Skip to main content

சி சு செல்லப்பாவும், ராமையாவின் சிறுகதைப்பாணியும்

சில குறிப்புகள் 7


க.நா.சு இரங்கல் கூட்டமொன்றை கணையாழி என்ற பத்திரிகை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நடத்தியது. அதற்கு சி சு செல்லப்பா வந்திருந்தார். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். தூரத்தில். அவர் க நா சுவைப் பற்றி பேசும்போது அவேசமாகப் பேசியதுபோல் தோன்றியது. கதர் சட்டையும், வேஷ்டியும் கட்டிக்கொண்டு வந்திருந்தார். அழுக்காக இருந்தது. ஏன் இவ்வளவு அழுக்காக வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.


சி சு செல்லப்பாவை அதன்பின் விளக்குக் கூட்டத்தில் சந்தித்தேன். அவருக்கு விளக்குப் பரிசு கொடுத்து கவுரம் செய்திருந்தது. அந்தப் பரிசுத் தொகையை அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். அவர்கள் அந்தப் பரிசுத் தொகையில் சி சு செல்லப்பாவின் சிறுகதைப்பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். அக் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்தோம். அவர் தன்னுடைய அனுபவத்தை அங்கு குறிப்பிட்டுப் பேசினார்.


அக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே பிரமிள் நடந்து சென்றதாக யாரோ குறிப்பிட்டார்கள்.


சி சு செல்லப்பா அதன்பின் சென்னைக்கு பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணியில் குடி வந்துவிட்டார். பங்களூரில் உள்ள அவருடைய ஒரே புதல்வனுக்கும் அவருக்கும் மனஸ்தாபம். உண்மையில் அது ஒரு காரணமா என்பது தெரியவில்லை. அவருடைய 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற நாவலை புத்தகமாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தாரா என்பது தெரியவில்லை.


சி சு செவின் கவனமெல்லாம் சுதந்திர தாகத்தைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திலேயே இருந்தார். ஒரு முறை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் கல்யாண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடம் துவங்கும்போது அங்குதான் நடக்கும். அக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செ. அங்குள்ள பல பதிப்பாளர்களிடம் தன்னுடைய சுதந்திர தாகம் புத்தகத்தை பிரசுரம் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. ஆனால் அதைப் புத்தகமாகக் கொண்டு வருவதாக இருந்தால் லட்சக் கணக்கில் பணம் செலவாகும். மேலும் அப் புத்தகத்திற்கு என்ன விலை கொடுத்து விற்பது பிரச்சினையாக இருக்கும்.


ஒரு வழியாக பலரிடம் நன்கொடைப் பெற்றுக்கொண்டு தானே அப்புத்தகத்தை அச்சிடுவது என்ற முடிவுக்கு சி சு செ வந்தார். அந்தச் சமயத்தில் லலிதா ஜூவல்லரி சுகுமாரன் அவருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு எழுத்தாளர்கள் மீது தனி மரியாதை உண்டு. யாருக்கும் தெரியாமல் பல நன்கொடைகளை அவர் புத்தகம் பத்திரிகைக் கொண்டு வருவதற்கு உதவி செய்துள்ளார். சுதந்திர தாகம் முதல் பாகம் அப்படி அச்சிடப்பட்டது. மேலும் சி சு செவிற்கு 80 வயதிற்கு மேல் இருக்கும். திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்டில் அவருடைய புத்தகம் அச்சடிக்க நான் ஏற்பாடு செய்தேன். அந்தப் பிரஸிலிருந்து வந்து புரூப்பெல்லாம் சி சு செ வீட்டிற்கு வந்து வாங்கி அச்சடித்துக் கொடுத்தார்கள். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவது பாகத்தை அவருக்கு என் சிறுகதைப் பாணி புத்தகம் விற்ற பணம் மூலம் கொண்டு வந்தார். மூன்றாவது பாகத்தை நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கொடுத்த நன்கொடை மூலம் கொண்டு வந்தார்.


அப் புத்தகத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. சி சு செ பத்தரிகையில் விளம்பரம் கொடுத்தார். வாசந்தி ஆசிரியராக இருந்த இந்தியா டுடே பத்திரிகையில் அப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்து நல்ல விளம்பரம் கொடுத்தார்கள். அப்படியெல்லாம் கொடுத்தும்கூட அப் புத்தகம் 200 பிரதிகளுக்குமேல் விற்றிருக்குமாவென்பது சந்தேகம்.


