Skip to main content
சாருநிவேதிதாவின் இராச லீலா என்ற புத்தகம் பற்றி ...


அழகியசிங்கர்


நண்பர்களே 


வணக்கம்.  நீங்கள் இங்கே ஆவலுடன் கூடியிருப்பது இராச லீலா என்ற 614 பக்கங்கள் கொண்ட நாவலைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்று.  தமிழில் 3 எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எங்கு போய் பேசினாலும் அபிமானிகள் கூடி விடுவார்கள்.  உங்களுக்கும் இது தெரியும்.   3 எழுத்தாளர்களில் ஒருவர் சாருநிவேதிதா.  சாரு நிவேதிதாவிற்கு அபிமானிகள் அதிகம் உண்டு.  ஆனால் சாருநிவேதிதா விஷயத்தில் அபிமானிகளும் எதிர்ப்பவர்களும் உண்டு.  நான் வேண்டுமென்றே பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்கும் மற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் மட்டும்தான் உண்டு.  இந்த எதிர்ப்பாளர்கள் சாருநிவேதிதாவின் புத்தகத்தைப் படித்து அவரை கண்டபடி திட்டவும் திட்டுவார்கள்.  ஏன் சிலசமயம் வன்முறையில் இறங்கினாலும் இறங்குவார்கள்.  சாருநிவேதிதாவும் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருக்க மாட்டார்.  நான் இந்தப் புத்தகத்தைப் பாராட்டி சொன்னால், அபிமானிகள் என்னை வாழ்த்துவார்கள்.  ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரை எதிர்ப்பதுபோல் என்னையும் எதிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.   நான் எந்தப் பக்கம் என்பதை அறிய நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்..

சரி, சாருநிவேதிதாவின் அபிமானிகள் தவிர, உங்களில் எத்தனைப் பேர்கள் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள்?  அந்தப் புத்தகம் எப்படி இருக்குமென்று பார்த்திருக்கிறீர்களா?    நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்க மாட்டீர்கள்.  ஏன் நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா என்பது கூட எனக்குச் சந்தேகம்.

கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப் புத்தகம் ஒரு போன் செய்தால் உங்கள் வீட்டிற்கே வந்து விடும்.  612 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  உண்மையில் இதன் விலை 600 ரூபாயிக்கும் மேல்தான் வைத்திருக்க வேண்டும்.  சரி இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கத் தயாராக உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு என்ன வயது இருக்க வேண்டும்.  

நான் பள்ளிக்கூடம் படிக்கும் வயதில் இருக்கும்போது பேப்பர் கடை முன்னால் நின்று என்ன பத்திரிகை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.  என் மாமா ஒருவர் கல்கண்டு பத்திரிகையை வாங்கச் சொல்வார்.  குமுதம் ஆனந்தவிகடன் ராணி போன்ற பத்திரிகைகளை வாங்க வேண்டாம் என்று சொல்வார். அவையெல்லாம்  ஆபாஸப் பத்திரிகைகள் அவருக்கு.   படித்தால் மனசு கெட்டுவிடும் என்பார்.  ஆனால் அப்போது டிவி இல்லாத காலம்.  இப்போது டிவியை எல்லா வயதினரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் பார்க்கக் கூடாததைப் பார்க்கத் தவறுவதில்லை.  ஆபாஸமும், வன்முறையும்தான் டிவி சீரியல் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.  குழந்தைகள் முன் நாம் இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகள் மனம் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. 

