Skip to main content

ஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்

ஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்

பிரபு மயிலாடுதுறை



சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.கடற்காற்றின் உப்பு முகத்தில் வீசும் மதியப் பொழுதில் கோயக்கரை நோக்கி செல்லும் சாலையில் ஒரு உப்பளத்தில் நின்றிருந்தோம்.உப்பு படிகமாகி குவித்து வைக்கப்பட்டிருந்தது.அக்குவியல் கதிரொளியில் ஒளிர்ந்து ஒளியை பிரதிபலித்து அடர் வெண்நிறம் கொண்டிருந்தது.வாகனத்தை நிறுத்தி விட்டு உப்பளத்துக்குள் சென்றோம்.கரங்களில் உப்பை ஏந்தினோம்.மெல்லிய எடை கொண்டு கரத்துக்கு குளிர் ஸ்பரிசத்தை அளித்தது பிடி உப்பு.அதன் கரடுமுரடான மேற்புறம் அழுத்தினால் அமுங்கித் தூளாகியது.லூயி ஃபிஷரின் காந்தி வாழ்க்கை நூலின் உப்பு சத்தியாக்கிரகம் குறித்த அத்தியாயம் பற்றி சொன்னேன்.உப்பளப் பணியாளர்களான பெண்கள் நாங்கள் ஆர்வத்துடன் உப்பளச் செயல்பாடுகளை கவனிப்பதைப் பார்த்து விட்டு உப்பு பாக்கெட்டுகளை கொண்டு வந்து கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினர்.உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதில் சாரம் இருக்கும் என்பது விவிலிய வாக்கியம்.

அப்போது ஓர் ஐரோப்பிய தம்பதி சைக்கிளில் வந்தனர்.ஃபிரான்ஸ் நாட்டுக் குடிமக்கள் அவர்கள்.பாரிஸில் புறப்பட்டு துருக்கி,அரேபியா,ஈராக்,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தேசங்களில் சைக்கிளிலேயே பயணித்து வாகா எல்லைச் சாவடி வழியே இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.அமிர்தசரஸிலிருந்து மும்பை.அங்கிருந்து சென்னை.புதுச்சேரி,காரைக்கால் வழியே கோடிக்கரை.சரளமாக ஆங்கிலம் பேசினர்.உலகெங்கும் உலவும் நீங்கள் இப்போது பயணிக்கும் நிலம் தமிழ் என்ற உயர்தனிச்செம்மொழியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உச்சரிக்கும் பெருமை கொண்டது என தமிழையும் தமிழ் நிலத்தையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.உலகின் மிகச் சில நிலப்பகுதிகளுக்கு மட்டுமே உரிய பெருமை இது.

நாம் நமது மொழி பெருமை மிக்கது;சிறப்பு மிக்கது என்பதையே திரும்பத் திரும்ப கூறுகிறோம்.ஆனால் ஒரு செம்மொழியை உடையவர்களாய் நமது செயல்பாடுகள் அமையவில்லை.தமிழ் நூல்கள் 2000 பிரதி விற்பனையாவது என்பதே மாபெரும் சாதனையாக பேசப்படுகிறது.உலகெங்கும் 7 கோடி தமிழ் பேசும் மக்கள் இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவான நூல் விற்பனை என்பதே சூழலை உணர்த்தும் உரைகல்.தமிழ்நாட்டின்,பத்தாம் வகுப்பு மாணவனின் பாடப்புத்தகத்தையும் விடைத்தாளையும் பார்த்தால் நம் மொழி எவ்வளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது என அறிய முடியும்.நம்மில் எத்தனை பேர் வாழ்வில் ஒரு முறையாவது 1330 குறளையும் வாசித்திருப்போம்?சிலப்பதிகாரத்தை கதையாக அல்லாமல் இளங்கோ அடிகளின் பிரதியாக படித்திருப்போம்?கம்ப ராமாயணம் எத்தனை பேர் வீட்டில் உள்ளது?

