அழகியசிங்கர்
மேற்படி ஐந்தாவது கூட்டமானது வரும் ஞாயிறு (08.05.2016) மாலை 5 மணிக்கு நடேசன் பூங்காவில் அரங்கேற்றம் நடாத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.நமது நண்பர் ஒருவர் அடிக்கிற கூத்தை யாராலும் தடுக்க முடியாது போல் இருக்கிறது. நாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கூட்டத்தைப் பார்த்து, பூங்காவிற்கு வரும் மக்கள் தொகை குறைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இப்படியே போனால் பூங்காவிற்கு யாரும் வராமல் போகலாம் என்று பயமுறுத்துகிறார்.
நடேசன் பூங்காவில்தான் கூட்டம் நடத்த வேண்டுமா வேற எங்காவது போகலாமா என்று அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவைப் பார்த்தேன். மெட்ரோ ரயில் ஓடும் பக்கத்தில் அந்தப் பூங்கா வீற்றிருக்கிறது. தினமும் நான் நடை பயிற்சி செய்யும் இடம். ஆனால் அந்தப் பூங்காவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்சினை. சேனல் மியூசிக் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது சரிப்பட்டு வராது. நாம் படிக்கும் கதைக்குப் பதிலாக மியூசிக் கேட்கும்படி நேர்ந்தால்..அதனால் அதை விட்டுவிட்டேன். திரும்பவும் இந்த முறை நடேசன் பூங்கா. அடுத்த முறை வேற எதாவது பூங்கா கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களுக்கு எதாவது பூங்கா தென்பட்டால் தெரிவிக்கவும்.
யாராவது கூட்டத்திற்கு வந்திருந்து கலந்து கொள்ள ஆசைப் பட்டால் அவர்களுக்கு மின்சார வண்டி அல்லது பஸ்ஸில் வர வசதியாக ஒரு இடம் வேண்டும். அதற்கு நடேசன் பூங்காதான் சரி.
இந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு மெனனியின் கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிக்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.
யாராவது புதிதாக எழுதி உள்ள கதையோ கவிதையோ வாசிக்கலாம்.
படிப்பவர் வேறு கேட்பவர் வேறு. படிப்பவர் படிக்கும்போது, கேட்பவர் கூட்டத்தை நெறிப் படுத்துபவராகவும், அதேசமயத்தில் கதையையோ கவிதையையோ உற்று கவனிப்பவராக இருக்க வேண்டும். யாரும் அதிகப் பக்கங்கள் கொண்ட கதையைப் படிக்கக் கூடாது. தண்ணீர் தாகம் எடுப்பவர் கையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவும். வாசிப்பவர் நிதானமாக வாசிக்கவும். கணீரென்று பூங்கா முழுவதும் உள்ளவர்கள் கேட்பது போல் வாசிக்க வேண்டும். படிக்கும்போது எங்காவது தடுமாறினால், இன்னொரு முறை வாசிக்கலாம். வாசித்துக்கொண்டிருக்கும்போது காதைத் துளைப்பதுபோல் சத்தம் வந்தால் ஒரு வினாடி நிறுத்தி விட்டு பின் தொடரலாம்.
வாசிப்பவர் யார் வாசிக்கிறார்கள் என்றும், யாருடைய கதையை வாசிக்கிறோம் என்றும் சொல்ல வேண்டும். எல்லாம் ஆடியோவில் பதிவாகி உலகமெங்கும் ஒலிபரப்பாக உள்ளது.
கூட்டம் நடக்குமிடம் : நடேசன் பூங்கா
வெங்கடரங்கன் தெரு, தி நகர்,
சென்னை 17
வெங்கடரங்கன் தெரு, தி நகர்,
சென்னை 17
கிழமை ஞாயிறு (08.05.2016)
நேரம் : மாலை ஐந்து மணி
வாசிப்புக்கு தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1. மௌனி கதைகள்
2. ஆத்மாநாம் கவிதைகள்
2. ஆத்மாநாம் கவிதைகள்
ஒரு வேண்டுகோள் :
ரொம்ப தூரத்தில் இருந்து யாரும் இக் கூட்டத்திற்கு வரவேண்டாம். போகலாமா வேண்டாமா என்று தோன்றினால் போக வேண்டாமென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளூங்கள்.
இப்போது முதல் கூட்டத்தில் நாங்கள் வாசித்த கதையை ஆடியோவில் க்ளிக் பண்ணிக் கேட்கவும். சுவாரசியமாக இருக்கும்.
Comments