ஆனால் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு என்ன வயதிருக்க வேண்டும்.  எனக்கு வயது 60க்கு மேல் ஆகிவிட்டது.  எனக்கு இப் புத்தகத்தைப் படிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை.  என் வீட்டிலும் வயதானவர்கள்தான் இருக்கிறோம்.  மேலும் ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்துப் படிக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறது.  என் வீட்டில் என்னைத் தவிர தமிழ்ப் புத்தகங்களை யாரும் படிக்க மாட்டார்கள்.  ஏன் தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் புத்தகங்களைக் கூட படிக்க மாட்டார்கள்.  யாரும் நான் வைத்திருக்கும் புத்தகத்தைத் தொடக் கூட மாட்டார்கள்.  உங்கள் விஷயம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன்.  நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பதால் இந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஆனால் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள்!  நீங்கள் டேபிளில் இந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியூர் சென்று விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது நீங்கள் என்ன புத்தகம் படிக்கிறீர்கள் என்று யாராவது எடுத்துப் பார்ப்பார்களா?  ராஸ லீலா என்ற புத்தகத்தை அப்படி எடுத்துப் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அவர்களுக்கு உங்களை விட வயது குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.  இதுமாதிரியான புத்தகங்களை அவர்கள் படித்த அனுபவம் இல்லாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களைப் பார்த்து அவர்கள் திட்ட எல்லா வாய்ப்பும் உண்டு.  பள்ளிக்கூடம் படிக்கும் புதல்வனோ புதல்வியோ இருந்தால்  நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க அனுமதிப்பீர்களா?   இப் புத்தகம் படிக்க இன்னும் கொஞ்சம் வயது வர வேண்டும்.  நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் 614 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தைப் படிக்க நேரம் இருக்கிறதா உங்களுக்கு?  நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால், அலுவலகம் போய்விட்டு வந்து இப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொள்வீர்களா?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் நீங்கள் புத்தகம் படிக்க எடுத்துக்கொள்வீர்கள்?  உண்மையில் தண்டமாக ஒரு தமிழ் சினிமா பார்க்க உங்கள் பொழுதை செலவு செய்வீர்கள்.  ஆனால் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றாது.  ஏன்?  

சில சினிமாக்களைப் பார்க்க இரண்டு விதமான சான்றுகளை அளிப்பார்கள்.  ஒரு சான்று யு இன்னொரு சான்று எ.  எ சான்றிதழ் பெற்றப் படமாக இருந்தால், அதைப் பார்க்க 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.  புத்தகத்திற்கும்  அதுமாதிரியான பிரிவைக் கொண்டு வந்துவிடலாôம்.  சாருநிவேதிதாவின் இந்த நாவலைப் படிக்க எ சான்றிதழ் அளிக்கலாம்.   

நீங்கள் கேட்கலாம்.  எல்லாம் சரி, இன்னும் இப் புத்தகம் உள்ளேயே போகாமல் வேற எதுவோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.    

நீங்கள் அப்படி நினைப்பது தவறு.  நான் ராஸ லீலாவைப் பற்றிதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  614 பக்கம் உள்ள  இந்த நாவலை நான் ஒரே மூச்சில் படித்தேன்.   தினம் தினம் நான் பல மணி நேரங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டேன்.  படிக்க படிக்க கீழே வைக்க முடியவில்லை.  சில புத்தகங்களைப் படிக்கும்போது நமக்குத் தேவையில்லாத அலுப்பு வந்து விடும்.  முழுக்க முடிப்பதற்குள் படிக்க முடியாமல் நின்றுவிடும்.  இதோ நீங்கள் எதிர்பார்த்தபடியே நேற்று அதாவது 11ஆம் தேதி அக்டோபர் மாதம் 2016 அம் ஆண்டு இப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.   அதாவது இந்தக் கட்டுரையை 12ஆம் தேதியிலிருந்து எழுத ஆரம்பித்துள்ளேன்.  நீங்கள் ஆவலாக இருப்பது தெரிகிறது.  நான் எத்தனைப் பக்கங்கள் எழுதுவேன் என்று எனக்கு இப்போது  தெரியாது.    உடனே அவருடைய இன்னொரு நாவலான புதிய எக்ûஸல் எடுத்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  100 பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.   இந்த நாவலை  எப்போது முடிப்பேன் என்று தெரியாது.   புதிய எக்ûஸல் என்ற  நாவல் 867 பக்கங்கள் கொண்டது.   இந்த நாவலும் வித்தியாசமாக எழுதப் பட்டிருக்கிறது.  ராஸ லீலா மாதிரி தெரியவில்லை.  இதிலிருந்தே சாருநிவேதிதா ஒரு திறமையானவர் என்று தெரிகிறது.  சரி சரி நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.  இதோ ரா4 லீலா என்ற நாவலுக்கு வருகிறேன்.   