செய்யுள் இயற்றும் பண்டிதர்களுக்கு உரியதாயிருந்த மொழியை உரைநடைக்கு கொண்டு வந்த முதன்மையான பணியை ஆற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர்.ஆன்மீகத் துறையிலும் சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும் அவர் பங்களிப்பு எவ்வளவு பெரியதோ அதை விடப் பெரியது தமிழ் உரைநடையில் அவரது பங்களிப்பு.தமிழ்நாட்டில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அத்வைதமும் சுவாமி விவேகானந்தரின் வேதாந்தமும் மக்களைச் சென்றடைந்த போது விவேகானந்த இலக்கியத்தை தமிழுக்கு கொண்டு வந்தவர்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் சுவாமி சித்பவானந்தர்.மொழியில் நீண்ட காலம் செயல்பட்ட வரலாற்றினை உடையவர்.இதழியல்,சிறுவர் நூல்,அபுனைவு,சரிதம்,புனைவு,நாடகம் மற்றும் உரைநூல் ஆகியவற்றில் படைப்பூக்கத்துடன் ஈடுபட்டவர் சுவாமி சித்பவானந்தர்.

நான் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்த போது, சுவாமி சித்பவானந்தரின் ‘ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’ என்ற நூலை எனது தந்தை வாங்கித் தந்தார்.வீட்டுக்கு வந்தவுடனே வாசிக்கத் தொடங்கினேன்.அன்று இரவுக்குள் பாதி புத்தகத்தை வாசித்தேன்.மீதியை மறுநாள் காலை வாசித்து முடித்தேன்.சுவாமி விவேகானந்தரை மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் தமிழ் நூல் அது.அன்று வாசித்த பல பகுதிகள் இன்னும் நினைவில் உள்ளன.’ஆளுடைய அண்ணலை அடைதல்’,’தேச சஞ்சாரம்’,’பாரதத் தாயின் திருவடியில்’,’அலைகடல் தாண்டுதல்’,’நானாவித அலுவல்கள்’ ஆகிய அந்நூலின் அத்தியாயத் தலைப்புகளே கவித்துவமாக இருக்கும்.

பகவான் புத்தரைப் பற்றி அவர் எழுதிய நூல் ‘உலகை உய்வித்த உத்தமன்’.சித்தார்த்தன் ஒரு கடைவீதியை காணும் காட்சியை சித்பவானந்தர் கீழ்க்கண்டவாறு சித்தரித்திருப்பார்:

‘’வழக்கமான வீதிகளில் நிகழ்ந்துவந்த நடமாட்டங்களை அரசகுமாரன் காண்கின்றான்.ஆடம்பரமான ஆடைஆபரணங்கள் உலகில் உள்ள எல்லா மக்களிடத்தும் கிடையாது.எளிய வாழ்க்கைவாழ்கின்றவர்களே உலகில் பெரும்பான்மையோர் ஆகின்றனர்.கடைவீதியில் பண்டங்களை விற்பதும் வாங்குவதும் விரைவாக நடைபெறுகிறது.விற்பவன் விலையைச் சிறிது கூட்டிச் சொல்வதும் வாங்குபவன் அதைச் சிறிது குறைத்துக் கேட்பதும் யாண்டும் நிகழ்கிற காட்சியாகும்.கன்னான் பாத்திரங்களைத் தட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.கொல்லன் இரும்பைக் காய்ச்சி அடித்துக்கொண்டிருக்கிறான்.மளிகைக்கடைக்காரன் தானியங்களை அளந்து கொட்டி பணத்தை வாங்கிச் சுண்டிப்பார்த்துப் பையில்போடுகிறான்.பழவகைகளைக் கூடையில் வைத்து விற்றுக்கொண்டு வருகிறான் ஒருவன்.நன்றாகத் துலக்கி மினுக்கெடுத்த நீர்க்குடங்களைத் தலையில் வைத்துக்கொண்டு உல்லாசமாகப் போகின்றனர் பெண்பாலர் பலர்.ஒட்டகத்தின் மீது உட்கார்ந்துகொண்டு ஒய்யாரமாக அசைந்து அசைந்து போகிறான் ஒரு வழிப்போக்கன்.வீதியில் தூசைக் கிளப்பும் வண்ணம் வண்டியோட்டுகிறான் வண்டிக்காரன்.வண்டிக்கு முன்னே நடப்பவர்களை வழிவிடும்படி இடையிடையே அவன் கத்துகிறான்.பள்ளியில் பிள்ளைகளில் சிலர் உற்சாகத்துடன் படிக்கின்றனர்.இன்னும் சிலர் அரைமனதுடன் படிக்கின்றனர்.நெற்றி வியர்வை நிலத்தில் விழ மூட்டை சுமைக்கிறான் ஒருவன்.உழைக்க மறுதலித்துக் கொண்டு மற்றொருவன் வெறுமனே சோம்பேறியாக உட்கார்ந்திருக்கிறான்.மாறுவேடம் பூண்டு வந்துள்ள சித்தார்த்தனுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகள் விளங்குகின்றன.வாழ்க்கையில் ஊக்கம் படைத்தவர்கள் இருக்கிறார்கள்;சலிப்படைந்தவர்கள் இருக்கிறார்கள்.இன்பப்படுபவர்கள் உலகில் இருக்கிறார்கள்;துன்பப்படுபவர்களும் இருக்கிறார்கள்.வாழ்வில் வெற்றியடைபவர்களும் இருக்கிறார்கள்;தோல்வியடைபவர்களும் இருக்கிறார்கள்.”

