Skip to main content

சில குறிப்புகள் - 6

நான் சில குறிப்புகள் என்ற தலைப்பில் எனக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டே போகிறேன். பெரும்பாலும் கவிதைக் குறித்து என் கருத்துக்களைப் பதிவுப் செய்கிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் கவிதை. ஒரு கவிதையைச் சிறந்த கவிதை என்று சொல்வது நம்மில் உள்ள பலருக்கு மனது வராது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கவிதையை அணுகிறார்கள். கவிதைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருநண்பர் அவருடைய கவிதைத் தொகுதியை பணம் செலவழித்துக் கொண்டு வந்தார். அந்தத் தொகுதியை இன்னொரு நண்பருக்கு கொடுத்துவிட்டு அவருடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார். புத்தகத்தை வாங்கிய நண்பரோ கவிதை எழுதிய நண்பருக்கு ஏற்ற மாதிரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கவிதை நண்பர் புத்தகம் கொடுத்த நண்பரைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கவிதைத் தொகுதி மட்டும் வெளியிடாமல் இருந்திருந்தால், இதுமாதிரியான வசுவுகளுக்கு ஆளாகமலிருந்திருக்கலாம்.

சரி எப்படி ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண்பது. கவிதையைப் படித்த மாத்திரத்திலேயே பல சிந்தனைகளை மனதில் ஏற்படுத்தும். அதாவது கிணற்றில் கூழாங் கற்கள் ஒவ்வொன்றாய் விழ ஏற்படும் அதிர்ச்சி தண்ணீரில் தெரிவதுபோல். நம் ஞாபகத்தில் ஒரு சிறந்த கவிதை பலநாட்கள் தங்கிவிட வேண்டும். ஏன் வருடக் கணக்கில். அப்படித் தங்கி விடுகிற கவிதையை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து எடுத்துப் படித்துக்கொண்டிருப்போம்.

எனக்கு இப்படித்தான் க.நா.சு வின் கவிதை ஒன்று மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். 'நல்லவர்களும் வீரர்களும்' என்ற கவிதையைப் பார்ப்போம்.

கடவுளுக்குக் கண் உண்டு; அவனுக்கு

வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப

ரொம்பப் பிடிக்கும். சண்டையில் வீரர்களையும்

சமாதானத்தில் நல்லவர்களையும்

அதிகநாள் உழலவிடாமல் சீக்கிரமே

அழைத்துக் கொண்டுவிடுவான்

கடவுளுக்கு உண்மையிலேயே கண் உண்டு

நிச்சயமாக நம்பலாம்.

இந்தக் கவிதையைப் படிக்க படிக்க எனக்கு க.நா.சுவின் பெயர் எப்போதும் ஞாபகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இக் கவிதையை மறக்க முடியாது என்ற எண்ணத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படாது.

Comments