ராஸ லீல6ô என்ற நாவலில் பாகம் ஒன்றில் கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் பின்குறிப்புகளும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பிக்கும்போதே சாருநிவேதிதா எப்படி ஆரம்பித்துள்ளார் என்பதைக் காட்ட விரும்புகிறேன்.  நான் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நீங்கள் முகம் சுளிக்காமல் கேட்க வேண்டும். 

'வீட்டில் ஐந்து மணிக்கே எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பும்போது மலஜலமெல்லாம் சரியாகப்  போயிருக்க முடியாது.  நம்முடைய உணவில் ஐரோப்பியர்களின் உணவைப் போல் நார்ச்சத்து இல்லையாதலால் அவர்களுடைய மல வெளியேற்றத்துக்கும் நம்முடைய மல வெளியேற்றத்துக்கும் எக்கச்சக்கமான வித்தியாசம் உள்ளது.  அவர்களுக்கோ இரு இரண்டு நிமிட வேலை.  அதனால் ரயில் கிளம்பியதும் ஒவ்வொருவராக கக்கூûஸ நோக்கிப் படையெடுப்பார்கள்.  அதில் பெருமாளும் சேர்த்திதான்.'

சென்னையிலிருந்து வேலூருக்குப் போய் பணிபுரிபவர்களின் அவதிகளை துல்லியமாக சாரு நிவேதிதா வர்ணித்துக்கொண்டு போகிறார்.  இதில் படுகிற அவதிகளை கொஞ்சங்கூட கூச்சப்படாமல் விவரித்துக் கொண்டு போகிறார். உண்மையை எழுதுகிறார்.   நமக்கு படிக்க படிக்க சங்கடமாக இருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால் இதைப் படிக்கும்போது நாமும் இந்த அவதியில் மாட்டிக்கொள்வதுபோல் தோன்ற வைக்கிறார்.  அதுதான் அவர் வெற்றி.    எனக்கு அதுமாதிரி தோன்றுகிறது.  உங்களுக்குத் தோன்றவில்லையா? நானும் மயிலாடுதுறையில் பணிபுரிந்தவன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சொன்னையை நோக்கி வருவேன்.  பின் வேண்டா வெறுப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி திங்கள் அலுவலகம் போவேன்.  அப்படி வண்டியில் போவதில் பலவித சங்கடங்கள்.  பஸ்ஸில் செல்லும்போது தாங்க முடியாத அவதி.  ஒரு சமயம் உட்கார சீட்டுக் கூட கிடைக்காமல் 7 மணி நேரம் நின்றுகொண்டே மயிலாடுதுறைக்குப் போயிருக்கிறேன்.   அதன்பின் ரொம்ப நேரம் நிற்பது எனக்கு சங்கடமாக மாறிவிட்டது.  அதனால் நின்றுகொண்டு ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதனால்தான் உட்கார்ந்து உங்களுடன் இந்த நாவலைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன்.   

நீங்கள் பொதுவாக சாதாரணமாக ஒரு நாவலை படித்துப் பழகி இருப்பவராக இருக்கலாம்.  அப்படிப் பழகியவர்களுக்கு இந்த நாவலைப் படிக்கும்போது முகம் சுளிக்கும்படி இருக்கும்.  ஏன் இதையெல்லாம் இப்படி வர்ணிக்கிறார் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.  இது மாதிரியான தருணத்தில் ஏன் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்று கூட நீங்கள் முடிவெடுக்கலாம்.  ஆனால் அதற்காக இந்த நாவலை படிக்காமல் இருந்து விடாதீர்கள்.  உண்மையில் சாரு நிவேதிதா தத்ரூபமான ஒரு சங்கடமான சூழ்நிலையைத்தான் யதார்த்தமாக சொல்லிக்கொண்டு போகிறார்.  

