கள்
இங்கே ரிப்பேர்!
என்றடித்துக் கொண்டன.
(அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் - வைதீஸ்வரன் - கவிதைகள் - விருட்சம் வெளியீடு - விலை : ரூ80)
சமீபத்தில் வெளிவந்த புத்தகம் நீல பத்மநாபனின் சிந்தை முட்கள் என்ற கவிதைத் தொகுதி. மொத்தம் 39 கவிதைகள் அடங்கிய தொகுதி இது. நவம்பர் 2016ல் கொண்டு வந்த புத்தகம். அதிலிருந்து ஒரு கவிதையை நீங்க ரசிக்க நல்குகிறேன். விலையோ ரூ.60.
பழுது
'குழாயில் தண்ணீர் இல்லை....'
'வாஷர் தேய்ந்து நீர் வடிந்து
வீணாகிக் கொண்டிருக்கிறது...'
'லைட் ஸ்விச்சில் கோளாறு
ஷாக் அடிக்குது, பியூஸ் போகுது
உடனடி மாற்றியாகணும்...'
'ட்ரிய்னேஜில் கழிவுநீர்
ஓடிப்போகமாட்டேங்குது...
மாடியிலிருந்து வரும் சிமண்ட்
குழாயில் விள்ளல்கள்....'
குழாயடியில் சிமண்ட் விலகி
பாசி படர்ந்துவிட்டது...
üஅறைகதவு அடையமாட்டேங்குது...
அலமாரி பூட்டில் கோளாறு...
கூட வாழவந்தவளிடமிருந்து
மாறிமாறி வந்துகொண்டிருந்த
புகார்களைத் தீர்க்க ஒழுங்காய்
ஓடியாடிக்கொண்டிருந்தவன்
காலக் கொடுங்காற்றில் அடிபட்டு
இனி பழுது பார்க்கவும் பாங்கில்லாது
நம்பிக்கையிழந்து பழுதுக்கு அப்பாற்பட்டதை
நாடியிருப்பதைத் தெரிந்தும் தெரியாது
சரமாரியாய் எய்யப்பட்டுக்கொண்டிருக்கும்
புதிதுபுதிதான புகார்கள், குற்றச்சாட்டல்கள்...'
(சிந்தை முட்கள் - நீல. பத்மநாபன் - விருட்டசம் வெளியீடு - 60 ரூபாய்)
பாரதிபின் கவிதைகளில் எனக்கு மையல் உண்டு. ஆனால் முழுமையாக அவருடைய கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவது என்றால் ஆகிற காரியம் இல்லை. அதனால் இரண்டு பகுதிகளாக அவருடைய புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன். ஒரு புத்தகம்.
ஒரு புத்தகத்தின் பெயர் தோத்திரப் பாடல்கள். கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்ட தோத்திரப் பாடல்களைத் தொகுத்துள்ளேன். 60 தோத்திரப் பாடல்கள் கொண்ட தொகுதி இது. அதிலிருந்து எனக்குப் பிடித்த பாடல்.
8. கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே! - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே! - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே! - நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே! - நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!
ஏற்றி நின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!-நீ
எளியர் தன்னைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
பொய்யர் தன்னை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி! கண்ண
பெருமானே! - நின்
பொன்னடி போற்றி நின்றேன், கண்ண பெருமானே!
(விருட்சம் வெளியீடாக வந்துள்ள இப் புத்தகம் விலை ரூ.90 தான்)
விருட்சம் வெளியீடின் 600வது ஸ்டாலில் கவிதைகளைக் குறித்து விவாதம் செய்துள்ளோம். ஒருவர் எழுதவதுதான் கவிதை மற்றவர்களெல்லோரும் ஒன்றுமில்லை என்று சொல்லும் கூற்றை நான் ஏற்பதில்லை. அந்தப் போக்கில் நேற்றையக் கூட்டம் போயிற்று.
இன்றையக் கூட்டம் சிறுகதைகளைப் பற்றி. ஒரு சிறுகதையை நாம் எப்படி படித்து ரசிப்பது என்ற தலைப்பில் உரையாட உள்ளோம். சரியாக ஆறுமணிக்கு தமிழ் அறிஞர்கள் விருட்சம் வெளியீடு ஸ்டால் எண் 600 கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Comments