Skip to main content

சியாட்டல் விற்ற நிலம்

மெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா, கனெக்டிகட், ஐயோவா, சியாட்டல் போன்ற ஏற்கனவே இருந்த பூர்விக அமெரிக்க இந்தியப் பெயர்களும் அவற்றிற்கு இடப்பட்டன.

மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களில் சியாட்டல் ஒரு தனி மனிதனின் பெயர்.சியாட்டல் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். ஒரு பூர்விகக் குடித் தலைவரின் பெயர்தான் சியாட்டல். அவரது இனத்தவர்கள் வசமிருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பை அமிரிக்க அரசாங்கம் தந்துவிடுமாறு கேட்டது. தானமாக இல்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அதற்கு விலையாகத் தர முன்வந்தது. சியாட்டலால் முடியாது என்று கூற இயலவில்லை. ஒரு பூர்விகக் குடியால் ஒரு நாட்டை எதிர்க்க முடியாது என்று அவருக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும். ஆனால் மக்கள் நேசித்து வாழும் ஒரு பூமியை விற்பதென்பது மெய்யாகவே அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.அது சாத்தியம் என்றே தோன்றவில்லை. தனது மக்களின் நிலைப் பாட்டினை அவர் ஒரு உரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். அது புகழ் பெற்ற, மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த, குடிகளுக்கு சொந்த மண்ணின் மீதுள்ள ஈர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் ஈடு இணையற்ற உரை.

``வானத்தையோ பூமியையோ விற்கவோ வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது.``

``நமக்கு சொந்தமில்லாத பொழுது அதை உங்களால் எவ்வாறு வாங்க இயலும்? `` இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்கு புனிதமானது. ஒவ்வொரு பளபளக்கும் பைன் மர இலையும், ஒவ்வொரு கரையும், கானகத்தினுள்ள ஒவ்வொரு பனித்துளியும், ஹம்மென்று இரையும் ஒவ்வொரு ஜந்துவும் எங்கள் நினைவிற்கும் அனுபவத்திற்கும் புனிதமானது. மரங்களில் பாய்கின்ற தாவரப்பால் எங்கள் செவ்விந்தியர்களின் நினைவுகளை ஏந்திச் செல்கின்றன.`` வெள்ளையர்களை நோக்கிய உரை அது என்பதை மனதில் கொண்டால் அதன் விமர்சனங்கள் எவ்வளவு துணிவானவை என்பதையும் உணரமுடியும்.

`` வெள்ளையர்களால் எங்கள் வாழ்வு முறைகளப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு நிலத்தின் ஒரு பகுதி அதன் மற்றொரு பகுதியைப் போன்றே வித்தியாசமற்றதாக உள்ளபடியால் ஒரு அந்நியனாக இரவில் வந்து நிலத்தில் அவன் தனக்கு வேண்டியதை எடுத்துச் சென்றுவிடுகிறான். பூமி அவனது சகோதரன் அல்லன். அது அவனது பகைவன். அதை வசப்படுத்திய பிறகு அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அவன் தனது தந்தையின் கல்லறையைவிட்டு ஓடுகிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. அவனது தந்தைமார்களின் கல்லறைகள், குழந்தைகளின் பிறப்புரிமைகள் யாவையும் அவன் மறந்து விடுகிறான்.

``அவனது தாய், நிலம், சகோதரன், வானம் ஆகிய அனைத்தையும் வாங்கவும், கடத்திச் செல்லவும், அவற்றை ஏதோ ஆடுகளைப் போலும் பிரகாசமான பாசிமணிகளைப் போலும் விற்கும் பண்டங்களாக அவன் பாவிக்கிறான். அகோரப் பசி கொண்டு பூமியை விழுங்கிவிட்டு பின்னர் அதை ஒரு பாலையாக விட்டுச் செல்வான்.`` இந்த உரையை சியாட்டல் தனது சுகுவாமிஷ் மொழியில் 1854ல் நிகழ்த்தினார். அச்சமயத்தில் அதை டாக்டர் ஹென்றி ஸ்மித் ஆங்கிலத்தில் படியெடுத்துக் கொண்டார். எனவே அப்பொழுதே உரையின் சாராம்சம் ஆங்கில நடைக்கு ஏற்றாற்போல் மாற்றம் கொண்டு விட்டது. அது சியாட்டல் சன்டே ஸ்டார் பத்திரிகையில் வெளியானது. அதன் புகழ் மெல்ல பரவத் தொடங்கியது.தங்களுக்கு மிகவும் அந்நியமான சுற்றுப்புற சூழல் அக்கறை அந்த உரையில் இருப்பதை மேற்கத்தியர்கள் சுவாரஸ்யத்துடன் பார்க்கத் துவங்கினர். எழுத்தாளர்கள் அதில் கை வைக்கத் தொடங்கினார்கள். சொற்கள் மாற்றப்பட்டன.

