Skip to main content

ஒரு நாள் பிரமிள் வந்தார்..

அழகியசிங்கர்






மாலை நேரம். ஒருநாள் வீட்டிற்கு பிரமிள் வந்தார். என்னைப் பார்த்து, 'இன்று முக்கியமான நாள்' என்றார்.

'என்ன?' என்றேன்

"என் பிறந்த நாள்" என்றார்

அவரை அழைத்துக்கொண்டுபோய் சரவணபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய், ஸ்வீட் வாங்கிக் கொடுத்தேன்.

******

தியோசாபிகல் சொசைட்டிகுச் சென்றோம். ஒவ்வொரு மரத்தையும் காட்டி விவரித்துக் கொண்டு வந்தார் பிரமிள். குட்டியாக இருக்கும் ஒரு மரத்தைக் காட்டி எதோ பாட்டனி பெயர் குறிப்பிட்டார். ஒரு வறண்ட குளத்திற்கு நடந்தபடியே வந்தோம். அந்தக் குளத்தில் படிக்கட்டில் அமர்ந்து ஒரு பேப்பரை எடுத்து என்பெயரை எழுதி குளத்தில் வீசினார். ஏன் என்று புரியவில்லை? ஒரு கல்லை எடுத்தபோது ஒரு கருந்தேள் கண்ணில் பட்டது.

******

அலுவலகத்தில் மத்தியான நேரத்தில் வருவார் பிரமிள். என் இலக்கிய நண்பர் ஒருவர் அப்போது என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரைப் பார்த்து, 'அது என்ன மூச்சு விடமாட்டேன்.. நான் பிறர் மீது மூச்சு விடத்தான் விடுவேன் என்றார் உரக்க. ' அந்த நண்பர் ஓடிப் போய்விட்டார்;

******

அலுவலகத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தார். சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார். எனக்கு அவர் மீது கோபம். அலுவலகப் பெண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் கமெண்ட் அடிக்கிறாரே என்று. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் சித்திரா. எப்படி இவருக்குத் தெரிந்தது என்று ஆச்சரியம்.

******

"இந்த சட்டை நன்றாக இருக்கிறது," என்றார் ஒருநாள் காலையில். வியந்தேன். இப்படியெல்லாம் இவருக்குப் பேசத் தெரியுமா என்று. நான் ஒருபோதும் அவர் என்ன சட்டைப் போட்டிருக்கிறார் என்று கவனித்தது இல்லை.

அன்று மாலை அலுவலகம் விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன். மாம்பலம் ரயில்வே நிலையத்தில் மாடிப்படிக்கட்டுகளில் ஏறி வந்தேன். சுவரில் ஒரு ஆணியில் என் சட்டை மாட்டிக் கிழிந்து விட்டது. பிரமிளை நினைத்துக்கொண்டேன்.

******

ஒருநாள் வயிற்றைத் தட்டினார். "நல்ல சாப்பிட்டிருக்கிங்க போலயிருக்கே." அன்று மாலை வயிற்று வலி . என்ன மனுசர் இவர் என்று நினைத்துக்கொண்டேன்.

******

ஊரிலிருக்கும் எல்லா சாமியார்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு சீர்டி சாய்பாபா, ஜே,கிருஷ்ணமூர்த்தி, ராம் சூரத் குமார் என்று பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பீச் ரயில்வே நிலையத்தின் அருகில் ஒரு பெண் சாமியார் பற்றிச் சொல்வார். அப் பெண் சாமியார் வடநாட்டைச் சேர்ந்தவர்.

"அவங்களைப் பிச்சைக்காரியென்று நினைக்கக் கூடாது" என்றார்.

நானும் அலுவலகம் போகும்போது அந்தப் பெண்மணியைக் கவனிப்பேன். பர்மா பஜார் கடைகளுக்கு முன்னால் கூட்டும் வேலையைச் செய்து கொண்டிருப்பார். யாரிடமும் காசு கேட்க மாட்டார். நான் அவர்களைப் பார்த்து காசுகொடுப்பேன்.

******

இன்று பிரமிள் மறைந்த தினம்.

Comments