சி சு செல்லப்பா சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக இயங்கியதுதான் என்னுடைய ஆச்சரியம். அந்த வயதிலும் அவர் அவேசமாகச் செயல்பட்டதை என்னால் மறக்க முடியாது. பின் நூல்நிலையத்தில் அப் புத்தகத்தை வாங்குவதற்கு அப் புத்தகத்தை டிடியுடன் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தார். ஆட்டோ வில் அதைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர் அவஸ்தைப் பட்டது என் ஞாபகத்தில் இருக்கிறது.


80வயதுக்குமேல் என்பதால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அவரும் அவருடைய மனைவியும்தான் அதிகம் வசதி இல்லாத திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்தார்கள். சி சு செல்லப்பா பேன் போட விடமாட்டார். அவருடைய மனைவிக்கோ பேன் வேண்டும். மேலும் அவர் வீடு முழுவதும் புத்தகக் கட்டுக்கள் அடுக்கியிருக்கும். தானே புத்தகக் கட்டுப்போட்டு வைத்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவர் வீட்டிற்குப் போனால் எதாவது சாப்பிடக் கொடுப்பார். பேசிக்கொண்டே இருப்பார். போக விட மாட்டார். பல இலக்கிய நண்பர்கள் அவரை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டிருப்போம்.


ஒரு முறை மருத்துவமனையிலிருந்து சி சு செ மனைவி யார் மூலமாகவோ எனக்கு போனில் செய்தியைத் தெரியப்படுத்தினார் (சி சு செ மனைவிற்கு காது சற்று கேட்காது. அதனால் நேரிடையாகப் போனில் பேச முடியாது). நான் மருத்துவமனைக்குச் சென்று சி சு செ போய்ப் பார்த்தேன். "மாமிக்கு குட்பை சொல்லிட்டேன். அடுத்த ஜன்மத்தில சந்திக்கலாமென்று,'' என்று சிரித்தபடி என்னைப் பார்த்துக் குறிப்பிட்டார்.


அந்த ஆண்டு சி சு செ வின் சுதந்திர தாகம் புத்தகத்தை லைப்பரரி எடுத்துக்கொள்ளவில்லை. சி சு செ அது பெரிய வருத்தம். காரணம் 1000 பிரதிகள் சுதந்திர தாகத்தை அவர் அச்சிட்டிருந்தார். 3 பாகங்கள் சேர்ந்து ரூபாய் 450 விலை. எப்படி விற்க முடியும்? விளம்பரம் மூலம் மிகக் குறைவான பிரதிகள் சுதந்திர தாகம் விற்ற பணத்தை சற்றும் யோசிக்காமல் இன்னொரு புத்தகமும் கொண்டு வந்து விட்டார் சி சு செல்லப்பா. அந்தப் புத்தகத்தின் பெயர்தான் 'ராமையாவின் சிறுகதைப் பாணி'. சி சு செல்லப்பாவிற்கு ராமையா குருநாதர் மாதிரி. அவர் மீது அவ்வளவு அபிமானம். இருவரும் வத்தலக்குண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ராமையா 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவர். மணிக்கொடி எழுத்தாளர். அவருடைய சிறுகதைகள் புத்தகமாக வராத தருணத்தில், சி சு செ அவருடைய கதைகளுக்கான விமர்சன நூலைத் தயாரித்து ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து விட்டார். அதுவும் 500 பிரதிகள் வேறு அச்சிட்டு விட்டார்.


எனக்கோ அவர் செய்த இந்தச் செயலைப் பார்த்து பெரிய திகைப்பு. ராமையாவின் சிறுகதைகளே படிக்க யாருக்கும் கிடைக்காதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை யார் படிப்பார்கள்? லைப்ரரி ஆர்டர் வேறு சுதந்திர தாகம் புத்தகத்திற்குக் கிடைக்காததால் செல்லப்பா சோர்ந்து போயிருந்தார். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும்படியாக இருந்தது. ஒருமுறை தீவரமாக சிகிச்சைப் பெற மருத்துவமனையில் இருந்தபோதுதான், கேரளாவில் தகழி சிவசங்கரன் என்ற எழுத்தாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக்கொண்டு இருந்தார். கேரளாவில் முதலமைச்சர் முதல் கொண்டு தகழியைப் பார்த்ததோடல்லாமல், டிவியில் அவரைப் பற்றி மருத்துவ அறிக்கையை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.


