Skip to main content

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்...

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்...


அழகியசிங்கர்




பொதுவாக நான் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவன்.   பேசுபவனாக இல்லாமல் பார்வையாளனாக இருப்பதைப் பெரிதும் விரும்புவேன்.  பார்வையாளனாக இருக்கும்போது கூட்டம் நடத்துபவர்களை நான் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ஒரு கூட்டம் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதையும், யார்யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பேன்.   மனம் நிறைவு செய்வதுபோல் ஒரு கூட்டம் இருந்தால் அதைப் பற்றி எழுத முயற்சி  செய்வேன்.  அப்படி உடனே எழுதாவிட்டால் கூட்டம் என் நினைவை விட்டுப் போய்விடும்.  பொதுவாக நான் ஒரு காமெரா வைத்துக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பேன்.  ஆனால் இன்று அதுமாதிரி எதுவும் செய்யவில்லை.  கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆடியோவில் பதிவு செய்தேன்.

ஓய்புப்பெற்ற நீதியரசர் சந்துரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் எண்பதாவது பிறந்த தின விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.  எனக்கு எப்போதும் கே எஸ் அவர்களைப் பார்க்கும்போது உற்சாகமான இளைஞர் ஒருவரைப் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்படும்.  இன்றும் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது.  பெரும்பாலும் கே.எஸ் எல்லா  இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்பவர்.  நேற்று - 12.11.2016 - காலை 9.30 மணிக்கே ராக சுதா ஹாலில் அவரைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தேன். 

கே எஸ் அவர்களின் நண்பர்களின் வட்டம் பெரிது.  ஹால் முழுவதும் நண்பர்கள் வட்டம் நிறைந்து விட்டது.  கே எஸ் அவர்களுடன் படித்தவர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள், இலக்கிய நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கே எஸ் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.  இக் கூட்டத்தைப் பர்த்து பதட்டப்படாமல் இருந்தார்.  மூத்த எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வைதீஸ்வரனுடன் இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். 

இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சம் ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஓதியது.  முதலில் குத்துவிளக்கு ஏற்றி கூட்டம் ஆரம்பமானது.  பின் கே எஸ் அவர்கள் கேக் வெட்ட கூட்டம் சிறப்பாக தொடங்கியது.  

கே எஸ் அவர்களை அவருடைய நண்பர்கள் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தேவாரத்தையும் திருவாசகத்தையும் சிறப்பாக  ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் ஓதினார்.  நான் அமர்ந்த இடத்திலேயே என்னுடைய சோனி பதிவு செய்யும் இயந்திரத்தின் மூலம் பதிவு செய்தேன்.  இதோ என் வீட்டில் கணினியில் நான் திரும்பவும் கேட்கும்போது பிரமாதமான முறையில் பதிவாகியிருந்தது.  கே எஸ் பிறந்த தினக் கூட்டத்தில் இதை மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

கே எஸ் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகள் நன்றாகத் தெரிந்தவர்.  ஜெயகாந்தனின் நாவல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்.  அதேபோல் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.  இந்த 80வயதிலும் சுறுசுறுப்பான ஒருவரைப் பார்க்க முடியாது.  "இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்.  சங்கக் காலத்தில் எழுதப்பட்ட பெண்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகக் கூறினார். சமஸ்கிருதம், தமிழ்கவிதைகளைத் தொடர்புப் படுத்தி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

எப்போதும் அவர் கொண்டு வரும் புத்தகங்களின் ஒரு பிரதியை அவர் நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க மாட்டார்.  சமீபத்தில் எனக்கு அவர் அனுப்பிய ஒரு புத்தகத்தின் பெயர் கடவுளின் கையெழுத்து . மணி பௌமிக் எழுதிய புத்தகம்.  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கே எஸ்.  கூட்டம் முடிந்து வீடு வரும்போது ஒரு மனநிறைவைத் தந்த கூட்டமாக இது இருந்தது.  இன்னும் பல்லாண்டு கே எஸ் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.  
                                                                                       ************* 

வாசக சாலை என்ற அமைப்பு ஒவ்வொரு மாதமும் கதையாடல் என்ற ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.  இந்த மாதம் ஆறாவது கூட்டம் ஒன்றை பரிசல் புத்தக நிலையத்தில் நேற்று (12.11.2016) நடத்தி உள்ளார்கள். 

5.30 மணிக்கு ஆரம்பமாகும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  உயிர்மை, ஓலச்சுவடி, காலச்சுவடு, நவீன விருட்சம், காக்கைச் சிறகினிலே, தடம் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை எடுத்துக்கொண்டு அலசினார்கள்.  

இக் கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  நானும் கிருபானந்தனமும்தான் முதியவர்கள் என்று நினைக்கிறேன்.  பேசியவர்கள் அனைவரும் மனந்திறந்து கதைகளைப் பற்றி விவாதம் செய்கிறார்கள்.  பேசுபவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கதைகளை வாசித்து விட்டு வருகிறார்கள்.  

நவீன விருட்சம் 100வது இதழில் வெளிவந்த கதைகளை லதா அருணாச்சலம் என்பவர் விமர்சனம் செய்தார்.  அகலிகைப் படலம் என்ற பேயோன் கதையைக் குறித்து நீண்ட விவாதம் நடந்தது.  அக் கதைக்கு மாத்திரம் தனியாக ஒரு கதையாடல் கூட்டம் நடத்த வேண்டும் என்று லதா குறிப்பிட்டார்.  விருட்சம் இதழில் 13 கதைகள் வெளிவந்ததாகக் குறிப்பிட்டார்.  கதைகளை மட்டும்தான் பேச முடிகிறது.  இன்னும் இதில் வெளிவந்த கவிதைகளைக் குறித்தும் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.  அதேபோல் காலச்சுவடு, உயிர்மை, ஓலச்சுவடு, தடம், காக்கைச் சிறகினிலே பத்திரிகைகளில் வெளிவந்த கதைகயைப் பற்றியும் பேசினார்கள். 

பொதுவாக அங்கு குறிப்பிட்ட கதைகளைக் கேட்கும்போது நமக்கும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.  இது வாசகசாலையின் வெற்றி என்றே கருதுகிறேன்.  இக் கூட்ட்த்தில் நடக்கும் நிகழ்ச்சியை ஆடியோவில் பதிவு செய்து எல்லோரும் கேட்கும்படி செய்ய வேண்டும்.   

Comments