அம்ஷன்குமார் கூட்டமும் பத்மநாப ஐயரும்..
அழகியசிங்கர்
ஐந்தாம் தேதி அம்ஷன் குமார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார் பத்மநாப ஐயருக்கு. அக் கூட்டத்திற்கு 80 பேர்கள் வந்திருந்தார்கள். சென்னையில் 80 பேர்கள் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அது சிறப்பான கூட்டம். கூட்டம் நன்றாக ஆரம்பம் ஆனது. பன்னீர்செல்வம் பேசும்போதும், யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி குறித்து ஆவணப்படம் போதும், கூட்டம் அசையாமல் இருந்தது.
திடிரென்று ஒரு தொற்று நோய் பரவிவிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை விட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் பத்மநாப ஐயருக்குத் தெரிந்தவர்கள். அவரை நேரில் பார்த்தவர்கள். அவருடன் பேசியிருப்பவர்கள். உண்மையில் அவர்கள் முன்வந்து பத்மநாப ஐயரைப் பற்றிப் பேச வந்திருக்க வேண்டும். அம்ஷன்குமாருக்கு உறுதுணையாய் இருந்து நடத்தியிருக்க வேண்டும்.
அம்ஷன்குமார் கூட்டம் ஆரம்பிக்கும்போதே, 'ஐயருக்குத் தெரிந்தவர்களும் அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பேச அழைக்கிறேன்' என்று தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால், கூட்டத்தில் இன்னும் பத்மநாப ஐயரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு அதிகமாகக் கிடைத்திருக்கும்.
உண்மையில் எனக்கு பத்மநாப ஐயரைப் பற்றி தெரியாது. அம்ஷன்குமார் மூலமாகத்தான் அவரை எனக்குத் தெரியும். நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் - 75 என்ற புத்தகத்தைப் பார்த்தபோது அசந்து விட்டேன். இது ஒரு பவள விழா மலர். அற்புதமான புகைப்படங்கள் கொண்ட புத்தகம் இது. கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல் அச்சு நேர்த்தி. நான் பாதுகாக்க வேண்டிய புத்தகங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மேலும் இதை நான் ஒரு ஆவணப் புத்தகமாகக் கருதுகிறேன். ஆவணப் படம் போல் ஆவணப் புத்தகம். பத்மநாப ஐயரை வைத்து ஆவணப்படம் எடுத்தாலும், இப் புத்தகம் போல் பலர் பேசி சிறப்பாக இருந்திருக்கும். அம்ஷன்குமார் இதை செய்ய வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் பத்மநாப ஐயரைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். அவர் ஈழ தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல் பட்டு வந்திருக்கிறார். இன்னும் செயல்படுகிறார் என்று.
ஒருவர் எப்படி எழுத்தாளராக இல்லாமல் தமிழ் மீதும் எழுத்தாளர்கள் மீதும் ஆர்வம் உள்ளவராக செயல் பட்டிருக்கிறார் என்பதை நினைத்துதான் ஆச்சரியப்படுகிறேன்.
வெளி ரங்கராஜன், ரவிசுப்பிரமணியன், பாரவி, மூவரும் அவருடைய புத்தகத்தைப் படித்துவிட்டு கட்டுரை வாசித்தார்கள். பொதுவாக இதுமாதிரியான கூட்டத்தில் கட்டுரை வாசிப்பதைக் கேட்பதற்கு தனிப்பட்ட மனநிலை வேண்டும். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும் மனநிலை இல்லை.
நானும் இதில் கலந்துகொண்டேன். கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேச நினைத்தேன். பேசவும் செய்தேன். நாலைந்து குறிப்புகளை வைத்துக்கொண்டு அசோகமித்திரன் சிறப்பாக கூட்டத்தில் பேசி விடுவார். அதேபோல் நினைத்துதான் பேசினேன்.
எனக்குப் பின்னால் இரா முருகன், பா ஜெயபிராகாசம், தமிழ்நதி, தாரா போன்றவர்கள் சிறப்பாகவே பேசினார்கள். பத்மநாபனுக்குத் தெரிந்த பலர் இருந்தார்கள். அவர்கள் பேசினால் இன்னும் சிறப்பாகவே இந்தக் கூட்டம் இருந்திருக்கும்.
Comments