Skip to main content

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

 அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..





அழகியசிங்கர்




என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.
திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார். ஒன்று புலிக்கலைஞன். இரண்டாவது கதை எலி .

"இரண்டு கதைகளையும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கிறார். அக் கதைகளை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்கள்?" என்று கேட்டார்.
அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நான் அக் கதைகளை உடனடியாகப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.

அந்த இரவு நேரத்தில் இரண்டு கதைகளையும் படித்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன். அக் கதைகளைக் குறித்து விசேஷமாக யார் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.

அக் கதைகளைப் படித்த மன நிறைவை அக் கதைகள் கொடுக்கத் தவறவில்லை.

அசோகமித்திரன் கதைகள் புத்தகத்தை ஒரு கெயிட் புத்தகம் மாதிரி கதை எழுத முன் வருபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.
அவர் கதைகளைக் குறித்து ஒரு பொதுவான சில கருத்துக்கள் சொல்ல விரும்புகிறேன்.

1. தொடர்ந்து ஒரு ஆசிரியரின் கதைகளைப் படிக்கும்போது சற்று அயர்ச்சி ஏற்பட்டு விடும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டதில்லை.

2. கதைகளில் எளிமை என்றால் அப்படியொரு எளிமையாக எழுதியிருப்பார்.

3. பெரும்பாலான கதைகள் இரண்டு மூன்று பக்கங்களில் முடிந்து விடும்.

4. அவர் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியிருக்க மாட்டார். அறிவுப் பூர்வமாக எழுதியிருப்பார்.

5. அவர் கதைகளில் பெரும்பாலும் நகைச்சுவை உணர்ச்சி இயல்பாக வெளிப்படும். வலிந்து திணிக்க மாட்டார்.

நண்பர் கேட்கும்போது எதையும் கோர்வையாகச் சொல்ல வரவில்லை. யோசிக்க யோசிக்க இதெல்லாம் தோன்றுகிறது.

'அசோகமித்திரன் கதைகள்' என்ற முழுத் தொகுதியில், 274 கதைகள் இருக்கின்றன.

இதில் எந்தக் கதையையும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்.
அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்த கதைகள் என்று சொன்னால் நண்பர் சண்டைக்கு வந்து விடுவார்.

நான் கண்ணை மூடிக்கொண்டு 274 கதைகளில் எதாவது ஒரு கதையைப் படிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதி அற்புதமான அனுபவத்தை கதை ஏற்படுத்தாமலிருக்காது.
நண்பர் சொன்ன இரண்டு கதைகளையும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

புலிக்கலைஞன். என்ற கதையை பலமுறை படித்திருக்கிறேன். இப்போது எத்தனையாவது முறை என்று தெரியாது . உண்மையில் இப்போது படிக்கும்போது புதியதாகப் படிப்பதுபோல் தோன்றுகிறது.

ஒரு கதை பலமுறை படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரத்த்தத்தைக் கொடுக்கும்.
அசோகமித்திரன் பொதுவாக அவர் சார்ந்த உலகத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவார். அதேபோல் இந்தக் கதையிலும் வெளிப்படுத்துகிறார். அதைச் சாதாரணமாக விளக்குவது போல் ஒருவித கிண்டல் தொனியில் தெரியப்படுத்துகிறார்.

இதோ இந்தக் கதையை எடுத்துக்கொள்வோம்.
ஒரு திரைப்படம் எடுக்கும் அலுவலகத்தில் கதைசொல்லி பணிபுரிகிறான். முதலில் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறான். அலுவலகத்தில் பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை டிபன் இடைவெளி இருந்தது. இப்போது அப்படி இல்லை என்கிறான். கடந்த ஒரு மாதமாக பத்து மணிக்கே அலுவலகம் வந்து விட வேண்டும். டிபனுக்காக பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு மணி வரை. மாலை ஐந்து மணிக்கே முடியும் அலுவலகம் ஆறு மணிவரை நீட்டி வைக்கப்பட்டு விட்டது.

