அழகியசிங்கர்
ஆத்மாநாமின் பிரச்சினை உடனடியாக புகழ் வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று அவர் நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் அதுமாதிரியான பிரச்சினை இருக்குமென்று தோன்றுகிறது. குறிப்பாக எழுதுபவர்களுககு. எப்போதும் நம்முடைய எழுத்தை யாராவது படிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். பத்திரிகைகளில் தினசரி தாள்களில் எதாவது படைப்புகள் வெளிவந்தால் அதை உடனடியாக தெரிந்தவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
இப்போதாவது முகநூல் என்ற ஒன்று இருக்கிறது. அதன் மூலம் நாம் தெரிவிக்கிற கருத்துகளை உடனுக்குடன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்போது ஒருவருக்குக் கிடைக்கிற இந்த அங்கீகரிப்பு அன்று மட்டும் இருந்திருந்தால், ஆத்மாநாம் போன்றவர்கள் தற்கொலையே செய்திருக்க மாட்டார்கள்.
அவர் எழுதி வைத்த அத்தனை கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வழி இல்லாமல் தவித்தார். அந்தச் சமயத்தில் அவர் எழுதிய வேகத்தில் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று தெரியவில்லை.
நம் முன்னே விரிந்து கிடக்கும் இந்த உலகம் கொடூரமானது. அதை நாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேற வழி இல்லை.
ஆத்மாநாமிற்கு இதெல்லாம் தெரியாது. கட்டாயம் தெரிந்திருக்கும். திறமையாக கவிதை எழுதத் தெரிந்த ஒருவருக்கு இதெல்லாம் ஏன் தெரியாது. அப்படி தெரிந்தாலும ஒரு கேள்வி உள்ளே உழன்று கொண்டே இருக்கும்.
üஏன் எல்லோருடைய கவனத்திற்கு எழுத்து போகவில்லை என்ற கவலை.ý அதைப் பற்றி யோசிக்க யோசிக்க பூதம் போல் அது வளர்ந்து கொண்டே அவரையே விழுங்கக் காத்திருக்கும்.
விடுதலை என்ற கவதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்:
கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக் கண்ணாடிச் சிறைக்குள்
நான்
அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்
திறக்கும் வழியே இல்லை.
இதுதான் பிரச்சினை. ஆத்மாநாமின் பிரச்சினை. அவருக்குத் தெரியவில்லை நம்மைச் சுற்றிலும் எந்தக் கண்ணாடிச் சிறையும் இல்லை என்பது. நாமே கற்பித்துக் கொள்வதுதான் இந்தக் கண்ணாடிச் சிறை என்று. இப்படி வேறு விதமாக அவர் யோசித்திருந்தாலும் எதைக் குறித்து அவர் கவலைப் பட்டிருக்க மாட்டார்.
நம்முடைய சராசரி நிலையை உணர்ந்து சாதாரணமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் உடனடியாக புகழ் வேண்டும் என்ற வேதாளத்தைப் பிடித்துத் தொங்கியிருக்க வேண்டாம்.
ரொம்ப ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தார். இப்போதென்றால் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, ஷ்ரூதி டிவியைக் கூப்பிட்டு படம் எடுக்க வைத்து நாலு பேர்களைப் பேசக் கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் தெரியவில்லை.
கவிதை நூலை கொண்டு வந்தவர் அதை எப்படி விற்பது என்பது கூட தெரியவில்லை. அவருக்குத் தெரிந்த இன்னொரு கவிஞருக்கு அந்தப் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து, படித்து அபிப்பிராயம் சொல்ல சொன்னார். ஏன் இது மாதிரி பெரிய தப்பை செய்தார் என்று தெரியவில்லை. அந்த இன்னொரு கவிஞரும் அந்தப் புத்தகத்தை வாங்கியவர், அக் கவிதைப் புத்தகம் குறித்து எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை. கவிதை எழுதியவரும் விடாமல் அவரைப் பார்த்துக் கேட்க, வேற வழி இல்லாமல் அவர் சொன்ன கருத்து, கவிதைகள் பிடிக்கவில்லை என்பதுதான்.
என்ன பெரிய அடி கவிதை எழுதியவருக்கு..இதற்கு அடிப்படையான காரணம். ஆத்மாநாமின் சின்டரம்தான். உடனடியாக புகழ் வேண்டும்..ஆனால் சுஜாதா என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். உலகத்தில் எல்லோரும் சில நிமிடங்களாவது புகழ் அடைந்து விடுவார்கள் என்பது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
ஆனால் ஆத்மாநாமைப் பொறுத்தவரை அது தற்கொலை வரை போய் கொண்டு விட்டது. சரி, நாம் வசித்துக் கொண்டிருக்கும் வீடு நம்மைவரவேற்குமா? நிச்சயமாக இருக்காது...ஆத்மநாமிற்கு வீடு கண்டு கொள்ளவே இல்லை. அவர் அன்புக்காக ஏங்கினார்.
அவருடைய வெளியேற்றம் என்ற கவிதையைப் படித்துப் பார்க்கலாம்.
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாம் எதிர்பார்த்தது ஒரு புன்னகைதான், ஒரு கை அசைப்புதான்
ஆனால் அது கூட கிடைக்கவில்லை. என் கேள்வி ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார் என்பதுதான். ஆத்மாநாம் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிழல் ஆத்மாநாமன்களாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
Comments