உங்களுக்கு நான் இந்த நாவலைப் பற்றிய முன்கதை சுருக்கம் சொல்லப் போவதில்லை.  ஏன் என்றால் நீங்கள் இந்த நாவலை வாங்கி படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பீர்கள்..என் முன் கதை சுருக்கத்தைக் கேட்டு இதுதானே கதை எதற்கு வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள்.  வாங்க வேண்டிய புத்தகத்தை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.   அதனால் ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்லும்போது யாரும் அந்த புத்தகத்தைப் பற்றிய சாராம்சத்தை முழுவதும் சொல்லி விடக் கூடாது. அதைப்போல மோசமானது வேறு ஒன்றுமில்லை.  ஆனால் ஒரு புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் நான் எதுமாதிரி சொன்னால் நீங்கள் வாங்குவீர்கள்..அது கஷ்டமான விஷயம்தான்.  ஒரு வாசகனாகப் படிப்பவருக்கு இந்த நாவல் மூலம் என்ன தெரிய வருகிறது.  என்ன சாருநிவேதிதா  இந்த நாவல் மூலம்  கொண்டு போகிறார் என்பதைத்தான் சொல்ல முயற்சி செய்யப் போகிறேன். 

இரண்டு விஷயங்கள் எனக்கு இந்த நாவல் மூலம் தெரிந்தது. ஒன்று உடல் உளச்சல்.  இன்னொன்று மன உளச்சல்.  உடல் உளச்சல் மன உளச்சலாகக் கூட மாறி விடுகிறது. அதை அவர் சொல்லிக்கொண்டு போகிற விதம் சிறப்பாக உள்ளது.

சில தினங்களுக்கு முன் நான் வாக் செய்துகொண்டிருக்கும்போது என்னுடன் நடந்து கொண்டிருக்கும் ஒரு நண்பரிடம்,  'சாருநிவேதிதாவின் இந்த நாவல் பிரமாதம் என்று சொன்னேன்.'  அவர் இலக்கியப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்.  அவர் உடனே, "அப்படி சொல்லாதீர்கள்." என்றார்.  "ஏன்?" என்று கேட்டேன்.  "அது எல்லோரும் சொல்வது...படித்துவிட்டு எளிதாக சொல்லி விடுவார்கள்," என்றார்.  "பின் எப்படி இதைப் பற்றி சொல்வது?  வேறு வார்த்தை இருக்கிறதா?"  என்று கேட்டேன்.  அவரால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.  ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு க நா சு எழுதுவதென்றால், அந்தப் புத்தகம் ஒரு வெற்றி என்று எழுதுவார்.

அப்படி சொல்லவில்லை என்றால் பின் எப்படித்தான் அந்தப் புத்தகத்தை விவரிப்பது. அதனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், சாருநிவேதிதாவின் இந்த நாவல் ஒரு வெற்றி. பக்கம் 217ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : üஎன் எழுத்து ஒரு உரையாடல்.  எனக்குள் நான் நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் என்கிறார் . தமிழில் இந்த நாவலுக்கு முன்னோடி உண்டா?  உண்டு.  ஜி நாகராஜன், கரிச்சான் குஞ்சு என்ற இரண்டு எழுத்தாளர்களைப் பற்றிதான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.  ஜி நாகராஜன் விலை மாதர்களிடம் போவதைப் பற்றி தன் எழுத்தில் எழுதியிருக்கிறார். 

 அதேபோல் பசித்த மானுடம் என்ற நாவலிலும் ஆணின் காமத்தை விவரித்துக் கொண்டே போகிறார் கரிச்சான் குஞ்சு.  ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி விட்டார் சாருநிவேதிதா.   ஒரு ஆணின் காமத்தை வெளிப்படுத்தும் நாவல் என்று இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. 