செவ்விந்தியர்களின் இயற்கை பற்றிய உணர்வுகள் மேலும் சுவாரஸ்யமாக அதில் புனைந்து சொருகப் பட்டன. கூடவே வெள்ளையர்களைப் பற்றிய வாசகங்களில் செமையாகக் காரம் தூவப்பட்டது. இவையெல்லாம் போதாது என்று டெட் பெரி என்னும் சினிமா வசனகர்த்தா அதற்கு மேலும் முலாம் பூசினார். அமெரிக்க அதிபர் பிராங்ளின் பியர்ஸீக்கு சியாட்டல் கடிதம் எழுதியதாக காட்சி அமைக்கப்பட்டது. அது உரை என்பது மறைக்கப்பட்டது. டெட் பெரியினால் வடிவமைக்ப்பட்ட சியாட்டலின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. சுற்றுப்புற சூழல் பற்றிய ஒரு அரிய பிரகடனமாக அது அதிபர் புஷ் உட்பட பலராலும் எடுத்தாளப்பட்டது.

இந்தக் கட்டுரையில் நான் மொழிபெயர்த்திருக்கும் பகுதிகளும் டெட் பெரி அளித்துள்ள வடிவத்திலிருந்துதான் எடுக்கப்பட்டவைதான். எல்லோருக்கும் அந்த உரை என்ன விளைவுகளை உருவாக்குகிறதோ அதே விளைவுகளை இக்கட்டுரை படிப்பவர்களுக்கும் முதலில் ஏற்படுத்த வேண்டி அவ்வாறு செய்தேன். சியாட்டலின் உரை வேறானது. முதலாவதாக சியாட்டல் நிலத்தை வாங்குவது விற்பது பற்றி தன்னால் எண்ணிப் பார்க்க வியலாது என்று தனது உரையில் சொல்லவில்லை.

பேரத்தை அவர் ஏற்பதில்லையேயொழிய வியாபாரம் அறிந்திராதவர் அல்லர் அவர். வெள்ளைக்காரன் கடவுள் வேறு தங்களது கடவுள் வேறு என்றும் சியாட்டில் சொல்கிறார். இருவருக்கும் ஒரே கடவுள்தான் என்று அவர் சொன்னதாக ஹாலிவுட் வசனகர்த்தா மாற்றிவிடுகிறார். தங்களால் சண்டை செய்ய இயலாது என்றும் சியாட்டல் தெரிவிக்கிறார். உண்மை நிகழ்வுக்கும் புனைவுக்குமான முரண்பாடுகள் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டவை. சியாட்டலின் ஆளுமையை உண்மைக்கு புறம்பாக மாற்றிவிட்டதன் மூலம் அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக்க முடிந்திருக்கிறது. அதாவது அது விற்பனைக்குரியதாக க்கப்பட்டுவிட்டது. மேற்கத்தியர்கள் விரும்புவது ஒன்றைத்தான். அது வர்த்தகம். அது இயலாதபொழுது போருக்கு ஆயத்தமாகிறார்கள். சியாட்டலிடம் நிலத்தை அவர்கள் போரிட்டு அடைய விரும்பவில்லை. அதில் உயிரிழப்பு ஏற்படும். உயிரிழப்பிற்கு அவர்கள் பயப்படுவதன் காரணம் தங்களுடைய மக்களையும் அதில் இழக்க வேண்டி வருமே என்பதால்.

தவிர போரினால் ஏற்பட்ட தோல்வியை எதிரிகள் பரம்பரை பரம்பரையாக நினைவில் கொண்டிருப்பார்கள். மாறாக விலை கொடுத்து வாங்கிவிட்டால் இரண்டையும் தவிர்த்துவிடலாம்.