புலிக்கலைஞனை அறிமுகப்படுத்தும்போது அலுவலக நிலையை வெளிப்படுத்துகிறார். ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளச்சதை சேர்த்து, டயாபிடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இயலாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை வருடத்திற்கு நிலைமை மாறலாம். அப்போது ஏற்படும் கிளர்ச்சியும் தடுமாற்றத்தையும் எதிர்பார்த்திருந்த நாளில்தான் புலிக்கலைஞன் அங்கு வருகிறான்.

சர்மா என்ற கதாபாத்திரத்தை இப்போது அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்., சர்மா சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதிப் பிரசுரம் செய்து பெயர் வாங்கி, அந்த ஸ்டூடியோவில் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகி விட்டிருந்தார்.

அடுத்தது அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள சிறு அறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று இருப்பதாகச் சொல்கிறார்.

அசோகமித்திரன் இங்கே நகைச்சுவை உணர்வுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒரு புறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும்.'

வந்த புலிக்கலைஞன் அதைப்பிடித்துக்கொண்டு நின்றான்.

சர்மாவிற்கும் அவனுக்கும் உரையாடல் நடக்கிறது. அந்த உரையாடலைப் படிக்கும்போது சிரிப்பை வரவழைக்கும்படி இருக்கும்.

அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

"காலையிலே வந்தேனுங்க. நீங்கக் கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க."

"ஓ..நீயா? வேலாயுதமில்லை?"

"இல்லீங்க. காதர் டகர் பாயிட்காதர்" என்கிறான்

"நீ வந்திருந்தியா?" என்று சந்தேகத்துடன் கேட்கிறார் சர்மா.

"ஆமாம். வெள்ளை சொன்னான் ஐயாவை வீட்டிலே போய் பாருன்னு" என்கிறான்..

இப்போது வெள்ளை என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்.
வெள்ளை என்பவன்தான் அவர்கள் ஸ்டூடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும் பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன்.

கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்குச் சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு. வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு விடுவான் என்று கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.

புலிக்கலைஞன் எதாவது நடிப்பதற்கு எதாவது ரோல் கிடைக்குமா என்று வந்திருக்கிறான். சர்மா, "இப்ப ஒன்றும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா" என்கிறார்.
இங்கு புலிக்கலைஞனைப் பற்றிய வர்ணனைத் தொடருகிறது.

ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூக்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாகக் காண்பித்தன. வர்ணிக்கும்போது இங்கே ஒரு கிண்டல். வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லோரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள் என்று.
பிடிவாதமாக இருக்கிறான். எதாவது ரோல் கொடுக்கும்படி.

சர்மா, "உனக்கு என்ன ரோல்பா தர முடியும்? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர் கிட்டே எல்லா விவரமும் தந்துவிட்டுப் போ" என்கிறார்.
காஸ்டிங் அசிஸ்டெண்ட் கதைசொல்லிதான். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களைப் பார்த்திருக்கிறார். பெயர், வயது, உயரம், விலாசம் என்று எல்லாம் குறித்து வைத்திருப்பார்.அந்தக் குறிப்பிகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும். அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.
ஆனால் அவன் கதைசொல்லி பக்கம் திரும்பவில்லை. எல்லாம் சர்மாதான் என்று அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்து, சர்மா, "உனக்கு நீந்தத் தெரியுமா?" என்று கேட்டார்.

"கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்கிறான்.

"மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது" என்கிறார் சர்மா
.
"எனக்கு டகர் பாயிட் வரும். என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க" என்கிறான் அவன்.

ஒருவருக்கும் அவன் சொல்வது புரியவில்லை
அவன் திரும்பவும் சொன்னான் "புலிங்க, புலி. புலி பாயிட்"

"ஓ..நீ புலியோட சண்டைப் போடுவியா?" என்று கேட்கிறார் சர்மா.

"இல்லீங்க புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க. இல்லீங்களா?"