பல உத்திகளை நாவல் மூலம் கொண்டு வருகிறார்.  நேர்க்கோட்டுத் தன்மையில் இந்த நாவல் எழுதப்படவில்லை.  நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படுகிற எழுத்தில்  ஒரு ஆரம்பம்  முடிவெல்லாம் இருக்கும்.  நாவல் இப்படித்தான் போகும் என்று படிப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.   பின் முடிவு வரும். .  முடிவைக் கூட வாசகன் யூகித்திருப்பான்

.  ஆனால் நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படாத தாவும் தன்மையைக் கொண்ட இந் நாவலை நீங்கள் முதல் பக்கத்திலிருந்துதான் படிக்க வேண்டுமென்பதில்லை.  எதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் வாசிக்கலாம்.  நீங்கள் வாசிக்கும் இடத்திலிருந்து நாவலின் போக்கை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். முன்னும் பின்னும், பின்னும் முன்னுமாகக் கூடப் படிக்கலாம்.   நகுலன் என்ற எழுத்தாளரைப் பற்றி உங்களில் சில பேருக்காவது தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  அவருடைய நாவல்கள் பெரும்பாலும் நேர்கோட்டுப் பாணியில் எழுதப்பட்டிருக்காது. சாருநிவேதிதாவின் நாவல்களும் அப்படித்தான்.  சுயசரிதத்தைத்தான் நாவலாக நகுலன் எழுதியிருப்பார்.  சாருநிவேதிதாவின் நாவலும் சுயசரிதமாக இருக்கிறது.  பொதுவாக சுயசரிதம் என்று சொல்வதில் முழுவதும் உண்மை என்பது இல்லை.  சுயமாக சரிதத்தை எழுதபவர்கள் 50 சதவீதம்தான் எழுதியிருப்பார்கள்.  ஆனால் சாருவின் சுயசரிதமான இந்தப் புத்தகத்தில் 90 சதவீதம் உண்மை இருக்கும் போல் தோன்றுகிறது.  இந்த நாவல் மூலம் தன்னையே உரித்துக் காட்டுகிறார்.  அதனால் இது சுய சரிதத்தையும் மிஞ்சும் நாவல் என்று கூடச் சொல்லலாம்.  கண்ணாயிரம் பெருமாளின் கதை ஒரு சுய சரிதம் சார்ந்த கதைதான் அந்தக் காதாபாத்திரம் மூலம் சாருநிவேதிதா ஒளிந்துகொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.  அவருடைய அஞ்சலக அலுவலகத்தைத்தான் கதையாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.  

இந்த நாவலில் கதை என்பது இல்லை.  ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாமா அதுவும் இல்லை.  பித்தனைப் பற்றி எழுதிய பித்தன் கதையா..  இல்லை.. இல்லை..படிக்க படிக்க நீங்கள படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். சரி இதை ஒரு மனப்பிறழ்வு உள்ள ஒருவரின் கதை என்று நீங்கள் தீர்மானித்தால், எனக்கு உடனே ஞாபகம் வருவது கோபி கிருஷ்ணனும், எம் வி வெங்கட்ராமனும்.  மனப்பிறழ்வின் உச்சத்தில் இருந்து எழுதியவர் கோபிகிருஷ்ணன்.  காதுகள் என்ற நாவல் எழுதியிருக்கிறார் எம் வி வெங்கட்ராமன்.  ஓயாமல் கேட்கும் குரலில் பதிவுகளை நாவல் முலம் கொண்டு வருவார்.  சாருநிவேதிதாவின் நாவலில் மனப்பிறழ்வின் தன்மை இருந்தாலும், மேலே குறிப்பிட்ட  இவர்கள் இருவரின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகப் படுகிறது.  

இந்த நாவலின் முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்..கண்ணாயிரம் பெருமாள் அவருடைய கதையை நாவலில் சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சாருநிவேதிதாவும் நாவலில் எழுதுகிறார்.  அதனால் இதை மெட்டா பிக்ஷன் என்றும் கூறலாம்.  

பக்கம் 219ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : 'சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல.  என் எழுத்து ஒரு உரையாடல், எனக்குள் நான் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்' என்கிறார்.  இப்படிச் சொல்வதே பின் நவீனத்துவ நாவல்களின் ஒரு வழி. 