வர்த்தகம் செய்ய வேண்டி ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு இங்கே கிடைத்த வரவேற்பு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. மேற்கத்தியர்கள் தலையீட்டை இங்குள்ள குறு நில மன்னர்கள் தாமாகவே வேண்டினர். அவர்களுக்கு கோட்டை கொத்தளங்களை அமைத்துகொள்ள சுலபமாக அனுமதி அளித்தனர். தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களுக்கு கோட்டை கட்ட தரப்பட்ட அனுமதி ஒரு உதாரணம். ஆங்கிலேயர்கள் வாங்கமுடிந்தவற்றையெல்லாம் வாங்கினர். மூன்று மைல் நீள மீனவக்குப்பமான மதராசப்பட்டினம் இரண்டு வருடக் குத்தகைக்கு ஆங்கிலேயர்க்கு முதலில் தரப்பட்டது. கல்கத்தா மூவாயிரம் ரூபாய்க்கு ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டது. உரிமை பாராட்டி போர்க்குணம் பூண்டு வரி செலுத்தவும் இயைந்து போகவும் மறுத்தவர்களுடன் சண்டையிட்டனர். இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆளத் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது புரிந்து கொள்ளக்கூடியதுதான். சில படிகள் மேலே சென்று இந்தியர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் எனவே தங்களால் கல்வி புகட்டப்பட வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்றும் அவர்கள் அதிகார மமதையுடன் எண்ணத் தொடங்கினர்.

இந்தியாவிலிருந்து செல்வத்தையெல்லாம் பெயர்த்து எடுத்துக்கொண்ட பின்னர் அதை ஆள்வதின் சிரமத்தை அவர்கள் உணரத்தொடங்கினர். தங்களது பொறுப்புகள் குறித்து ரொம்பவே அங்கலாய்த்தனர். மெக்காலே போலன்றி இந்தியாவின் மீது ஓரளவு நேசம் பூண்டிருந்த ருட்யார்ட் கிப்ளிங் இதை வெள்ளையனின் சுமை என்று தலைப்பிட்டு கவிதை எழுதினார். பிலிப்பைன்ஸ்மீது அதிகாரம் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு அறிவுறுத்தும் வகையில் அக்கவிதை எழுதப்பட்டது. மார்க் ட்வைன் பழுப்பு நிறத்தவனின் சுமை பற்றி யார் எழுதுவது என்று தனக்கேயுரிய கிண்டலுடன் அதை விமர்சித்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைவிட்டு வெளியேறிய பொழுது நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக பல சரித்திர சிரியர்கள் எண்ணம் கொள்கின்றனர். ஆனால் இந்தியா அதை தனக்கு கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்த்தது. மனமுவந்தும் காசுக்கும் இங்குள்ள நிலங்களை ஈந்துவிட்டு பின்னர் அவற்றை மீட்டெடுக்க வந்தே மாதரம் என்று குரல் கொடுத்து தியாகிகளை உருவாக்கிய வேதனை / வேடிக்கை வரலாறு நம்முடையது.

மேற்கத்தியர்களுக்கு எத்தகைய அனுபவம் வாய்க்கிறது என்பதைப் பார்த்தால் அது வேறு மாதிரியாக உள்ளது. முதலில் ஆக்ரமிப்பு/ படையெடுப்பு என்றெல்லாம் நிகழ்த்தி நாட்டைக் கைப்பற்றி நாசம் விளைவித்துவிட்டு பின்னர் வருந்தி அந்நாட்டின் சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு உதவிகள் செய்ய வருகிறார்கள். ரத்தக்கறை படிந்த தங்கள் வரலாற்றைக் கண்டு வெட்கித் தலைகுனிவதுபோல் அவர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். அவற்றிலும் லாபம்தான். சியாட்டலிடமிருந்து முதலில் நிலம். அது முடிந்த பிறகு அந்த உரையை இலக்கியமாக ஜோடனை செய்து போற்றுவது. நாம் முதலில் விற்கிறோம் / பறிகொடுக்கிறோம். பின்னர் வருந்துகிறோம்.

அவர்கள் முதலில் வாங்குகிறார்கள் / அபகரிக்கிறார்கள். பின்னர் வருந்துகிறார்கள். வருந்துவது போல் பாசாங்கு செய்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

Comments

நல்லதொரு கட்டுரை.பணி நிமித்தமாக சியாட்டலில் இரு மாதம் தங்கியிருந்தேன். செவ்விந்தியர்கள் மிகக்குறைவாகவே தென்பட்டார்கள்.சுற்றிலும் மலைகளும்,அருவிகளும் நிறைந்த பசுமையான பூமி சியாட்டல்.
Vetirmagal said…
good write-up. Learnt some America history . and an honest point about our own past.

Greed , jealousy and occupation is hte mantra that is succesful. Isn't it the norm nowadays too?

Thought provoking.