தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்
1. என் செல்வராஜ்
விவாகரத்து
நண்பனின் மனைவி அவன் தந்தை வீட்டிற்கு போய் தங்கி இருந்த போது அவன் மனைவிக்கும் அவ்ள் மாமனாருக்கும் பிரச்சினையாகி விட்டது. பெரும்பாலும் மாமனார்கள் மருமகள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் அவள் விஷயத்தில் மாமனாரும் மாமியாரும் ஒரே கட்சியாகி வீடு ரெண்டு பட்டு பஞ்சாயத்து வரை போய் விட்டது. வெளியூரில் இருந்த நண்பன் ஊருக்கு போய் தன் பெற்றோர்களுடன் சேர்ந்து கொள்ள அவள் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு செல்லவேண்டியதாகி விட்டது. அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து தன் கணவன் வீட்டுக்கு வந்தவளை வாசலிலேயே நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டான் நண்பன். அதை அறிந்த எனக்கு மிகவும் மனம் வருத்தமாகிவிட்டது. வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைக்க முயலும் நண்பனைப் பார்க்க சென்றேன். அவன் மனைவி அனுப்பி இருந்த விவாகரத்து நோட்டீசையும் அதற்கு வக்கீல் மூலம் அளித்த பதிலையும் காட்டினான். எனக்கு அவன் நிலை பரிதாபமாக இருந்தது. அவன் தந்தை உடனே ஊருக்கு வருமாறும் கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சொன்னதாக சொன்னான். அவ்னிடம் "உனக்கு அவளுடன் வாழ விருப்பமா ?" என்றேன். "ஆம்" என்றான் அவன்.
அப்படியானால் நோட்டீசை தூக்கிக் குப்பையில் போடு என்றேன். அப்பா விட மாட்டார் என்றான் அவன்.
2. கலாவதி பாஸ்கரன்
ஊனம்
பிரதோஷ அபிஷேகம் பார்த்துவிட்டு கோவில் வாசலுக்கு வந்த சீதாவின் கண்ணில் அந்த நொண்டி பிச்சைக்காரன் தென்பட்டான். மிகவும் பாவமாக இருந்தது அவளுக்கு. சும்மா காசு கொடுக்காமல் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று நினைத்தாள். ஒரு வாரத்திற்குள் அவளுக்கு தெரிந்த நண்பர்களிடம் உதவி பெற்று ஒரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து, 'இனி பிச்சை எடுக்காமல் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்' என்றாள்! அந்த பிச்சைக்காரன் 'எத்தனை பேர் இப்படி என் பிழைப்பை கெடுக்க வராங்க பாரு' என்று பக்கத்தில் இருந்தவனிடம் அலுத்து கொண்டு, 'இந்த வண்டியை விற்க ஆள் பாரு' என்றான்.
.
Comments