கதை ஆரம்பிக்கும் முன்,  முன் குறிப்புகளும், பின் ஒவ்வொரு கதை முடிவிலும் பின் குறிப்புகளும் கொடுத்துக்கொண்டே செல்கிறார். இந்த பின்குறிப்புகள் சிலசமயம் கதையை விட நீண்டு விடுவதாக தோன்றுகிறது.  கதைக்குள் கதையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.  கதையைக் கூடப் படிக்காமல் இந்தப் பின் குறிப்புகளைப் படித்துக்கொண்டே போகலாம்.  இது இந்த நாவலில் காணப்படும் வித்தியாசமான முயற்சி.  

இதோ இந்த நாவலன் பக்கங்களைத் திறப்பதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  இதோ ஏதோ ஒரு பக்கத்தை எடுக்கிறேன்.  படிக்கத் துவங்குகிறேன்.  

கதை : இருபத்தொன்று 

தமிழ் மொழி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.  ஆனால் இருநூறு பேருக்காகவும், முன்னூறு பேருக்காகவும் இலக்கியம் படைப்பதில்தான் சற்றும் உடன்பாடில்லை.  என்னைப் பொறுத்தவரை எந்த மொழியில் எழுதினாலும் ஒன்றுதான்.  ஆனால் தமிழர்களும் மற்ற மொழிக்காரர்களும் ஏன் தங்களுடைய மொழியை மட்டும் உயர்ந்ததாகவும், மாற்றான் மொழியை மட்டமாகவும் கருதுகிறார்கள் என்று புரியவில்லை.  பாரதியே இது விஷயத்தில் பொய் சொல்லியிருக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகும் சாருநிவேதிதா கண்ணுக்கும் காதுக்கும் இனிமையாக இருக்கும் ஒரே மொழி அரபிதான் என்கிறார். அதில் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க ஆரம்பிக்கிறார்.  அந்த மொழியில் உள்ள எழுத்துக்களை இந்த அந்தியாயம் முழுவதும் எழுதி உள்ளார்.

எனக்கு இதைப் படிக்கும்போது, ஞானக்கூத்தனின் கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது.  'எனக்கும் தமிழ்தான் மூச்சு.  ஆனால் பிறர் மேல்  விடமாட்டேன்' என்பதுதான் அந்த வரி.  

கலை வெளிப்பாட்டில் உடலின் மொழியைப் பற்றி ஆய்வு செய்பவர்களையே தொடர்ந்து கவனப்படுத்தி வருவதாக சாருநிவேதிதா தெரியப்படுத்தி உள்ளார்.  மார்க்கி தெ ஸôத், ஜார்ஜ் பத்தாய், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற பல எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.  ஹென்றி மில்லர், யெரிக்கா ஜென்க் என்ற பெயர்களை ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை.  

இந்த நாவலில் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வதைப் பற்றி செய்தி வருகிறது.  கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்கு மேலாக அது தொடர்ந்து விவிரிக்கப்படுகிறது. படிப்பவரின் மனதை சஞ்சலப்படுத்தும் பக்கங்களாகவே இதைக் கருதுகிறேன். ஆனால் அதையும் நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறார்.  

'எனக்கு மன அழுத்தமும், மனப் பதற்றமும் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது நான் பதினைந்து ஆண்டுகள் வேலை பார்த்த தபால் துறை.  அதுவே என்னை மரணத்தின் விளிம்புவரை தள்ளியது.  ஆனால் அதே தபால்துறைதான் பைபாஸ் சர்ஜரி மூலம் நான் உயிர் பிழைத்துக்கொள்ளவும் வழி செய்தது.  ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொடுத்தது என்கிறார் ஒரு இடத்தில்.'

நண்பர்களே, 614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் படித்தவிட்டு  நான் இன்னும் எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  பரிட்சைக்குத் தேர்வு எழுதும் மாணவனைப் போல் நான் இருக்கிறேன்.  எந்தத் தேர்விலும் நான் பார்டர் மார்க் வாங்கித்தான் பாஸ் செய்திருக்கிறேன்.  இந்தத் தேர்விலும் எனக்கு பார்டர் மார்க்குதான் கிடைக்குமா?  சாருநிவேதிதாதான் பதில் சொல்ல வேண்டும்.  

