Skip to main content

தினமணி மருத்துவமலர் 2016

அழகியசிங்கர்


தினமும் நானும் ஒரு இலக்கிய நண்பரும் அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோம். அவருடன் பேசிக்கொண்டே செல்வதால் என் அறிவு விருத்தி ஆவதாக நினைத்துக்கொள்வேன். நான் அவரை ஒரு அறிவாளியாகவே கருதுகிறேன். நாங்கள் நடந்தபிறகு சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பார் வடை ஒரு காப்பி வாங்கி இருவரும் பகிர்ந்து உண்போம்.  சரவணபவன் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் எதாவது ஒரு பத்திரிகை வாங்குவதற்கு பார்த்துக் கொண்டிருப்பேன்.

அன்று என் கண்ணில் பட்டது தினமணியின் மருத்துவ மலர் 2016 என்ற புத்தகம்.  அதன் விலை ரூ.30 தான்.  192 பக்கங்கள் கொண்ட மலர்.  தொடர்ந்து 19 வருடங்களாக இந்த மலர் வந்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையும் வெளிவரும் இந்த மருத்துவ மலரைப் பார்க்கும்போதெல்லாம் வாங்கி விடுவேன்.  வாங்குவதோடல்லாம் சேகரித்தும் வைத்திருப்பேன்.  

இந்த மலர் சிரத்தையுடன் சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.  ஒரு முறை இந்த மலர் வாங்க தவறி விட்டால் பின்னால் வாங்கவே முடியாது.  விற்று தீர்ந்து விடும்.   இந்த முறை இந்த மலரை வழவழப்பான தாளில் சிறப்பான முறையில் அச்சடித்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறையும் இந்த மலர் எதாவது ஒன்றில் கவனம் செலுத்துவார்கள்.  கண்பொறையால் நான் ஒரு முறை அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு தினமணி மலர் முழுவதிலும் கண்பொறையைப் பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது.  

இந்த மருத்துவ மலர்களை ஏன் படிக்க வேண்டும்?  ஒரு சாதாரண மனிதன் நோய்களைப் பற்றி எளிய தமிழ் மொழியில் அறிந்து கொள்ள இந்த மருத்துவ மலர்கள் வாய்ப்பளிக்கின்றன.

நான் இந்த மலர்களை எல்லாம் சேகரித்துக் கொள்வதற்குக் காரணம் இதை ஒரு கெயிட் புத்தகமாக நான் கருதுகிறேன்.  இன்றைய சூழ்நிலையில் ஒரு மருத்துவரைப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.  மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.   சர்வசாதாரணமாக பல நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அமரும் வரிசையில் நாமும் அமர்ந்தால், நம்ம நோய் அவர்களுக்குப் போவதற்குப் பதிலாக அவர்களுடைய நோய் நமக்கு தொற்றிக் கொண்டு விடும் என்ற பயம் வரும். 

மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது.  அதிகமாக வரும் நோயாளிகளைப் பார்த்து பார்த்து அவர்களும் சோர்வு அடைந்து விடுவார்கள். நம் நாட்டு மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்போல் தோன்றுகிறது.

மருத்துவமலரைத் தவிர பல பத்திரிகைகள் மருத்துவ பத்திரிகைகள் கொண்டு வருகின்றன.  மாதம் இருமுறை குங்குமம் என்ற பத்திரிகை டாக்டர் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறது. அதேபோல் ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகளும் கொண்டு வரகின்றன.  ஆனால் அதிகப் பக்கங்கள் கொண்ட தினமணி மருத்துவ மலர் நாம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.  ஆண்டுக்கு ஒரு முறை வரும் மருத்துவ மலரை வாங்கினால் போதும், மற்றப் பத்திரிகைகள் தேவை இல்லை. 

நாம் எப்படி ஒரு அகராதியை அடிக்கடி படிப்பதில்லையோ அதேபோல் மருத்துவ மலர்களையும் அடிக்கடி படிக்க மாட்டோம்.  ஆனால் நமக்கு எதாவது பிரச்சினை என்றால், எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதை இதுமாதிரியான மருத்துவ மலர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த மருத்துவ மலர்களில் எழுதுபவர்களும், அனுபவமிக்க டாக்டர்களே எழுதுகிறார்கள்.  மூட்டு அழற்சியைப் பற்றி இந்த மருத்துவ மலர் அதிகமாக கவனம் செலுத்தி எழுதியிருக்கிறது.   

இந்த மலரில் பல உபயோகமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.  இறுதி நாள்களின் வேதனையை நீக்கும் அரவணைப்பு மருத்துவம் பற்றி ஒரு கட்டுரை விவரிக்கிறது.  அந்திம காலத்தில் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவர்களை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதை அக் கட்டுரை தெரிவிக்கிறது.  குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி இம் மலரில் பல கட்டுரைகள் அலசுகின்றன.  புற்று நோய் பற்றியும், சர்க்கரை நோய் பற்றியும் பல கட்டுரைகள் அலசுகின்றன.   

இந்த மருத்துவமலர் என்னதான் நோய்களைப் பற்றி சொன்னாலும், இன்னும் சில நோய்களின் தன்மைகளைப் பற்றி தீவிரமாக அலச வேண்டுமென்று தோன்றுகிறது.  குறிப்பாக முதியோர்கள் நலனைப் பற்றி எந்தக் கட்டுரையும் இல்லை.  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிலிருந்து மீள என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாக ஆராயவில்லை.

சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் இன்றைய உலகத்தில் பலரை ஆட்டிப் படைக்கின்றன.  அவற்றைப் பற்றி இன்னும் நீண்ட கட்டுரைகள் அவசியம்.  ஆனால் 19 வருடங்களாகக் கொண்டு வரப்படும் தினமணி மருத்துவ மலரில் பழைய இதழ்களில் இவற்றைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.  
முதியோரைப் பாதுகாபபது எப்படி?  ஏன் முதியோர்களை அலட்சியப் படுத்துகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும்.  

94 வயதாகும் என் அப்பா இதுவரை பெரிய அளவில் எந்த மருத்துவரையும் பார்த்ததில்லை.  இப்போது முதுமையின் பிடிப்பில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். அறையை விட்டு வெளியே வர முடியவில்லை.  படுக்கையில் படுத்தபடி இருக்கிறார் அவரை நினைத்தால் எனக்கு இரவெல்லாம் தூக்கம் வருவதில்லை.

அவர் வாழ்நாள் முழுவதும் ஹோமியோபதி மருந்துகளே உட்கொண்டிருக்கிறார்.  கடந்த ஓராண்டாக ஹோமியோபதி மருந்துகளையும் அவர் சாப்பிடவில்லை. இப்போது கூட  என் கை நாடியைப் பிடித்து ஏன் படபடப்பாய் இருக்கிறது என்பார்.

தினமணி மருத்துவ மலரி 2016 - ஆசிரியர் : வைத்தியநாதன் - பக்கம் 192 - விலை ரூ.30

Comments