Skip to main content

அரண்மனைக்குச் சென்ற துறவி



ஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. தங்களுக்குமேல் ஒன்றுமே இல்லை என்னும் போக்கில் உள்ளங் களித்திருந்தார்கள். 'அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பது பெரியோர்களின் உரையல்லவா? அந்த அரசனுடைய ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்த மக்களும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை. உலகம் நிலையாமை முதலியவைகளை அறவே மறந்துவிட்டுச் செருக்கியிருந்தார்கள். அரசனுக்கோ குடிகளுக்கோ அறிவுரை கூறுவார் எவருமிலராயினர்.

இவர்கள் இவ்வாறிருக்கையில் உலகவாழ்வின் மெய்மையை உள்ளவாறுணர்ந்த துறவியொருவர் ஒருநாள் அவ்வூர் வழியே சென்றார். அவ்வூர் அரசனும் குடிமக்களும் அடைந்திருக்கும் அறிவுமயக்கம் அத்துறவிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. அவர் அவ்வூரார்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அன்றிரவில் அரசனுடைய அரண்மனைக்குள் ஒருவரும் அறியாவாறு நுழைந்து ஓரிடத்தில் ஒரு புலித் தோலை விரித்துக் கொண்டு படுத்தார். தமக்குப் பக்கத்தில் இடுகாட்டில் இருந்து எடுத்த மண்டையோடு ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்தார்.

துறவியார் வந்து படுத்திருத்தலை அரண்மனைக் காவலர் கண்டனர். அவர்கள் துறவியிடம் வந்து, "ஓய் துறவியாரே! நீவிர் யாவர்? இங்கு ஏன் வந்து படுத்தீர்? இந்த இடத்தை என்ன என்று எண்ணிக்கொண்டீர். இஃதோர் அறச்சாலை யென்பது உம்முடைய எண்ணமா? உடனே இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியே போய்விடுவீராக?" என்று சொல்லி அதட்டினார்கள்.

காவலர்கள் கழறியதைக் கேட்ட துறவி மிகுந்த பொறுமையோடு அவர்களைப் பார்த்து, "இஃதோர் பொதுவான அறச்சாலை. இச் செய்தி எனக்கு நன்றாகத் தெரியுமாகையால் நான் இங்கே வந்து படுத்துக் கொண்டேன்," என்றார். இதனைக் கேட்ட காவலர்கள் "ஓய் துறவியாரே! நீர் அறிவில்லாதவராக இருக்கிறீர். இஃது அரசனுடைய அரண்மனையாயிற்றே, இச் செய்தி உமக்குத் தெரியாதா? விரைவாக இந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியே ஓடிப் போவீராக," என்றார்கள்.

இவ்வாறு அரண்மனைக் காவலரும் துறவியாரும் உரையாடிக் கொண்டிருக்கையில் அரசியானவள் தன்னுடைய படுக்கையறைக்குப் போவதற்காக அவ்வழியே வந்தாள். அவள் அங்கு நடக்கும் போராட்டத்தைப் பார்த்துவிட்டு எல்லாச் செய்திகளையும் உசாவித் தெரிந்து கொண்டாள். பிறகு துறவியைப் பார்த்து, "ஓய் துறவியாரே! நீர் இவ்வரண்மனையை அறச்சாலையென்று எண்ணிக்கொண்டது எந்த அறிவினால்?" என்று கேட்டாள். அதைக் கேட்ட துறவி, "அம்மே! இந்த அரண்மனை யாருடையது?" என்று அரசியைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அரசி, "இது மன்னாதி மன்னனாகிய என்னுடைய தலைவனுக்குரியது," என்று கூறினாள்.

பிறகு துறவிக்கும் அரசிக்கும் பின்வருமாறு உரையாடல் நடைபெற்றது.


துறவி : உன்னுடைய தலைவனுக்குமுன் இதில் வாழ்ந்திருந்தவர்கள் யார்?

அரசி : என் தலைவருக்கு முன்பு அவருடைய தந்தை வாழ்ந்திருந்தார்.

துறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்?

அரசி : அவருடைய தந்தை

துறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்?

