Skip to main content

மாமா எங்க?

சிறுகதை

"மாப்ளை.. கதவத் தெறடி..யேய்.." வரும்போதே கடைக்குச் சென்று விட்டு வருகிறார் என்பது குரலிலிருந்தே தெரிந்தது. மாமாவுக்கு எப்போதும் இதே வேலையாகி விட்டது. கடைக்குப் போய் தண்ணியடித்து விட்டு நேராக எங்கள் வீட்டுக்குத் தான் வருவார். அவர் வீட்டுக்குப் போகவே மாட்டார். காலையில், சேவல் கூவி, நாங்கயெல்லாம் ஸ்கூலுக்குப் போன பின்னாடிதான் போவார்.

சொக்கலிங்கம் மாமா எங்களுக்கு கொஞ்சம் பக்கத்து மாமா. எங்க ஊருக்குப் பக்கத்து ஊருக்கு கிட்டக்க தான் அவருக்கு பொண்ணு எடுத்திருக்காப்ல. அதனால, ஆ.. ஊ..னா மாமியார் வீட்டுக்குப் போயாறேன்னு கெளம்பிடுவாக. ஆனா அங்க போகாம, எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு போய் கடைக்குப் போய் தண்ணியடிச்சுட்டு எங்கயாவது போய்ட்டு, காலையில வீட்டுக்குப் போயிடுவாங்க. சிலசமயம் எங்க வீட்டுக்கும் வந்து படுத்துக்குவாங்க. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுனாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார்.

வழக்கமா அமைதியா வருவாரு. மெதுவா கதவத் தட்டி, அம்மாவைக் கூப்பிடுவாரு. அம்மா வந்து அழும். 'ஏண்ணே, இப்படியெல்லாம் குடிச்சு ஒடம்ப கெடுத்துக்கறேனு' அழும். அங்க ஒரு பாசமலரே நடக்கும். அப்புறம் எங்ககூட வந்து படுத்துக்குவாரு.

சிலசமயம் ரொம்ப சத்தத்தோட வருவாரு. அப்படி வந்தாருனா, அவருக்கும் அத்தைக்கும் ஏதோ பெரிய பிரச்னைனு அர்த்தம். இன்னிக்கும் அப்படித் தான் வந்திருக்காரு. என்ன பிரச்னையோ?

அத்தை சிவகாமி ரொம்ப நல்லவங்க. நாங்க ஊருக்கு எப்பப் போனாலும் ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க. அண்ணனுக்கு ஆத்துல நீச்சல் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அய்யனாரு தோட்டத்துல மாங்காப் பறிச்சுத் தந்தாங்க. ஏதாவது நோம்பினா அவ்ங்க வீட்டுக்குப் போனா, கெடா வெட்டிப் போடுவாங்க. அதுலயும் வரமொளகாயத் தூவி, எண்ணெயத் தடவி, வெயிலில் காய வெச்சு, நல்லெண்ணெயில வறுத்துக் குடுப்பாங்க பாருங்க, விரால் மீன் துண்டு.! சும்மா, ஜிவ்வுனு மணடையில காரம் ஏறும். கண்ணுல எல்லாம் தண்ணி வந்துடும். அப்புறம் ரெண்டு நாளு, எங்கெங்கெயோ எரியும்.

ஒருதபா நடந்தது நல்லா ஞாபகம் இருக்கு. அண்ணன் மட்டும் ஆத்துல எறங்குறான்னு நானும் தபார்னு ஆத்துல குதிச்சுட்டேன். கல்லு இருக்கும்னு நெனச்சு குதிச்ச எடத்துல ஒண்ணுமே இல்ல. கால ஊனிக்கலாம்னு கால கொண்டு போறேன். ஒண்ணுமே ஆம்படல. தண்ணி உள்ள இழுக்குது. சரேல்னு உள்ள போய்ட்டேன். ஆத்து மண்ணு காலுல் மட்டுப்படுது. சுத்தி சுத்திப் போடுது. ஒருசமயம் மேல வரேன். இன்னொரு சமயம் கீழ போறேன். சுத்திச் சுத்தி வரேன். கைய, கால ஒதறுறேன். நொர நொரயாத் தள்ளுது. வாயில, காதுல எல்லாம் தண்ணி பூந்திடுச்சு. ஒரே மண்ணு கெளறி, கண்ணுக்குள்ள எல்லாம், மண்ணு. கண்ணத் தெறக்கவே முடியல. சர்தான், சோலி முடிஞ்சுதுனு நெனச்சுட்டேன். பக்கத்துல ஏதோ இடிச்ச மாதிரி இருந்துச்சு. ஒரு பாற. அது முச்சூடும், பாசி. புடிக்கப் போனா, வழுக்கி, வழுக்கி வுடுது. போதாக்கொறைக்கு, ஆறு அது பக்கமா இழுக்க ஆரம்பிச்சுது. என்ன பண்றதுனே தெரியல.

யாரோ என் தலமயிரப் புடிச்சு இழுத்தாங்க. அவங்க கையைப் புடிக்க தண்ணிக்குள்ள தடவுறேன். படார்னு ஒரு அறை வுழுந்துச்சு. அவ்ளோதான் அப்படியே மயங்கிட்டேன். ஆனா அறையும் போது, கேட்ட வளையல் சத்தம், அந்த கை அத்தை கையினு சொல்லிடுச்சு.

