Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 93



அழகியசிங்கர்  



 வாழ்வும் சாவே


தஞ்சை ப்ரகாஷ்


க.நா.சு. போயாச்சு!
ரொம்ப நல்லதாச்சு!

பாபாஜான்
உனக்குத் தெரியுமா?
ரொம்பபேருக்கு
யோசிக்கவே வராது என்று!
ரொம்பபேருக்கு
நல்லது தேடிப்படிக்கத் தெரியாதே!
தெரியுமா? அவர்தான் சொல்வார் அப்படி!

க.நா.சு. ரெண்டு மூணுஸ்வீட்
ஏக நேரத்தில் சாப்பிடுவார்!
காப்பி என்னமோ அவருக்கு
இனிச்சிண்டே கசக்கணும் நல்லா
கசந்துண்டே இனிச்சாகணும்

இலக்கியம்ன்னா பாவம்! அவருக்கு
உணர்ச்சி வசப்பட்டு வழியப்படாது

கவிதைன்னா அட! க.நா.சு.வுக்கு
புதுக்கவிதைன்னாலும் கவிதையா ஒலிக்கப்
படாது!
பாபாஜான்
ஆமா
அவருக்கு வாழ்க்கைன்னா கூட
அவர் வாழ்க்கை மாதிரி இன்னொண்ணு
இருக்கப்படாது!
வாழறது ஒண்ணு ஒண்ணும்
புதூசா ஒவ்வொரு நாளும்
கசக்கணும்! சிக்கலாயிருக்கணும்
விடுவிக்க ஏலாததா!

ஆமா கோணா மாணான்னுதான் இருக்கனும்
பாபாஜான் - உனக்கு
நகுலன் சொல்றா மாதிரி அப்டி ஒண்ணும்
ஒடனே வாழ்க்கை நமக்கெல்லாம்
க.நா.சு. 'து' மாதிரி “படக்”ன்னு
முடிஞ்சுறாது!
தெரியும்

வாழ்க்கை மாதிரியே அவருக்கு சாவும்
உணர்ச்சி வசப்படுத்தாமை
கடைசி வரைக்கும் ப்ரக்ஞையோட
விமர்சிக்கவே முடியாத
 "புதுஸ்ஸா ” இருந்திருக்கு
எழுதிகிட்டே
 சாவையும் வாழ்ந்திருக்கார்

நன்றி :  என்றோ எழுதிய கனவு - கவிதைகள் - தஞ்சை ப்ராகாஷ் - மொத்தப் பக்கங்கள் : 140 - வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2010 - விலை : ரூ.60 - நந்தி பதிப்பகம், 62 பொன்னம்மாள் இல்லம், ராஜராஜன் நகர், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் 613 501

Comments