சுதந்திரப் போராட்ட வீரரும், 'எழுத்து' என்ற இலக்கிய ஏட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர காரணமான சி சு செல்லப்பாவை இங்குள்ள டிவியோ, செய்தித்தாள்களோ கண்டுகொள்ளவில்லை. தற்போதுள்ள கலைஞர்தான் அப்போதும் முதல்வராக இருந்தார். ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. சி சு செ மரணம் அடைந்த பிறகு, அவருடைய விற்காத சுதந்திர தாகம் பிரதிகள் எல்லாம் சங்கர ராம சுப்பிரமணியம் என்ற அவருடைய உறவினர் வீட்டிற்குப் போய் சேர்ந்தன. அவருடைய உறவினருக்கும் அப் புத்தகத்தை எப்படி விற்பது என்று தெரியவில்லை.


நான் திரும்பவும் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் இறையன்பு அவர்களைப் பார்த்தேன். சி சு செ புத்தகம் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அவர் மூலம் திரும்பவும் அப் புத்தகத்தை லைப்ரரி சில நூறு பிரதிகள் வாங்கிக் கொண்டது. சி சு செல்லப்பாவிற்கு அந்த நூலிற்காக அவர் இறந்தபிறகு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. சி சு செ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அந்தப் பரிசை வாங்கியே இருக்கமாட்டார். அந்தப் பரிசு அறிவிப்பைத் தொடர்ந்து இன்னு சில பிரதிகள் சுதந்திர தாகம் புத்தகம் விற்றது. ஆனாலும் பன்டில் பன்டிலாக சங்கர ராம சுப்பிரமணியின் வீட்டில் சு தா 3 பாகங்கள் வீற்றிருந்தன. கூடவே யாரும் தொடாத ராமையாவின் சிறுகதைப் பாணி புத்கமும்.


புத்தகக் காட்சியின் போது நான் அவருடைய சு தாகம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு வைத்தேன். விலை 450 ரூபாய் என்றவுடன், யாரும் தொடக்கூட விரும்பவில்லை. அதனால் சங்கர ராம சுப்பிரமணியத்திடம் சொல்லி புத்தக விலையைக் குறைக்கச் சொன்னேன். ''என்ன விலைக்கு விற்கலாம்?'' என்று கேட்டார். ''ரூபாய் 100 போதும்,'' என்றேன். சரி என்றார்.


'சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற புத்கம் விலை ரூ100 மட்டுமே' என்று புத்தகக் காட்சியில் விளம்பரம் செய்தேன். மடமடவென்று எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. பொதுவாக என் புத்தகங்களுடன் மற்ற பதிப்பாளர்களிடம் சென்று புத்தகம் வாங்கி விற்றுதான் புத்தக்க காட்சியில் ஆகும் செலவைக் குறைப்பது வழக்கம் அந்த முறை மற்ற பதிப்பாளர் என்னிடமிருந்து சுதந்திர தாகம் புத்தகத்தை வாங்கி விற்றார்கள். இனிமேல் அந்தக் கனமான சுதந்திர தாகம் புத்தகத்தைப் பிரசுரம் செய்வது என்பது அதிகம் செலவாகும். விற்பதும் சாத்தியமில்லை. சுதந்திர தாகத்திற்கு நல்ல கதி ஏற்பட்டுவிட்டது. அடுத்தப் புத்தகமான சி சு செல்லப்பாவின் 'ராமையாவின் சிறுகதைப் பாணி' புத்தகத்தை நினைத்தால் கதி கலங்குகிறது. சங்கர ராம சுப்பிரமணியன் இறந்தபிறகு ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை சி சு செல்லப்பாவின் புதல்வர் விற்பதற்காக என்னிடம் அனுப்பி விட்டார்.
அப் புத்தகக் கட்டுகள் என் பாதுகாப்பில் உள்ளது. ஒரு புத்தகம் விலை 10 ரூபாய்தான் என்று விளம்பரப் படுத்தினாலும் யாரும் வாங்கி அதைத் தீர்க்க மாட்டேன்கிறார்கள்.

Comments

T.N.Elangovan said…
இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு ஒரு பிரதி வேண்டும். எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்?
இளங்கோ
9176620551
tnelango@gmail.com
kahanam said…
நண்பரே, தங்களிடம் சி. சு. செல்லப்பா அவர்களின் சுதந்திர தாகம், பிற நூல்கள் இருக்கின்றனவா? எனக்கு ஒரு பிரதி வேண்டும்! விலை மற்றும் முகவரி தந்தால் பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்கிறேன்!
M,Narayanan
kahanam@yahoo.com