Skip to main content

சுவாமி விவேகானந்தர் பற்றி..2


அழகியசிங்கர்








நேற்று என் லைப்பரரி போனபோது தற்செயலாக என் கண்ணில் விவேகானந்தர் பற்றி புத்தகம் கிடைத்தது.  அதைப் படிப்போம் என்று எடுத்து வந்தேன். 168 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்தில்  42 பக்கங்கள் படித்து விட்டேன்.

கம்பளிட் ஒர்க்ஸ் சுவாமி விவேகானந்தர் என்ற புத்தகத்தில் ஒரு பாகமே என்னால் தாண்ட முடியவில்லை.  பெரும்பாலும் ரேஷன் கடை முன்னால் க்யு நிற்கிற இடத்தில் விவேகானந்தர் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பேன்.  அப்போதெல்லாம் சின்ன வயது.  

ஒரு வரி கூட மூளையில் ஏறவில்லை. அரவிந்தர் புத்தகம் இன்னும்  மோசம்.

சுலபமாகப் படிப்பது ரமணர், ஜேகிருஷ்ணமூர்த்தியூஜிரஜினிஷ் இதெல்லாம்தான்.

விவேகானந்தர் கூறுகிற பொன் மொழிகளை என்னால் ஏற்க முடியவில்லை.  பொதுவாக நான் பொன் மொழிகளையே படிப்பதில்லை. 

ஆனால் நேற்று எடுத்துக் கொண்டு வந்த புத்தகம் எனக்குப் படிக்க வேண்டும் போலிருந்தது .  இதை எழுதியவர் நெமய் சதன் போஸ்.  இந்திய இலக்கியச்  சிற்பிகள் என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர்க் கா.செல்லப்பன்.
 
இவற்றைப் படிக்கப் படிக்க  புதிய தகவல்களை அறிந்து ஆச்சரிய மடைந்தேன்.  

ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளைக் காண முடியுமா என்ற விவேகானந்தர் கேள்விக்கு, காட்ட முடியும் என்று கூறி விவேகானந்தரை அவர் பக்கம் வீழ்த்தி விடுகிறார்.

பரமஹம்சரின் முக்கியமான சேவை மக்களுக்குச் சேவை செய்வது.  இன்று வரை ராமகிருஷ்ண மடங்கள் சத்தமில்லாமல் பல உயர்ந்த சேவைகளைச் செய்து கொண்டு வருகின்றன.

விவேகானந்தர் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார்.  மக்கள் எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையாகவும், வறுமையில் வாடுவதையும் கண்டு வருத்தமடைகிறார். 

இதோ அந்தப் புத்தகத்திலிருந்து இன்னும் சில பகுதிகளைத் தருகிறேன்.

முன்னாள் மிக்சிகனின் கவர்னரின் மனைவியர் ஜான் ஜே. பேக்ஙூ அம்மையார், தன் இல்லத்தில் முன்னொரு சமயம் சுவாமிகளை விருந்தினராகப் பெற்றிருந்ததை எண்ணி, அவரைப் பற்றி ஒரு கடிதத்தில், ஒவ்வொரு மனிதனும் அவரை நன்கு அறிவதன் மூலமும் சிறப்பு அடைவான்.  அமெரிக்காவிலுள்ள ஒவ்வொருவரும் விவேகானந்தரை அறிய வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.  மேலும் அவர் போன்றவர் இன்னும் இந்தியாவில் இருப்பார்களேயானால் இந்தியா அவர்களையும் எங்களிடம் அனுப்பட்டும், என்று எழுதினார்.
******

விவேகானந்தரின் ஆன்ம ஆற்றலையும் பெருமையையும் முதலில் கண்டறிந்து போற்றியவர்கள் தென்னிந்திய மக்கள்தான் என்று கூறினால் அது மிகையாகாது.  அவர்களுள் துளசிங்கப் பெருமாளும் ஒருவராவார்.  

1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் சென்னையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  புகழ்பெற்ற பல பெரியோர்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.  எஸ்.சுப்பிரமணிய அய்யர் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.  சர்இராமசுவாமி முதலியார் அக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த முக்கியமானவர்களுள் ஒருவர்.  
****** 

தன்னை அறிதல் என்ற தலைப்பில் அவர் முதன்முதலாக இலண்டனில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒரு மகத்தான வெற்றியாக இருந்தது. அச்சொற்பொழிவினைக் கேட்டவர்கள் மந்திரத்தால் கட்டுண்டது போல் இருந்தனர் . 

அவற்றுள் மறக்கமுடியாத மிகவும் முக்கியமான கூட்டம் எதுவென்றால் 1995 ஆம் ஆண்டு, நவம்பர் 10ஆம் நாள் செசெமி குழாத்தில் நடந்த ஒன்றாம்.  அங்கு வருகை புரிந்திருந்தவர்களுள் மார்கரெட் நோபிள் ஒருவராவார்.  அவர் 1967 ஆம் ஆண்டு வட அயர்லாந்தில் பிறந்தவர்.  அவருடைய தாத்தாவும் தந்தையும் பிராட்டஸ்டண்ட் மதத் தொண்டர்களாக இருந்து ஐரிஷ் சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். இந்தியத்தாயின் ஒரு உண்மையான மகளாகவும் அவர் விளங்கினார்.  அவரை மக்களின் அன்னை என்று இரவிந்திரநாத் தாகூர்  வருணித்தார். இன்று சகோதரி  நிவேதிதாவின் பெயர் இந்தியர் இல்லங்களிலெல்லாம் பேசப்படும் ஒன்று.

Comments