Skip to main content

சில துளிகள்.......4

சில துளிகள்.......4                                     


அழகியசிங்கர் 




- முந்தாநாள் காலை 3 மணி இருக்கும்.  ஒரே சத்தம்.  கீழே இரும்பு கேட்டை யாரோ வேகமாக டமால் டமால் என்று அடித்தார்கள்.  பின் ஓடற சத்தம்.  வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிக்கட்டுகளில் தடதடவென்று ஓடி வந்தார்கள்.  எனக்கு திகைப்பு.  கதவைத் திறக்க பயம்.  பின் கொஞ்ச நேரம் கழித்துக் கதவைத் திறந்தேன்.  மேல் வீட்டிலிருந்த குடி இருப்பவரும் திறந்துகொண்டு நின்றிருந்தார்.  "என்ன?" என்று கேட்டேன்.  üüதிருடன் ஒருவன் நம்ம வீட்டு வழியா தப்பிச்சுட்டுப் போறான்.  அவனைப் பிடிக்க போலீஸ்காரர்கள்தான் இப்படி சத்தம் போட்டு ஓடி வந்தார்கள்,ýý என்றார். 

திருடனா?  நம்ம தெருவிலா?  எங்கள் தெருவில் நுழை வாயிலில் மாடுகள் சுதந்திரமாய் நின்று கொண்டிருக்கும்.  பின் சைக்கிள்கள், டூவிலர்கள் என்று நிரம்பி வழிந்திருக்கும்.  பின் தெரு முழுவதும் நிறையா பேர்கள் இருப்பார்கள்.  சென்னை ஜனத்தொகையில் பாதிபேர்கள் இங்கேதான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம்.  ஆனால் எப்படி திருடன் வர முடியும்?  அதுவும் துணிச்சலாக.  நேற்று காலையில் என் வீட்டிற்கு எதிரில் உள்ள இரண்டு இளைஞர்களைப் பார்த்து சொன்னேன் :   "தெரியுமா?  திருடன் வந்திருந்தான்..3 மணிக்கு ஒரே ரகளை."

"முன்பு போல் இல்லை.  கோடி வீட்டில கூட கேஸ் சிலிண்டர் திருட்டுப் போயிடுத்து," என்றார்கள்.  
"நம்பத் தெருவிலா? நம்ப முடியவில்லை.  சைக்கிள் எடுக்கலையா?" என்று கேட்டேன்.
"சைக்கிள் யாரும் எடுக்க மாட்டார்கள்.  சைக்கிளும் குறைச்சல்..ஆனா டூ வீலரை எடுப்பாங்க..அதுவும் ரெட் கலர் வண்டியை எடுப்பாங்க.." என்று சிரித்தபடியே சொன்னான் ஒருவன்.
நான் அவர்களைப் பார்த்தபடி என் வண்டியைப் பார்த்தேன்.  அது ரெட் கலர். அதனால்தான் அப்படி சொல்றான் என்று நினைத்து அவனைப் பார்த்துச்  சிரித்தேன்.

- 100வது இதழ் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெரிய கவரில் விருட்சம் இதழை நுழைத்து பின் கயிறால் கட்டி ஸ்டாம்பு ஒட்டிப் போட வேண்டும்.  ஆறு ருபாய் ஸ்டாம்பு.  சரியா 3 மணிக்குத்தான் ஆரம்பிக்க வேண்டி உள்ளது.  நான் முடித்து தபால் ஆபீஸிற்குப் போவதற்குள் மணி 5 ஆகிவிடும்.  அந்தச் சமயத்தில் யாராவது போனில் வந்தால் என்னால் எடுத்துப் பேச முடியாது.  நேற்று ஒரு நண்பர் போன் செய்தார்.  நான் எடுக்கவில்லை.  என் நிலைமையை எப்படி அவருக்கு விவரிக்கிறது. அவர் கோபப்பட்டால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. 


- கவுதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்து போனதைப் பற்றி சமீபத்தில் செய்தி வந்தது.  ரொம்ப வருடங்களுக்கு முன் என் உறவினர் பெண் விவாகரத்து செய்து கொண்டார்.  அப்படி விவாகரத்துச் செய்வதற்கு நான் உதவி செய்தேன்.  விவாகரத்துப் பெற்ற அன்று அந்தப் பெண் ஒரே ஒரு வார்த்தைச் சொன்னார் : "வருத்தமாக இருக்கிறது," என்று.  இங்கு நான் சொல்ல வருவது பிரிவு என்பதைப் பற்றி.  கணவனோ மனைவியோ பிரிந்து செல்வதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.  தெரு முனையில் உள்ள 18 கே பஸ் பிடித்துப் போகிற மாதிரி சுலபமான விஷயமாக நான் கருதவில்லை.  என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் மனைவி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை  செய்து கொண்டு விட்டார்.  அதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் போய்விட்டது என்ற தோன்றுகிறது. 

- தடம் இதழில் வெளிவந்த எஸ் ராமகிருஷ்ணன் பேட்டி எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பதில் சொன்ன விதமும் படிப்பவரை யோசிக்க வைக்கும்.  ஒரு கேள்வி : ஒரு கலைஞன் அவனது சொந்த வாழ்பனுபவத்தை எழுதவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்ற கேள்விக்கு ராமகிருஷ்ணன் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. அவர் இப்படி சொல்கிறார் : üüஎனது வாழ்க்கையை நான் ஏன் ஒரு கதைக்கான பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்?  எனது வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு பரிசு, சுதந்திரம்.  அதைப் பிய்த்து பிய்த்து நான் ஏன் ஒரு கதையிடம் கொடுக்க வேண்டும்?ýý இந்தக் கருத்து எனக்கு சற்று நெருடலாகத் தோன்றியது.  அனுபவம் என்பது பொதுவான விஷயம்  அதில் என் அனுபவம் உங்கள் அனுபவம் என்பதெல்லாம் ஒன்றுதான்.  கதையாக எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  எழுதுகிற திறமையும், நம்பத்தன்மையும் வேண்டும்.எனக்குத் தெரிந்து ஒரு பிரபல எழுத்தாளர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.  திடீரென்று எழுதுவதை நிறுத்தி விட்டார்.  ஏன் என்று கேட்டதற்கு, 'என்னைப் பற்றி நான் எழுதுகிறேன்.  எல்லோருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன்,' என்றார்.  அவர் சொன்ன பதிலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  100 வருடங்கள் கழித்து ஒரு படைப்பைப் படிக்கும் வாசகனுக்கு, யாருடைய அனுபவம் அதில் வந்திருக்கிறது என்பது எப்படித் தெரியும்.   
                                                                                                                  (இன்னும் வரும்)

Comments