இந்த இடத்தில் அவர்கள் இருவரும் பேசுவது நகைச்சுவை உச்சத்துக்குப் போய்விடுகிறது
.
அந்தப் புலி கலைஞன் பரிதாபமான முறையில் தன்னை நிரூபிக்க வேண்டி வந்துள்ளது.

"நம்பளது வேறு மாதிரிங்க. நிஜப் புலி மாதிரியே இருக்கும் " என்கிறான்.

எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒருமுறை அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.
அங்கு அவர்கள் முன் நிஜப் புலி மாதிரி காட்டிக்கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.

இப்படி வர்ணிக்கிறார் அசோகமித்திரன்.

'அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.
அவன் குதித்த சுவடு தெரியாமல் அங்கும் இங்கும் குதிக்கிறான். கூடவே புலி மாதிரி கர்ஜிக்கிறான். அங்கிருப்பவர்கள் திகைத்துப் போகிறார்கள். சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றி விட்டான்.'

அவன் பழைய மனிதன் ஆனான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு "நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா என்றார் சர்மா. கதைசொல்லிஅவன் முகவரியைக் குறித்துக் கொண்டார். சர்மா அவர் ஜேபியில் கையை விட்டார்.
மற்றவர்களும் கையை விட்டார்கள். எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும்.

சர்மா, "இந்தா இதைக் கொண்டு போய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு," என்றார்.

"வேண்டாங்க” என்றான் அவன்.

“என்ன வேண்டாம்? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே” என்று சர்மா சொல்ல,

“ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா” என்று அழுது கொண்டே அவன் சொன்னான்.

அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக்கொண்டான்.

“போ. முதல்ல வயித்துக்கு ஏதாவது போடு” என்றார் சர்மா.

அவன் போனபிறகு கொஞ்ச நேரம் யோசித்து,

"அவனுக்கு என்ன பண்றது? நாம இப்போ எடுக்கிறதோ ராஜா ராணிக் கதை".
\
ஆனால் சர்மா வெறுமனே இருந்துவிடவில்லை. இருவாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷம் போட்டுக்கொண்டு எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்று விட்டார். கதாநாயகனுக்குப் பதில் அவனுக்கு டூப் செய்யலாம். அதனால் ஒரு நூறு ரூபாயாதவது வாங்கித் தரலாம் என்று நினைத்தார் சர்மா.

கதைசொல்லி அவனுக்குக் கடிதம் போட வழக்கம்போல் 4 நாட்களில் கடிதம் திரும்பி வந்தது.

சர்மா வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் காதரைத் தேடினார். எல்லோரும் விசாரித்துக் கொண்டு எங்கங்கோ தேடினார்கள். காதர் கிடைக்கவில்லை. கதாநாயகன் எதிரி கோட்டைக்குள் நுழைய வேண்டிய காட்சி வந்தது.

அவன் கிடைத்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.

அவர்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது என்று அசோகமித்திரன் கதையை முடிக்கிறார்.

இந்தக் கதையில் எப்படி சினிமா படங்களில் அர்த்தமில்லாமல் அபத்தமாகக் காட்சி எடுக்கப்படுகிறது என்று சொல்வதுபோல் உள்ளது.

இந்தக் கதை மூலம் சினிமாவை அசோகமித்திரன் கிண்டல் செய்கிறார். சினிமாவிற்கு ரோல் கேட்ட காதர், அவர்கள் முன் புலி வேஷம் போட்டு நடித்துக் காட்டினான். சினிமாவில் நடிப்பதற்குப் பதில்.

மிகக் குறைந்த பக்கங்களில் சாதாரணமாக எழுதப்பட்ட கதை என்றாலும், வாழ்க்கையின் அபத்தத்தையும் இக் கதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அசோகமித்திரனின் இன்னொரு கதையான எலி கதையைப் பிறகு பார்ப்போம்.

(இந்த வார (10.01.2021) திண்ணையில் அசோகமித்திரனின் "புலிக் கலைஞன்'என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை.)

Comments