புதுமைப்பித்தன் காலத்திலேயே படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது இயல்பாக இருந்துள்ளது  புதுமைப்பித்தன் அவருடைய கவிதைகள் மூலம் பலரை தாக்கி உள்ளார்.  

வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்ற விமர்சகர்கள் ஒருவரை ஒருவர் கட்டுரைகள் மூலம் சாடியிருக்கிறார்கள்.  இது சகஜமான சாதாரண விஷயம்.  நீல பத்மநாபன் ஒரு மகா நாவல் எழுதியிருக்கிறார். நாவல்  முழுவதும் அவர் சந்தித்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைப் பற்றி விளாசி எழுதி உள்ளார்.  அந்த நாவல் பலருடைய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  ஏன் நகுலன் கூட சகப் படைப்பாளிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.  ஆனால் அவரை யாரும் ஒன்றும் சொன்னதில்லை.

பிரமிள் கடைசிக்காலத்தில் அவருக்கு ஸ்டோரோக் வந்து செயல்படாமல் இருப்பதற்கு முன்பு கூட சுந்தர ராமசாமியையும், வெங்கட்சாமிநாதனையும் திட்டி நீண்ட கவிதைகளை எழுதி உள்ளார்.  அதன்பின்தான் அவருக்கு ஸ்டோரோக் வந்தது. சகப் படைப்பாளிகளைத் தீண்டுவதுமூலம் பிரமிளுக்கு எழுதுவதற்கான உத்வேகம் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.  இன்னொரு விததத்தில் அவரால் தொடர்ந்து வேறு விதமாக எழுத முடியாமல் போவதால் இப்படி நிகழ்கிறதோ என்றும் தோன்றுகிறது. 

சாரு நிவேதிதா அவருடைய ராசலீலா நாவலில் சகப் படைப்பாளிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.  சிறுபத்திரிகை நடத்துபவர்கள் கூட அவரைத் தொந்தரவு செய்திருக்கிறார்கள்.  அதை இந்த நாவலில் அங்கங்கே தெரியப்படுத்தாமல் இல்லை.   நம்வீட்டில் சகோதரர்கள் கருத்து வேற்றுமையால் ஒருவரை ஒருவர் சாடுவதுபோல்தான் இதை நான் பார்க்கிறேன்.  மேலும் அவர் சந்தித்தவர்களைப்பற்றியும், அவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றியும்  கதைப் பொருளாக மாற்றி விடுகிறார்.  இதை அப்படித்தான் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.  

இன்னொரு 100 வருடங்கள் கழித்து இந்த நாவலை அப்போதுள்ள வாசகன் படிக்கும்போது, அதில்  குறிப்பிடுகின்ற எல்லாம் சம்பவங்களாகவும், பெயர்களாகவும்தான் தென்படும்.  

இந்த நாவலை மூன்று விதமாகப் பார்க்கலாம்.  முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும். முன்குறிப்பு 1, 2, 3 என்று எழுதி இருக்கிறார்.  சென்னையில் இருக்கும் கண்ணாயிரம் பெருமாள்  சென்னையிலிருந்து வேலூருக்கு சுருக்கெழுத்தாளராக வேலூர் பிரிவு தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலத்தில் சுருக்கெழுத்தாளராகப் போகிறார்.  அவர் ஒரு சுருக்கெழுத்தாளர் மட்டுமல்ல எழுத்தாளரும். தீவிர வாசகர்.  அவர் எழுதவதைக் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.  அங்கு பணிபுரியும்போது ஏற்படும் அவதிகளை விவரித்துக்கொண்டே போகிறார்

.அங்கே சந்திக்கும் காயத்திரி என்ற பெண்ணுடன் ஏற்படும் உறவு கண்ணாயிரம் பெருமாள்  சென்னை ஸர்க்கிள் ஆஃபீஸ÷ற்கு மாற்றப்படும்போது முடிவுக்கு வந்து விடுகிறது.  

இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.  பின்குறிப்பு எழுதுவதன் மூலம் ஒரே வரியில் காயத்திரியின் உறவை கண்ணாயிரம் பெருமாள் முடித்து விடுகிறான்.  

