அழகியசிங்கர்
நேற்று முகநூலில் அந்தச் செய்தி வந்தபோது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் அது உண்மை என்று உணர்ந்தபோது வருத்தமாக இருந்தது.
- விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்களில் ந முத்துசாமி பேசியிருக்கிறார். ஒருமுறை ஞானக்கூத்தன் கவிதைகளை எடுத்துக்கொண்டு கூத்துப் பட்டறை நடிகர்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறார்.
எப்படி தமிழை உச்சரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர் முத்துசாமி. எப்படி ஒரு கவிதையைப் படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டுமென்று சோதனை செய்து பார்ப்பவர்.
- ஐராவதம் என்ற எழுத்தாளரை ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன். முத்துசாமிக்கு அவரைப் பார்த்தவுடன் ஆச்சரியம்.
"என்னய்யா நீயெல்லாம் இங்கே வந்திருக்கே?" என்று முத்துசாமி கேட்க, ஐராவதம் என்னைக் காட்டி, "இவர்தான் என்னை தூசி தட்டி அழைத்து வந்திருக்கிறார்," என்றார். எனக்கு அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு.
- முத்துசாமி விருட்சத்திற்குக் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டுரையில் புராணக் கதைகளை நாடகமாக நடிக்கும்போது நடிகர்களுக்கு சாமி வந்துவிடும் என்று எழுதியிருக்கிறார்.
- என் நண்பர் ஞானக்கூத்தன் சில விஷயங்களை வேடிக்கையாகக் கூறுவார். அதில் ஒன்று ந முத்துசாமி தெளிவாகப் பேசக் கூடியவர். நடந்துகொள்பவர். அவருக்குக் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருந்தால் நன்றாக இருக்கும். அதேபோல் பிரமிள் கொஞ்சம் தெளிவாக நடந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்பார்.
- ஒருமுறை புத்தகக் கண்காட்சியின் போது க்ரியா அவருடைய முழுக் கதைத் தொகுதியை 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்,' என்று புத்தகமாகப் போட்டிருந்தது. அதை வாங்க க்ரியா சென்றேன். அந்த இடத்தில் முத்துசாமியும் நின்றிருந்தார். புத்தகம் வாங்கிக்கொண்டு அவரிடம் கையெழுத்தும் வாங்கினேன். இந்த நிகழ்ச்சி நடந்து 9 ஆண்டுகள் ஓடிவிட்டன.
- 13.08.2016 ல் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டம் ஒன்றை நண்பர்களின் துணையோடு திருவல்லிக்கேணியில் ஒரு அரங்கத்தில் ஏற்பாடு செய்து நடத்தினேன். அக் கூட்டத்தில் ந முத்துசாமியின் பேச்சை ஒளிப்பதிவு செய்திருந்தேன். அன்று கோபத்துடன் பேசினார் முத்துசாமி. மேடையில் எல்லார் முன்னிலும் பேசக் கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டார். மரபு ரீதியாக எழுதப்பட்ட கவிதைகள் என்று ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்து பத்திரிகையில் பிரசுரம் செய்யாத சி சு செல்லப்பாவை தாக்கிப் பேசினார். முத்துசாமி இப்படிப் பேசுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒளிப்பதிவை வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. காரணம் சி சு செல்லப்பாவின் மீது நான் மரியாதை வைத்திருப்பவன். அந்த ஒளிப்பதிவை எனக்கு எடிட் பண்ணத் தெரியவில்லை.
Comments