Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 45


அசோகமித்திரன் நாவல் குறித்து உரையாடல்



அழகியசிங்கர்





இந்த முறை முடிச்சூர் ரோடில் உள்ள மோஹினி வீட்டிற்கு அழகியசிங்கரும் ஜெகனும் வந்தார்கள்.   மோஹினிக்கு ஒரே மகிழ்ச்சி. மோஹினி அவர் கணவரை அறிமுகப்படுத்தினார்.

அழகியசிங்கர் : நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்.  இவ்வளவு தூரத்திலிருந்து மோஹினி என்னைப் பார்க்க வருவது எனக்கு ஆச்சரியம்.

மோஹினியின் கணவர் சாரதி :  உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வாள்.  அப்படி என்ன சார் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

மோஹினி : தூரம் என்பது நம் மனதில்தான் இருக்கிறது. நம் பக்கத்தில் வீட்டில் ஒருவர் இருப்பார்.  ஆனால் நம் மனதைப் பொறுத்தவரை அவர் தூரத்தில் இருப்பார்.  நாம் போய்ப் பார்க்க மாட்டோம்.

அழகியசிங்கர் : உண்மைதான்.  உங்கள் கணவர் ஒரு கேள்வி கேட்டார்.  என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.  நாங்கள் பேசுவது புத்தகங்களைப் பற்றியும், எழுதுபவர்களைப் பற்றியும்தான்.

சாரதி : அவ்வளவு இருக்கிறதா பேசுவதற்கு.

அழகியசிங்கர் : ஆமாம். அவ்வளவு இருக்கிறது.  புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிலேயே உழன்று கொண்டிருப்பார்கள்.  ஆனால் உண்மையிலேயே இதெல்லாம் வேண்டாமென்று விட்டும் விடலாம்.

ஜெகன் : ஒருவர் இசை, புத்தகம் படிக்கிறது என்று இதெல்லாம் இல்லாமல் இருந்து விடலாம்.

மோஹினி : வாழ்க்கை என்பது நாம் அமைத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.  என் வீட்டில் உள்ளவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தாலே என் பொழுது முழுவதும் போய்விடும்.

அழகியசிங்கர் ; டிவியையே பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள்.  காலையிலிருந்து இரவு படுக்கும்வரை டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.

சாரதி : நான் போகிறேன்.  நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்.  உங்கள் பேச்சில் நான் தலையிட விரும்பவில்லை.

மோஹினி : கொஞ்ச நேரம் நாங்கள் பேசுவதைக் கேட்டால் போதும்  வேண்டாமென்று ஓடிப் போய்விடுவீர்கள்.

ஜெகன் : நாம் சமீபத்தில் படித்தப் புத்தகம் பற்றி பேசுவோம்.

அழகியசிங்கர் : அசோகமித்திரனின் மானசரோவர் என்ற நாவல்.

மோஹினி : 32 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல்.

ஜெகன் : இப்போது எழுதப்படுகிற நாவல்களைப் பற்றிப் பேசக் கூடாதா?

அழகியசிங்கர் : நாம் பேசுவதற்குத்தான் வந்திருக்கிறோம்.  எல்லாவற்றையும் பற்றிப் பேசலாம்.

மோஹினி : மானசரோவர் சாவி இதழில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொடர்கதை.

ஜெகன் : ஒரு நெருக்கடியான நேரத்தில் ஒரு விழாவில் அசோகமித்திரனை சாவி அவர்கள் பாரத்து தொடர்கதை எழுதச் சொல்லியிருக்கிறார்.  தொடர்கதையாக உருவான நாவல்தான் இது.

மோஹினி : எனன்கு இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்கனவே கரைந்த நிழல்கள் நாவல் ஞாபகத்திற்கு வருகிறது.

அழகியசிங்கர் : இரண்டு நாவல்களும் சினிமா உலகம் சம்பந்தப்பட்ட நாவல்கள்.  ஆனால் கரைந்த நிழல்கள் வேற மாதிரி இது வேற மாதிரி.

ஜெகன் : முதலில் கோபாலும் அடுத்தது சத்யன் குமார் என்ற வடநாட்டு நடிகன் பேசுவதுபோல் நாவல் ஆரம்பமாகிறது.

அழகியசிங்கர் : இரண்டு நபர்களுக்கு இடையே இந் நாவல் நடைபெறுகிறது.
மோஹினி : ஒருவர் சத்யன் குமார், இன்னொருவர் கோபால். 
ஜெகன் : ஒரு இடத்தில் கோபால் அவர்மனைவிû8யப் பற்றி இப்படி விவரிக்கிறார்.

