Skip to main content

ஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை?

அழகியசிங்கர்



சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் எனக்கு போன் செய்தார்.  "ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.  "நிச்சயமாக," என்றேன்.  "ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும்," என்றார்.

நான் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  என் வீடு பக்கத்திலேயே அவர் வீடு இருந்தது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.  

சிலசமயம் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார். அவர் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக்கிழமையில் நான் போயிருக்க மாட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.  அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்னொரு ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, "உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்," என்று அவர் மனைவிதான் குறிப்பிடுவார்.

அவரால் நடக்கவே முடியாது.  ஆர்யக்கவுடர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் அவரால் நடந்தே போக முடியாது.  நான் டூ வீலரில் அவரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போவேன்.  அப்போது டூ வீலரை ஜாக்கிரதயாக ஓட்டுவேன்.  ஏன் எனில் அவர் குள்ளமாக குண்டாக இருப்பார்.  எனக்கு டூ வீலர் ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்படுமோ என்று தோன்றும்.

ஏடிஎம் இருக்கும் இடத்திற்குப் போவோம்.  பின் மெதுவாக படி ஏறுவார். சில படிகள் என்றாலும் அவருக்கு ஏறுவதில் தடுமாற்றம் இருக்கும்.  நான் அவருக்கு உதவி செய்வேன்.  என் தோள்பட்டையைப் பிடித்தபடி படிக்கட்டு ஏறுவார்.

ஏடிஎம் அறையில் அவரிடம் உள்ள கார்டை என்னிடம் கொடுத்து விடுவார். ஏடிஎம் பெட்டியில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியாது.  ரொம்ப மெதுவாக சீக்ரெட் எண்களைச் சொல்வார்.  

அவருக்கு என் மீதே சநதேகம் வந்து விடுமோ என்று தோனறும்.  அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன்.  அந்தத் தொகையை அவர் 15 நாட்கள் அல்லது 30 நாட்கள் வைத்துக் கொண்டு செலவு செய்வார்.  ஏன் அவரால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்று பலமாக யோசிப்பேன்.  அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கும். 

பின் அங்கிருந்து நாங்கள் ஜேபி டிபன் சென்டருக்குப் போவோம்.  எனக்கும் அவருக்கும் பொங்கல் என்றால் பிரியம்.  மேலும் ஜேபி டிபன் சென்டரில் டிபன் செலவு குறைவாக இருக்கும்.  அவர் சரவணா ஓட்டலுக்குப் போவதை விரும்ப மாட்டார்.

வாரத்திற்கு ஒரு முறை அவர் இப்படி வெளியில் வருவதுண்டு.  மற்றபடி வீட்டிலேயே இருப்பார்.  எங்கும் போக முடியாது.  போகவும் மாட்டார்.  அவர் வீட்டில் வைத்திருக்கும் புத்தகங்கள் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருப்பார். அவற்றைப் படித்து எழுதுவார். அவர் வீட்டில் கணனி கிடையாது.  அவருக்கு உபயோகப் படுத்தவும் தெரியாது.

மின்சாரக் கட்டணத்தை அவருக்காக இன்டர்நெட் மூலம் நான் கட்டுவேன். நான் கட்டிக் கொடுத்தாலும் அதை அவர் நம்ப மாட்டார்.  அதைக் கட்டுவதற்காக ஒருத்தரை உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.  உதவி செய்பவ் நேரில் போய் மின்சாரத் தொகையை கட்டினால்தான் நம்புவார்.

"கொஞ்சமாவது நடக்க முயற்சி செய்யுங்கள்,"என்பேன்.  அதைக் கேட்கவே அவர் விரும்ப மாட்டார்.

ஒரு முறை ஒரு கல்யாணத்திற்கு என்னை அழைத்துப் போகச் சொன்னார். "நீயும் வா..தெரிந்தவர்கள் கல்யாணம்தான்," என்றார்.  "நான் எப்படி வருவது. என்னை யாருக்கும் தெரியாதே?," என்றேன்.  "பரவாயில்லை...வா..யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.  நான் உன்னைக் கூப்பிடுகிறேன்," என்றார்

நான் வேறு வழி இல்லாமல் என்னுடைய நானோ காரில் அவரை அழைத்துக் கொண்டு போனேன்.  என் காரில் அவர் உட்கார்ந்தாலும் அவர் முகத்தில் நான் சரியாக ஓட்டுகிறேனா என்ற பயம் இருந்துகொண்டு இருக்கும்.

நாங்கள் இருவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றோம்.  முதல் மாடியில் கல்யாணம்.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  சாபபிட்டுவிட்டு மாடிப்படிக்கட்டுகள் வழியாக இறங்கினோம்.  அவரால் இறங்க முடியவில்லை.  மூச்சு வாங்கியது.  எனக்கு திகைப்பாக இருந்தது.  ஒருவர் ஏறுவதற்குத்தானே திணறுவார்.  இவர் இறங்கவே தடுமாறுகிறாரே என்று நினைத்தேன்.   அவரை வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

பின் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப் போய் பொங்கல் வாங்கினேன். அவரும் வந்திருந்தார்.  திடீரென்று உட்கார்ந்து விட்டார்.  ஒரு மாத்திரை பெயரைச் சொல்லி உடனே வாங்கி வரச் சொன்னார். எதிரில் அப்போலோ பார்மஸியில் வாங்கி வந்தேன்.  மாத்திரையை விழுங்கியபிறகு அவருக்கு சரியாகிவிட்டது.  வீட்டில் கொண்டு வந்து விட்டேன்.  இனிமேல் அவரைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.  அப்படிப் பார்த்தாலும் வெளியே அழைத்துப் போகக் கூடாது என்று நினைத்தேன்.  ஒரு நாள் மதியம் அவர் மனைவி மடியில் இறந்து விட்டார்.  அன்று அவர் விபூதிப் பூசிக்கொண்டு பளிச்சென்று இருந்தார்.

ஒவ்வொரு முறை நான் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, 68 வயதில் ஏன் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்று யோசிப்பேன்.


Comments

sundar said…
இதைப் படிக்கும் போது காயத்ரி படப் பாடல் தான் ஞாபகம் வருகிறது “ வாழ்வே மாயமா, பெருங்கதையா, கடும்புயலா, வெறும்கனவா, நிஜமா ?”