ஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. தங்களுக்குமேல் ஒன்றுமே இல்லை என்னும் போக்கில் உள்ளங் களித்திருந்தார்கள். 'அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பது பெரியோர்களின் உரையல்லவா? அந்த அரசனுடைய ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்த மக்களும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை. உலகம் நிலையாமை முதலியவைகளை அறவே மறந்துவிட்டுச் செருக்கியிருந்தார்கள். அரசனுக்கோ குடிகளுக்கோ அறிவுரை கூறுவார் எவருமிலராயினர். இவர்கள் இவ்வாறிருக்கையில் உலகவாழ்வின் மெய்மையை உள்ளவாறுணர்ந்த துறவியொருவர் ஒருநாள் அவ்வூர் வழியே சென்றார். அவ்வூர் அரசனும் குடிமக்களும் அடைந்திருக்கும் அறிவுமயக்கம் அத்துறவிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. அவர் அவ்வூரார்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அன்றிரவில் அரசனுடைய அரண்மனைக்குள் ஒருவரும் அறியாவாறு நுழைந்து ஓரிடத்தில் ஒரு புலித் தோலை விரித்துக் கொண்டு படுத்தார். தமக்குப்...