Skip to main content

புதிய தலைமுறை பத்திரிகைக்கு நன்றி



அழகியசிங்கர்





இந்த இதழ் புதிய தலைமுறை பத்திரிகையில் (18.10.2018) திறந்த புத்தகம் என்ற நூலிற்கான விமர்சனம் வெளிவந்துள்ளது.  அதை எழுதியவர்ன  ஸிந்துஜா.    'மனதைத் திறக்கும் புத்தகம்'   என்ற தலைப்பில் அவர் எழுதிய விமர்சனத்தை அப்படியே இங்குத் தர விரும்புகிறேன்.  

புத்தக விமர்சனம் எழுதிய ஸிந்துஜாவிற்கும், புதிய தலைமுறை ஆசிரியருக்கும் என் நன்றி உரித்தாகும். 

முகநூல் முகமூடி அணிந்தவர்களின்  ஒரு விளையாட்டு அரங்கமாகிவிட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து   'சட்'  ட ன் று  இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை ,  தயக்கமும் இல்லை . முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே.. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவமும் விரிந்து ஓடுகிறது .   இத்தகைய வினோதமான முகநூல் உலகில் உலா வருவதைப் பற்றி பேசுகிறது எழுத்தாளரும் கவிஞருமான அழகியசிங்கரின் இந்த 'திறந்த புத்தகம்'.
      மிக எளிய நடையில், சாதாரண விஷயங்களையும்கூட உற்சாகத்துடன் படிக்கும்படி ஒரு வாசகரை உந்தித் தள்ளுவது என்பது, கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவது கஷ்டமான காரியம். இதை அழகியசிங்கர் இந்தப் புத்தகத்தில் செய்து காண்பித்திருக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும் சொற்றொடர்களுடன்; அரசியல், இலக்கியம், சினிமா, நாடகம், சமூகம், மனிதர்கள், தின வாழ்க்கை என்று முகநூலில் ஒரு வருஷமாக, தான் எழுதிய அனுபவ பகிர்வுப் பதிவுகளை தொகுத்துப் போட்டிருக்கிறார்.
 'அந்தப் புத்தகத்தை யார் எழுதியது என்று  சொல்லப் போவதில்லை' என்று ஒரு கட்டுரை இருக்கிறது .  புத்தகம் எழுதியவர்  சாப்பிடுவதைக் குறைப்பது பற்றியும், பசியை அடக்குவதின் மகாத்மியத்தைப் பற்றியும், வரிந்து கட்டிக் கொண்டு எழுதியதை அழகியசிங்கர் பதிவு செய்து,  எ ழு த் த ா ளர்  ெப ய  ைர ச் சொல்லாமலே முடிக்கிறார். ஆனால், பக்கம் 170-இல் உள்ள 'தீபாவளியும் எங்கள் தெருவும்' என்ற கட்டுரையில் அந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்துவிடுகிறது. 'இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டால் உண்பதின் மீது தெளிவான கவனம் வந்துவிடும். ருசி அறுத்தல் என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது' என்று 'இது போதும்' என்ற தனது புத்தகத்தில் பாலகுமாரன் எழுதியிருக்கிறார்” என்கிறார். 
'
     இலக்கியம் அழகியசிங்கருக்கு பிடித்த விஷயம் என்பதால் இதில் பல கட்டுரைகள் அழகியசிங்கரின் பத்திரிகை நடத்தும் அனுபவங்களை, அவர் சந்தித்துப் பழகிய இலக்கிய ஆளுமைகளை, சில வம்புகளை(!) - வம்புகள் இல்லாத புத்தகம் என்ன இலக்கியப் புத்தகம் - மிகுந்த சுவாரஸ்யத்துடன் விவரிக்கின்றது.  அழகியசிங்கரின் மெல்லிய நகைச்சுவை சில பக்கங்களில் நம்மைக் கவருகின்றன. 'சார், இவர் சத்தியநாதன். லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்' என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார்.   வந்ததடா ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன்.   இப்போதெல்லாம் கல்யாண மண்டப வாசல்களில்கூட கட் அவுட் வைத்துவிடுகிறார்கள். மணமகனும் மணமகளும் கட் அவுட்டில் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதன்பின் அவர்களிடம் அது மாதிரியான சிரிப்பு தென்படாது என்று எனக்குத் தோன்றும். ' 

      'இந்தப் புத்தகம் விலை ரூ.20 தான்' என்று ரசிகமணி டி.கே.சி. எழுதிய புத்தகம் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் டி.கே.சி. அவரது மகளுக்கு எழுதிய கடிதம்  இடம் பெற்றிருக்கிறது.

     முகநூலை உபயோகமாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி. 




Comments