நல்லவேளை அன்னிக்குப் பொழச்சதே, ஒம்பாடு, எம்பாடுனு ஆயிடுச்சு. தண்ணிய உறிஞ்சி, வைத்தியருகிட்ட கூட்டிட்டு போயி, பச்சில எல்லாம் கட்டி, ஒருவாரம் நல்லா கவனிச்சுகிட்டாங்க, அத்தை.

அப்படிப்பட்ட அத்த கூட ஏன் மாமா அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு வர்றாருனு தெரியாம எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும். ஆருகிட்ட கேட்கறதுனு நானும் அமைதியா இருந்திடுவேன்.
மாமா வழக்கம் போல உள்ள வந்து எங்ககூட படுத்துக்கிட்டாங்க. எப்பவும் வந்ததும், ஒருபக்கமா திரும்பிப் படுப்பாங்க. கொஞ்ச நேரத்துல கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னிக்கு என்னவ்00 தெரியல, தூங்காம எங்களையே பாத்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முழிச்சுக்கிட்டு தான் இருந்தோம்.

என்னை எடுத்து மடியில வெச்சுக்கிட்டாங்க.
"ஏண்டா சுந்தரம்..? ஒனக்கு கட்டிக்க எந்த மாதிரிடா பொண்ணு பாக்கறது..?" அண்ணனைக் கேட்டாரு.
மாமா தண்ணியடிக்காதப்போ, நல்ல மாதிரி எங்ககூட பேசுவாருங்கறதுனால, நாங்களும் அவருகிட்ட கொஞ்சம் நல்லாவே பேசுவோம். இந்த மாதிரி வெசனம் கெட்ட கேள்வியெல்லாம், எங்களுக்கு சகஜங்கறதுனால, எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்ல.

"மாமா..! நான் கட்டிகிட்டா நதியா மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டிக்குவேன்.."னான் அவன்.
கெக்கேபிக்கேனு மாமாவுக்கு ஒரே சிரிப்பு. " ஏண்டா, மூளையத்தவனே! அதுக்கெல்லாம் செவத்த மூஞ்சி இருக்கணும்டா..! ஒன்ன மாதிரி கருவா மூஞ்சிக்கு நதியா கேக்குதாடா..?" அண்ணன் மூஞ்சில செல்லமா குத்தினாரு. அவன் மூஞ்சி வாடிப் போச்சு.

"ஏண்டா சின்னவனே! ஒனக்கு..?"னு கேட்டாரு.

"மாமா..! நான் கட்டுனா சிவகாமி அத்த மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டுவேன்.."னேன். இப்ப அவரு மொகம் சுருண்டு போச்சு. என்னை அவர் மடியில இருந்து எறக்கி வெச்சிட்டு, போய்ப் படுத்துக்கிட்டாரு.
எனக்கு எதுவும் வெளங்கல.

"மாமா..! என்ன மாமா அதுவும் சொல்லாம, படுத்துக்கிட்டீங்க.."னு கேட்டேன்.

"டேய்..! உங்க அத்த நல்லவ. ஆனா அவள எனக்குப் புடிக்கல. உங்கப்பனும் அம்மாவும் தான் கட்டாயப் படுத்தி, எனக்கு அவள கட்டி வெச்சிட்டாங்க. உனக்குத் தெரியுமா..? நான் சாமியாரா போயிடலாம்னு இருந்தேன். கல்யாணம் பண்ணி வெச்சா நான் மாறிடுவேன்னு பண்ணி வெச்சாங்க. எதுக்கு நான் மாறணும்? நான் இப்படியே தான் இருப்பேன். நாளக்கு காலையில காசிக்கு திருட்டு ரயில் ஏறப் போறேன். அதுக்கு முன்னாடி உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன். உங்கள எல்லாம் பாத்தா எனக்கும் குடும்பம், புள்ள, குட்டிகனு நெனப்பு வந்துடும்னு பயம் இருந்தாலும், உங்கள பாக்காம போக மனசு வரல். அதான் இன்னிக்கு வந்திருக்கேன்."னு சொல்லிட்டு மாமா படுத்திட்டாரு.

எனக்கு பயமாகிடிச்சு. நானும் போய் அண்ணன் கூடயே படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுச்சு.

மறுநா காலயில முழிச்சுப் பாத்தா, மாமா இல்ல. அவரு நேரமா போயிட்டாருனு அம்மா சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் ஞாபகம் இல்ல.
அத்த அழுதிட்டே வந்தாங்க. அவங்க பீரோ துணிகளுக்கு நடுவுல மாமா எழுதி வெச்சிருந்த கடுதாசி இருந்துச்சாம். அதுல எங்கயோ போறேன், தேடாதீங்கனு எழுதி வெச்சிருந்தாராம்.

என்கிட்ட எங்கயோ போறேனு சொன்னாரு. எங்கனு தான் ஞாபகம் வர மாட்டேங்குது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்றீங்களா..?

தயவு செஞ்சு சொல்லுங்க. பாவம் எங்க அத்தை, இன்னும் அழுதுகிட்டே இருக்காங்க...

Comments

Popular posts from this blog