படைப்பூக்கம் கொண்ட மொழியில் இச்சித்தரிப்பு உள்ளதைக் காணலாம்.
திருவாசகத்துக்கு சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள உரை சிறப்பானது.இந்து ஞான மரபை விளக்கி ஒரு விரிவான குறிப்பை அதன் முன்னுரையில் எழுதியிருப்பார்.ஷண்மதங்கள் எவை?ஆறு தரிசனங்களைப் பற்றிய விளக்கம்.புராணங்களின் உருவாக்கம்.இதிகாசங்கள்.அவற்றின் மேன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்பை வழங்கியிருப்பார்.பகவத் கீதைக்கு அவர் எழுதிய உரை மிகப் பிரபலமானது.சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக,பகவத் கீதை மீது முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு நிதானமான அறிவார்ந்த முறையில் சுவாமிகள் அளித்துள்ள விளக்கமாக அம்முன்னுரை அமைந்துள்ளது.கீதை கொலை நூலா?என்ற வினாவை எதிர்கொண்டு அவர் அளித்துள்ள விடை கீதையைப் புரிந்து கொள்ள மிகவும் முக்கியமானது.

கல்வி என்றொரு சிறுநூலை சுவாமிகள் இயற்றியுள்ளனர்.பள்ளிக்கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என தன் அபிப்ராயங்களை அதில் தெரிவித்திருப்பார்.மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவை கல்வி நிலையம் அமைந்துள்ள ஊரின் செல்வந்தர்களும் பொதுமக்களுமே ஏற்க வேண்டும்.மாணாக்கருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும்.ஆண்டுக்கொரு முறை பத்து நாட்கள் கடற்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு மாணாக்கருக்கு வழங்கப்பட வேண்டும்,இது போன்ற பல விஷயங்களை அந்நூலில் பேசியிருப்பார்.

சுவாமி சித்பவானந்தர் தேசத்துக்காகவும் தர்மத்துக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.குருதேவர் ராமகிருஷ்ணர்,சுவாமி விவேகானந்தர் மரபில் வந்தவர்.ராமகிருஷ்ணரின் செய்தியை தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் கொண்டு செல்வதை தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர்.அவர் உருவாக்கிய கல்வி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.தனது பல்வேறு விதமான அலுவல்களைத் தாண்டி துடிப்பான மொழி கொண்ட படைப்பாளியாகவும் அறிஞராகவும் அவர் இருந்துள்ளார்.ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம்,ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்,ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்,விவேகானந்த உபநிஷதம்,இராமாயணம்,மகாபாரதம்,திருவாசகம் உரை,பகவத் கீதை உரை ஆகிய அவரது ஆக்கங்கள் முக்கியமானவை.


ஒரு தமிழ் அறிஞரான சுவாமி சித்பவானந்தரிடமிருந்து தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. 

Comments

படிப்பவரை புத்தகத்தை படிக்கத்தூண்டும் சரியான அறிமுக உரை;
sivanarul said…
excelent article on swamiji