Skip to main content

ஒரு கதை இரு முடிவுகள்

பூர்வாங்கம் :

சுந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு அந்த ஆசை விடவில்லை. ஒரு நிமிடம் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவள் சந்தோஷமாக என்றாவது இருந்திருக்கிறாளா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் பலருடைய வீட்டு வேலைகளைச் செய்து அவள் கை ஒடிந்து போய்விட்டது. இன்னும் அவளுக்கான ஒரு வாழ்க்கை வரவில்லை என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருப்பாள். எல்லோரும்போல் அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டுமென்று நினைக்கிறாள். வறுமையான அவள் குடும்பத்தை நினைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய மூத்த அக்காள்கள்போல் தன் வாழ்க்கையும் போய்விடுமென்று அவளுக்குத் தோன்றியது. இச் சமயத்தில் பத்மநாபன்தான் அவள் மீது இரக்கப்பட்டு தினசரி ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்தத் தினசரியைப் பார்த்துவிட்டு, ஒரு வரன் அவளுக்குக் கிட்டும்போல் தோன்றியது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் முட்டி நின்றது. அவளைப் பார்த்த பையனுக்கு பைக் வேண்டுமாம். முதலில் அவளுடைய அண்ணன் யோசனை செய்தான். பிறகு சரியென்று சொல்லிவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் பையன் இன்னும் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து என் முடிவைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். பையன் இருப்பது திருவலங்காடு. அங்கு ரைஸ் மில் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். சுந்தரிக்கு ஒவ்வொரு நாளும் கடத்துவது நரகவேதனையாக இருந்தது. பத்மநாபன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். எப்படியாவது இந்தக் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று தைரியமும் சொல்லிக்கொண்டிருப்பார். எதற்கும் காலம் கணிந்து வரவேண்டுமென்பதில் அவருக்கு அலாதியான நம்பிக்கை உண்டு. ஆச்சு. பத்துநாள் ஓடிவிட்டது. பையனிடமிருந்து பதில் வரவில்லை. அதனால்தான் மேலே கூறிய தற்கொலை முடிவுக்கு சுந்தரி வந்துவிட்டாள். இந்தத் தற்கொலையை அரங்கேற்ற வசதியாக அவள் பணிபுரிகின்ற வீடொன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அந்த வீட்டில் உள்ளவர்கள் இவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டு சென்னைக்கு அவசரமாகச் சென்றுவிட்டார்கள். வர சில வாரங்கள் ஆகும். ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். பிறகு வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு, தன் உடம்பில் உள்ள துணியெல்லாம் உருவினாள். கழுத்தில் புடவையை மாட்டிக்கொள்ள வேண்டியதுதான. தன் தற்கொலையால் யாருக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ஒரு பேப்பரில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்துவிட்டாள். தூக்கில் தொங்க வேண்டியதுதான். அதற்கு முன், தன் உருவத்தை ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். இனி இந்த உடல் மண்ணுக்குப் போகப் போகிறது. பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.

முடிவு ஒன்று :

சுந்தரி தன் கழுத்தில் புடவையை மாட்டிக்கொண்டாள். புடவை இறுகிக்கொண்டது. இனி அவ்வளவுதான். அவள் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உதறி விட வேண்டியதுதான். உதறினால், கழுத்தில் புடவை இறுகி சில நிமிடங்களில் இறக்க நேரிடலாம். கடைசி முறையாக கண்களை மூடிக்கொண்டு, அடுத்த ஜென்மத்திலாவது நல்ல பிறவியாக எனக்குக் கொடு என்று கடவுளை வேண்டிக்கொண்டாள். இதோ சுந்தரி தூக்கில் தொங்கிவிட்டாள். உதறி எறிந்த ஸ்டூல் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்தது. கைக் கால்களை உதறி, கண்கள் சொருக, சொருக... தூரத்திலிருந்து யாரோ அவள் பெயரைச் சொல்லி உரத்துக் கூப்பிடுவது காதில் விழுந்.......சுந்தரி போய்விட்டாள். எல்லோரையும் விட்டு.... மேலே குறிப்பிட்ட முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் முடிவை மாற்ற வேண்டுமென்று தோன்றியது. சுந்தரியை எதற்காக சாகடிக்க வேண்டும். அதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது. சுபமான முடிவு என்றால், படிப்பவர்களுக்கும் நிஇருக்கும். வாழ்க்கையில் சோகமான முடிவுகள்தான் அதிகம். அதனால் இன்னொரு முடிவை இங்கே எழுதி உள்ளேன்:

முடிவு இரண்டு :

சுந்தரி தான் கட்டியிருந்த உடைகளை வீசி எறிந்தாள். ஒரு நிமிடம் தன்னைக் கண்ணாடியில் போய்ப் பார்த்துக்கொண்டாள். அவள் முகத்தைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் உருவமாக அது தெரியவில்லை. சரி, இன்றோடு இந்த உருவத்தை யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டாள். ஐயோ, நாம் இறந்துவிட்டால், இக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் போலீஸ் எதாவது தொந்தரவு செய்யப் போகிறதென்று எண்ணி, உடனே ஸ்டூலை விட்டு கீழே இறங்கி, அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்திலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள். =என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் நல்ல மனிதர்கள். என் சுய உணர்வோடுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.+ அவ்வளவுதான் சுந்தரி எழுதினாள். பின் கையெழுத்துப் போட்டாள். மறக்காமல் தேதி, நேரம் எல்லாம் குறித்துக்கொண்டாள். இதோ தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான். திரும்பவும் ஸ்டூலில் ஏறிநின்று, புடவையை கழுத்தில் இறுக்கிக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதோ முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் முறுக்கியும் கொண்டாள். ஸ்டூலை தள்ள வேண்டியதுதான் பாக்கி. ஆயிற்று அதுவும் இன்னும் சில நிமிடங்களில்..ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து......சுந்தரீ.....சுந்தரீ....யாரோ கூப்பிடுவது கேட்கிறது... ஆறு, ஏழு, எட்டு, யே...சுந்தரீ...என்ன பண்றே... ஒன்பது, ப....த்... சுந்தரீரீரீ.....ஏது அண்ணன் குரல் மாதிரி கேட்கிறதே..அண்ணாவா.... என்ன? என்றாள் சுந்தரி பதிலுக்கு... "அவர்கள் சம்மதித்துவிட்டார்கள்," என்றான் அண்ணன். சுந்தரி போக வேண்டிய உயிரைத் திரும்பவும் பாதுகாக்க வேண்டும்போல் தோன்றியது. தூக்குப் புடவையை உதறித் தள்ளிவிட்டு, கீழே குதித்தாள். அவசரம் அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டாள். வாசல் கதவைத் திறந்தாள்.

அவள் அண்ணன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். "அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அடுத்த மாதம் கல்யாணம்.." என்றான் அவன்.சுந்தரி கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

Comments