"ஒருநாள் அவள் தனியாக சோழி விளையாடிக்கொண்டு தனக்குத் தானே ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு, அவள் வெறியோடு சோழிகளைத் தூக்கிப்போட்டுப் புறங்கையில் பிடித்து, மீண்டும் தூக்கிப்போட்டு உள்ளங்கையில் பிடித்தாள்.  அவள் கண்கள் அகல விரிந்து இருந்தன."

அழகியசிங்கர் : ஆரம்பத்திலேயே கோபால் தன் மனைவியின் ஜம்பகத்தின் போக்கைக்û குறிப்பால் உணர்த்தி விடுகிறார்.

மோஹினி : இரண்டு சித்தர்களைப் பற்றி இந் நாவலில் குறிப்பிடுகிறார்.
கோபாலைப் பார்த்து சத்யன்குமார் 'நீங்கள் மெஹர்பாபா மாதிரி இருக்கிறீர்கள்,' என்கிறான்.  அவர் அவன் சொன்னதை நம்ப முடியாமல் பார்க்கிறார்.

அழகியசிங்கர் : குடும்பத்தைக் குலைப்பதுதான் இந்தக் கதை.

ஜெகன் : ஆமாம்.

அழகியசிங்கர் : கோபால் குடும்பம் சாதாரண குடும்பம்.  அந்தக் குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.  குடும்பத்தையே கலைக்கும்படி ஆகிறது.

மோஹினி : சத்யன் குமார் பிரபலமான வடநாட்டு நடிகன்.  அவன் சென்னை வரும்போதெல்லாம் கோபாலை சந்திக்கிறான். அவனுடைய புகழும் அழகுமே அவனுக்கு விரோதமாகப் போய் விடுகிறது.

ஜெகன் : சத்யன்குமார் திருமணமாகாதவன்.  சபலக்காரன்.  அதை ரொம்பவும் நாசூக்காக நாவலில் வெளிப்படுகிறது.

மோஹினி : அவன் ஏன் உடல் நிலை சரியில்லாவிட்டாலும் கூட கோபாலைப் பார்க்க வருகிறான் என்பதை கடைசியில் கொண்டு போகிறார் நாவலாசிரியர்.

அழகியசிங்கர் : சத்யன் குமார் ஒரு பெண் பித்தராக இருப்பார் போல் தெரிகிறது.  ஒருமுறை கோபால் இல்லாதபோது அவர் வீட்டிற்கு வந்து அவரைத் தேடியிருக்கிறார்.  அந்தத் தருணத்தில் அவர் மனைவியின் கையைப் பிடித்து இழுத்தாரா அல்லது மனைவி அவர் கையைப் பிடித்து இழுத்தாரா என்பது    தெரியவில்லை.

ஜெகன் : குழப்பமே அங்கிருந்து ஆரம்பமாகிறது.  சத்யன் குமாரின் இந்த நடவடிக்கையால் குடும்பமே சிதைந்து விடுகிறது.  பெண்ணிற்கு உடனே திருமணம் செய்து விடுகிறார்.  பையன் சுரம் வந்து இறந்து விடுகிறானா அல்லது அவர் மனைவியால் கொல்லப்படுகிறானா என்பது தெரியவில்லை.

மோஹினி : கோபால் எல்லோரையும் விட்டுவிட்டு சித்தருடன் போய்விடுகிறார்.  அவர் மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிடுகிறார்.

அழகியசிங்கர் : சத்யன்குமார் சியாமளா என்ற துணை நடிகையை அவள் குழந்தையுடன் அவன் இடத்திற்கு அழைத்து வந்து விடுகிறான்.  அவன் மருத்துவமனையில் உடல் நலமின்றி படுத்துக் கிடந்தபோது ஒரு நர்ஸ் அவன் படுக்கையை சரி செய்ய வருகிறாள்.  அவளைக் கட்டி அணைத்துக்கொள்கிறான்.  அதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஒரு இடத்தில் எழுதியிருப்பார்.

ஜெகன் : இந்த நாவலால் நமக்கு என்ன தெரிய வருகிறது.

அழகியசிங்கர் : இந்த நாவல் மூலம் பலருடைய வாழ்க்கை முறை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், நாவல் ஒரு பிரதி. பிரதியை உருவாக்கியவர் அசோகமித்திரன்.  பிரதியின் மூலம் பலருடைய குரல்களை நாம் உணர முடிகிறது. இதைப் படிப்பதன் மூலம் வாசகனின் பிரதி ஒன்று உருவாகிறது.  அவன் தன்னை உரசிப்பார்க்க அது பெரிதும் உதவும்.
(நேரம் அதிகமாகிவிட்டதால் அழகியசிங்கரும், ஜெகனும்
அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்) 

நன்றி : மானசரோவர் - நாவல் - அசோகமித்திரன் - பக் : 205 -வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் 

Comments