Skip to main content

நன்றாக மாட்டிக்கொண்டேன்




அழகியசிங்கர்




உங்களுக்கெல்லாம் தெரியும்.  நான் மாம்பலத்தில் இருக்கிறேன் என்று. பின் நானோ ட்விஸ்ட் என்ற கார் வைத்திருக்கிறேன்.  அதை அறுபது வயதிற்குப் பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதும் தெரியும். ஆனால் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அசோக்நகரில் உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல் வரைச் சென்று ஒரு வாக் செய்துவிட்டு பின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு  வந்துவிடுவேன்.  ஆனால் சமீபத்தில் அதை பலநாட்களாய் பயன்படுத்தவில்லை.  அதை சர்வீஸ் கொடுக்க நினைத்தேன்.  நானே நானோவை ஓட்டிக்கொண்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள டாவே ரீச் என்ற இடத்தில் கொடுக்க நினைத்தேன்.
நேற்றுதான் (23.01.2017) அதற்கான முயற்சியை மேற்கொண்டேன்.  காலையில் 10 மணி சுமாருக்குக் கிளம்பி அண்ணாசாலையை அடைந்தேன். வண்டிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு திகைப்பு ஏற்பட ஆரம்பித்தது.  முக்கியமான காரணம் ஜெமினி அருகில் உள்ள மேம்பாலத்தில் வண்டியை எப்படி எடுத்துக்கொண்டு போகப் போகிறேன் என்ற பதைப்புதான் என்னிடம் இருந்தது.  சமதரையில் வண்டியை மெதுவாகக் கொண்டு செல்வதும் பின் நகர்த்துவதும் என்னால் முடிந்தது.  ஆனால் மேம்பாலத்தில் வண்டியைக் கொண்டு செல்லும்போது, பின்னால் நகர்ந்தால் எப்படி அதை நிறுத்துவது.? 
இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும் வண்டியில் உள்ள பெற்றோலின் அளவு மிகக்குறைவாக இருந்தது.  வண்டி எங்காவது நின்று விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு பாயின்ட் அளவிற்கு வந்து விட்டது பெற்றோளின் அளவு.  மெதுவாக நகர்ந்து நகர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டு போனேன்.  ஒரு இடத்தில் பெற்றோல் நிரப்பும் இடத்தைக் கண்டு பிடித்தேன்.  அங்கு சென்று பெற்றோல் போட்டேன்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் மெதுவாய் முன்னே செல்லும் வண்டியுடன் முட்டாமல் பெற்றோல் நிலையத்தில் மெதுவாக திருப்பி பெற்றோலும் போடுவது ஒரு அனுபவம்.  பின் நான் மெதுவாக க்ரீம்ஸ் ரோடு சென்று விடுவேன் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றம்.  பஸ்கள் மற்றும் பல வண்டிகள் கலைஞர் டிவி என்ற இடத்தின் எதிரில் நின்று விட்டன.  என் வண்டியும். அசையவே இல்லை.  அப்போதுதான் என் முட்டாள்தனத்தை எண்ணி வருத்தப்பட்டேன்.  பாரத பெட்றோலியம் உள்ள அலுவலகத்தின் பக்கத்துத் தெருவில் சிறுவர்கள் சிறுமியர்கள் பெண்கள் என்று எல்லோரும் அமர்ந்திருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  வண்டியின் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். பின் என் பால்யகால நண்பரும் கவிஞருமான வைத்தியநாதனைப் பார்த்தேன். அவர் பாரத பெற்றோலியம் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர்.  சமீப காலமாக அவரை நான் சந்திக்கவே இல்லை.  அவரிடம் தயிர்சாதம் கிடைக்குமா என்று செய்தி அனுப்பினேன். அவர் சிறிது நேரத்தில் 8 கீரை வடைகளும் இரண்டு சிறிய தண்ணீர் பாட்டில்களும் கொண்டு வந்து கொடுத்தார்.  நான் இருந்த பகுதியில் பக்கத்தில் ஓட்டல்கள் இல்லை. மேலும் வண்டியைத் தனியாக எத்தனை நேரம் விட்டுவிட்டுச் செல்வது என்பதும் தெரியவில்லை.  என்ன அவஸ்தை இது என்று தோன்றியது.
நான் பொதுவாக மாம்பலத்திலேயே காரில் வலம் வருபவன்.  மிஞ்சி மிஞ்சிப் போனால் டி நகர் செல்வேன்.  மற்றபடி எங்குமில்லை. ஏன் நேற்று மட்டும் இதுமாதிரி மாட்டிக்கொண்டேன்.  இதுமாதிரி ஒன்று நடக்கப் போவதை ஏன் ஞானக்கண் மூலம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  வண்டியின் உள்ளேயே இருந்து எப்எம் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.  என் கையில் எந்தப் புத்தகமும் இல்லை படிக்க.  என்னை மாதிரி அவஸ்தைப் பட்ட பலரை சந்தித்தேன்.  பஸ்களில் பயணம் செய்த பலரும் பஸ்ûஸவிட்டுப் போய்விட்டார்கள். என் நண்பர் வைத்தியநாதனுடன் சிறிது நேரம் பேசினேன். அவர் நடந்தே மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று சொன்னார்.  
கூட்டத்தைக் களைக்க போலீசார்கள் லேசாக தடியடி அடிக்க ஆரம்பித்தவுடன், கூட்டம் கலைந்து விட்டது. பின் மாலை ஆறுமணி சுமாருக்க மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்.  வண்டியை விட்டுவிட்டு என் வீட்டிற்குச் சென்றபோது, நானோ என்னுடைய நண்பனாக மாறிவிட்டதாகத்தான் தோன்றியது.  இனிமேல் எளிதாக என் நானோ வசப்படும் என்றும் நினைத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் பங்காக நானும் மாட்டிக்கொண்டேன்.

Comments