அரசி : அவருக்கு முன்பு இது வேற்றரசன் ஒருவனுக்கு உரியதாக இருந்தது. அவ்வேற்றரசனோடு போரிட்டு இந்நாட்டையும் அரண்மனையும் அவர் கைப்பற்றிக்கொண்டார்.

துறவி : அவ்வேற்றரசனுக்கு முன்பு இருந்தவர் யார்?

அரசி : அவனுடைய அப்பன்.

துறவி : அந்த அப்பனுக்கு முன்பு இருந்தவர் யார்?

அரசி : (சினத்தோடு) அதற்குமுன்பு அவன் அப்பன், அவனுக்குமுன் அவன் அப்பன், அவனுக்கு முன்பு அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன்.

துறவி : ஓ அரசியே! சினங்கொள்ளாதே. உன் கணவனுக்குப்பின் இதில் இருக்கப் போகிறவர்கள் யார்?

அரசி : என்னுடைய மகன், பேரன் முதலானவர்கள் இருப்பார்கள்.

இதனைக் கேட்ட துறவி, "அம்மா ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாய்ப் பலபேர் இம்மாளிகையில் குடியிருக்கிறார்கள். இன்னும் இதில் எத்தனையோ பேர்கள் குடியிருக்கப் போகிறார்கள். இவ்வளவு பேர்களுக்கும் பொதுவான இருக்கும் இந்த இடத்தை ஓர் அறச்சாலை என்று உரைத்தால் அதில் தவறு என்ன இருக்கிறது?"என்று கேட்டார்.

இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருத்தலை அடுத்த அறையில் இருந்த அரசன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்விடத்திற்குப் புறப்பட்டு வந்து துறவியைப் பார்த்தான். அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் மண்டையோட்டைச் சுட்டிக் காட்டி, "இவ்வோட்டை எதற்காக வைத்துக்கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான்.

துறவிக்கு வேந்தன், துரும்பாகையால் துறவி அரசனை ஒருபொருளாக மதிக்கவில்லை. அவனைப் பார்த்து, "நான் இடுகாட்டு வழியாக வரும்போது இவ்வோடு அங்கே கிடைத்தது. இதைக் கண்டதும் இஃது உன்னைப் போன்ற ஒரு பெரிய அரசனுடைய மண்டையோடா? அல்லது என்னைப் போன்ற ஓர் எளிய துறவியின் மண்டையோடா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகியது. மெதுவாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்,"என்று கூறினார்.

அரசனும் அரசியும் ஆணவம் அகன்று சீர்பெற வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினார். அருட்கண் கொண்டு அவர்களை நோக்கினார். "உயிர் நீங்கிய பிறகு அரசனும் ஏழை எளியவர்களும் ஒரே நிலைமையை அடைந்து விடுகின்றனரேயன்றி எவ்வளவும் ஏற்றத் தாழ்வு காணப்படுகின்றதில்லை. நல்லறஞ் செய்தவர்கள் நல்லுலகு நண்ணுவார்கள். தீமை செய்தவர்கள் வருந்துதற்கிடமாகிய நரகத்தினை அடைவார்கள். நீங்கள் இருவரும் இனிமேல் நல்லியல்பு அமைந்தவர்களாய்த் தெய்வ எண்ணத்தோடு வாழ்ந்துவரல் வேண்டும். நீங்கள் எவ்வாறு வாழ்ந்து வருகிறீர்களோ அவ்வாறுதான் உங்களுடைய நாட்டு மக்களும் நடப்பார்கள்," என்று அறிவுரைகள் பல கூறினார். அரசனும் அரசியும் அவருடைய அறிவுரையை ஏற்றனர். அவரைப் பணிந்தபோற்றிச் செய்யத்தக்க சிறப்புகளைச் செய்து அனுப்பினர். அன்று முதல் அந்நாடும் சீர் பெறலாயிற்கு.

(தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற நூலிலிருந்து எடுத்தக் கதை. இப் புத்தகத்தைத் திருத்தி அமைத்தவர் : இராமசாமிப் புலவர்)

Comments