Skip to main content

அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது?


அழகியசிங்கர்


சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன்.  அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.  அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டவர், ஒரு அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியைக் கூறினார்.  நான் இப்போதெல்லாம் படிப்பதில்லை என்பதுதான் அது.

ஒரு காலத்தில் அவர் வார் அன்ட் பீஸ் என்ற டால்டாய் நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தவர். 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள டால்ஸ்டாய் நாவலை மூன்று நாட்களில் படிததவர் என்ற தகவல் எனக்கு அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.  ஏன் என்றால் என்னால் அதுமாதிரி படிக்க முடியாது.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்தேன்.  அந்தப் புத்தகத்தை 3 நாட்களில் படித்தேன் என்று பெருமையுடன் சொன்னாரே தவிர, அது எப்படிப்பட்ட புத்தகம் என்பதை சொல்லவில்லை.  அவர் சொன்னதில் எதுவும் புத்தகம் பற்றிய தகவல் இல்லை.  அந்த மொத்தப் புத்தகத்தையும் 3 நாட்களில்  படித்தேன் என்பதைத் தவிர வேற ஒன்றுமில்லை. மேலும் அவர் அப் புத்தகத்தை 3 நாட்களில் முடித்தார் என்ற தகவலால், நான் அப் புத்தகத்தை வைத்திருந்தும் ஒரு பக்கம் கூட படிக்க ஆரம்பிக்கவில்லை.  காரணம் 2000 பக்கங்கள்.  மேலும் அவர் 3 நாட்களில் முடித்துவிட்டார். நம்மால் முடியாது என்ற அவ நம்பிக்கை.  அதனால் அப்புத்தகத்தை படிக்காமலேலேய 30 ஆண்டுகளாக நான் இன்னும் வைத்திருக்கிறேன்.  ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று ஆரம்பித்திருந்தால், நான் எப்பவோ படித்து முடித்திருப்பேன்.  

நான் வங்கியிலிருந்து பதவி மூப்பு அடைந்த  பிறகு எனக்குப் படிக்க அதிக நேரம் இருக்குமென்று நினைத்தேன்.  பல மெகா நாவல்களை  வாங்கி வைத்திருந்தேன்.  ஆனால் படிக்க முடியவில்லை.  அதிகப் பக்கங்கள் என்னை அயர்ச்சி அடைய வைத்தன.  

நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம்.  அதுவும் அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படிக்கிறோம்.  ஏன் படிக்க வேண்டும்? அதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது.  இந்தக் கேள்வி என்னை எப்போதும் வாட்டிக்கொண்டே இருக்கும்.  வெறும் பொழுது போக்குவதற்காகப் படிக்கிறோமா?  இதற்கு சரியான பதில் இன்று வரை கிட்டவில்லை.  

Comments