Skip to main content

ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகம்

அழகியசிங்கர்  

ஆரம்பத்தில் நான் சுவாமி விவேகானந்தர் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.   The Complete works of Swami Vivekananda  Part 1   என்ற புத்தகத்தை நான் ஆர்யகவுடர் ரோடில் உள்ள ரேஷன் கடை க்யூவில் நின்றுகொண்டு படித்ததாக நினைப்பு.  இது எப்பவோ நடந்த சம்பவம்.  எனக்கு விவேகானந்தர் புத்தகம் வீரமாக இருப்பதற்கு தைரியத்தைக் கொடுப்பதாக நினைப்பேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  வீரமாக இருப்பதற்கு பெரிய போராட்டம் எல்லாம் இல்லை.  மெதுவாக விவேகானந்தர் என்னிடமிருந்து உதிர்ந்து போய் விட்டார்.  அவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்கள் சொல்வதன் மூலம் கேட்டிருக்கிறேன்.

அவர் இறந்து போனபோது அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கேள்விப்பட்ட செய்தி என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. கம்பீரமான அவருடைய புகைப்படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவருக்கு காமெரா மூளை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஒரு தடியான புத்தகத்தை அவர் வெறுமனே  சில நிமிடங்களில் புரட்டிப் பார்த்தே உள் வாங்கிக் கொள்வார் என்று  சொல்வார்கள்.  அந்தப் புத்தகத்திலிருந்து யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் என்று சொல்வார்கள்.  அதெல்லாம் எந்த அளவு உண்மை என்று தெரியாது.  ஆனால் உலக அரங்கில் எல்லோரும் வியக்கும்படி செய்து காட்டியவர்.   

இந்தத் தருணத்தில்தான் நான் ஜே கிருஷ்ணமூர்த்தி என்ற தத்துவஞானியைப் பற்றி  அறியத் தொடங்கினேன்.  அதுவும் அந்தக் காலத்தில் தீவிர எழுத்தாளர்கள் பலரும் ஜே கிருஷண்மூர்த்தியை எழுத்தில் கொண்டு வந்து விடுவார்கள்.  ஆனால் ஒருவர் ஜே கிருஷ்ணமூர்த்தியை மட்டும் வாசித்தால் போதும்.  கதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ வாசிக்கத் தோன்றாது. கிருஷ்ணமூர்த்தியே போதும் என்ற எண்ணம் தோன்றும்.  திறமையாக கவிதைகள் எழுதி வந்த ஒரு கவிஞர், ஜே கிருஷ்ணமூர்த்தி படிக்கத் தொடங்கியபோது மாறி விட்டார். 'இங்கு எழுதுவதெல்லாம் வீண்.  கிருஷ்ணமூர்த்தி ஒருவரே போதும்,' என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார். அவர் சொல்வதைக் கேட்டு நானே திகைத்து விட்டேன். உண்மையில் கிருஷ்ணமூர்த்தியைப் படிக்கத் தொடங்கினால் போதும், எல்லோரும் பற்றற்ற நிலைக்கு வந்து விடுவார்கள்.  எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் போய்விடும்.

என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் குறிப்பிடுவார்.  'ஜே கிருஷ்ணமூர்த்தியைப் படிக்காதீர்கள்... நம்மை எழுத விடாமல் செய்து விடுவார்,' என்று. நான் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டம் என்றால் அங்கு போய் நின்றுவிடுவேன்..கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை எல்லாம் விடாமல் வாங்கி வீடுவேன்.  இன்னும் கூட நினைவில் இருக்கிறது.  கிருஷ்ணமூர்த்தியின் Awakening of Intelligence  என்ற புத்தகத்தை வாங்கியது. 

ஒவ்வொரு கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கும்  பிரமிள் வந்துவிடுவார்.  அவர் கதைகள் சொல்வார்.  கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி மற்றவர்களைப் பற்றி. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் பிரமிள்.  

    நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் பிரமிளுக்கு இருந்தது.  ஆனால் அவரால் எழுதமுடியவில்லை.  காரணம் கிருஷ்ணமூர்த்திதான் என்று தோன்றுகிறது. 

இப்படி பல எழுத்தாளர்களை எழுத விடாமல் செய்து விட்டாரா என்று தோன்றும்.  ஆனால் மணிக்கொடி எழுத்தாளர்களை ஜே கிருஷ்ணமூர்த்தி எதாவது செய்தாரா என்பது தெரியவில்லை.  அவர்கள் யாரும் கிருஷ்ணமூர்த்தியைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் பெரும்பாலும் கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை வைத்துக் கொண்டு  திண்டாடுவேன்.  

இதோ ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  என் கண்ணில் ஏனோ இது பட்டுவிட்டது. உண்மையில் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட அற்புதமான அனுபவத்தைத் தருகிறது இந்தப் புத்தகம்.  

Comments