கதை 1, கதை 2, கதை 3 என்று ஒவ்வொரு அத்தியாயங்களும் தொடருகிறது.  இதில் கதைக்குப் பின் கூறப்படும் பின்குறிப்பு கதையைவிட அதிகமான பக்கங்களில் வருகிறது.  

கதைகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலர் எழுதியிருக்கிற பொன்மொழிகளை வெளிப்படுத்திக்கொண்டு போகிறார் ஆசிரியர். ஸில்வியா பிளாத், ஷேக்ஸ்பியர், ஆஸ்கர் ஒயில்ட் என்றெல்லாம் முக்கியமான ஆசிரியர்களின் கூற்று வெளிப்படுத்தப்படுகிறது. கதை பதின்மூன்று என்ற அத்தியாயத்தில்  6 பக்கங்கள் எந்தவித பாராவும் பிரிக்காமல் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.  அதில் ஒரு இடத்தில் உங்கள் குழந்தையை விட உங்கள் பெற்றோரை விட விடவிட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட என்று இரண்டு வரிகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.  

கதை 26லிருந்து முதல் பகுதி முடிவடைந்து விடுகிறது.  இரண்டாவது பகுதி ராஸ லீலா என்று ஆரம்பிக்கிறது.  ராஸ லீலா முன்னுரை முற்றும் என்று முடித்து மூன்றாவது பகுதி ஆரம்பமாகிறது.  இந்த மூன்றாவது பகுதியில் 1லிருந்து 64 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார்.  அதர்வ வேதம், பட்டினத்தார், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்துடன் உதாரணங்களுடன் ஒவ்வெபாரு அத்தியாயமும் ஆரம்பமாகி முடிகிறது.   இதில் வித்தியாசமான எழுத்து முறையை 64 பகுதிகளிலும் கடைப்பிடித்திருக்கிறார்.  இதைப் படிக்கும் போது காதல் கடிதங்களைப் படிப்பதுபோல் படுகிறது.  ஒரு பெண்ணின் அந்தரங்கம் சுழன்று சுழன்று வருகிறது.  

இந்த நாவலில் சில பக்கங்கள் இருக்கின்றன.  அந்தப் பக்கங்களை நீங்கள் வாய்விட்டு சத்தமாக எல்லோர் முன்னாலும் படிக்கவே முடியாது.  இந்தப் புத்தகத்தின் 454ஆம் பக்கத்தை நீங்கள் சத்தம்போட்டு படிக்கவே முடியாது. அதுவும் பெண்கள் முன் படிக்கவே முடியாது.  அதனால் இந்த நாவல் ஆபாஸமான நாவல் என்று ஒதுக்க முடியாது.  தமிழில் இதுமாதிரியான தன்மை உள்ள நாவலை இதுவரை யாரும் இவ்வளவு துணிச்சலாக எழுதியிருக்க முடியாது. இதை ஒரு பதிப்பாளர் பதிப்பித்திருக்கிறார் என்றால் அவரையும் பாராட்ட வேண்டும்.  ஒவ்வொருவரும் ஏன் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்றால்  இந்த நாவலை எழுதியிருக்கும் விதத்திற்காக.  தமிழில் யாரும் எழுத முடியாத ஒரு நாவலை எழுதியிருப்பதற்காக.  அடிப்படையில் தொடர்ந்து இந் நாவலை வாசிக்கத் தூண்டிக்கொண்டிருக்கும் வசீகரத்திற்காக. 

அதனால் சாருநிவேதிதா எழுத்திற்கு எதுமாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று யோசிக்கும்போது, அவர் நாவலுக்கு  தமிழில் இலக்கிய விருது அளிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  அதற்கான தகுதி அவர் நாவலுக்கு இருந்தாலும். 


(டாக் சென்டரில்  புத்தக நண்பர்கள் கூட்டத்தில் 25.10.2016 அன்று வாசித்தக் கட்டுரை)

ராஸ லீலா - நாவல் - சாருநிவேதிதா - கிழக்குப் பதிப்பகம் - 614 பக்கங்கள் - விலை ரூ. 500


Comments