Skip to main content

ஜன்னல் வழியே



சம்பவம் 1

னக்கு வயிற்றுப்போக்கு கண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் மருந்துக்கடைக்கு, என் பிரச்சினைத் தீர மாத்திரைகள் வாங்கச் சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் நிவாரண மாத்திரைகளைத் தந்துவிட்டு, மிகவும் மென்மையாகவும், பொறுமையாகவும், "ஒரு முறை அவசரத்தில் ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள மாத்திரைகளை நீங்கள் வாங்கிச் சென்றது நினைவில் இருக்கிறதா?" என்று கேட்டார். அவர் பேசிய தொனி நலன் விசாரிப்புத் தொனி. எனக்கும் நினைவுக்கு வந்து நான் காசு கொடுத்தேன். பேருந்து நிறுத்தத்துக்குப் போக வேண்டுமானால் அந்தக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். எத்தனையோ முறை கடையைக் கடந்து சென்றிருந்தும் என்னை அழைக்காமல் கடைக்கு மீண்டும் சென்றபோதுதான் பாக்கி கேட்ட கடைக்காரரின் இங்கிதமும், பெருந்தன்மையும் என்னைத் தொட்டன.


சம்பவம் 2


நான் தேனீர் அருந்தும் கடையில் பீடி சிகரெட்டும் விற்கிறார்கள். ஒரு முறை ஒரு ரூபாய்க்குக் காஜா பீடி கேட்டபோது, கடையை நடத்திவரும் பெரியவர் ஐந்து பீடிகளைக் கொடுத்தார். ஒரு ரூபாய்க்கு நான்கு பீடிகள்தான். கூடுதலாகப் பெற்ற ஒரு பீடியைத் திருப்பித் தந்தேன். பெரியவர் மிகுந்த நன்றியுணர்வுடன் அதைப் பெற்றுக்கொண்டார். அடிப்படை நம்பிக்கைதான் உறவுகளின் அஸ்திவாரம் என்று நினைக்கத் தோன்றிற்று.

சம்பவம் 3

ங்கோ வெளியே சென்று இரவு ஒன்பது மணி வாக்கில், கிடைத்த கட் சர்வீஸ் பேருந்தில் ஏறி அண்ணாநகர் மேற்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கு என் வீட்டுக்குப் போகும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். நெரிசல் இருந்தால் நான் பேருந்தில் பயணம் செய்ய மாட்டேன். தோள்பையைச் சுலபத்தில் பிளேடு போட்டு அறுத்து விடுகிறார்கள். எனக்கு அந்த மாதிரி மூன்று முறை நடந்திருக்கிறது. மனம் இறுக்கத்துக்கு உள்ளாகியிருந்தது. பக்கத்தில் ஓர் ஆட்டோ வந்தது. "சாருக்கு எங்கே போகணும்?" என்று கேட்டார் ஓட்டுநர். நானும் சொன்னேன். "ஐந்து ரூபாய் கொடுங்கள், போதும்," என்றார் அவர். அதே மாதிரி ஒரு பிராமணப் பெண்மணியையும் ஐந்து ரூபாயில் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். பொதுவாக என் வீட்டருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு ரூ.15க்குக் கீழ் வர மாட்டார்கள். அதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை என்றால் ரூ.35 க்குக் கீழ் வர மாட்டார்கள். ஓட்டுநர் பேசிக்கொண்டு வந்தார். தான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும் வழியில் ஓரிருவருக்கு ஓர் உதவியாகக் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதாகவும் சொன்னார் அவர். இதனால் அவரைச் சக ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டுவதாகவும் அதை அவர் பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார். அந்த ஆட்டோ ஓட்டுநரின் உபகாரம் என் மனதைத் தொட்டது.


சம்பவம் 4

22.12.2002 (ஞாயிறு) நவீன விருட்சம் ஏற்பாடு செய்த ஆத்மாநாம் இலக்கியக் கூட்டம். ஆத்மாநாம் கவிதைகள் குறித்துக் கலந்துரையாடல். உடல்நலம் பாதிப்படைந்ததால், கலந்து கொள்ள முடியாமல் போனது. கூட்டம் மாலை 4 மணிக்கு. இரண்டு மணி வாக்கில் மூச்சிரைப்பு அதிகரித்து விட்டது. அதையும் மீறிக் கூட்டத்தில் கலந்து கொண்டால், ஒருகால் நான் பிற நண்பர்களுக்கு ஒரு சுமையாக ஆகியிருப்பேன். ஆத்மாநாம் மீது நான் பெரும் மதிப்பு கொண்டவன். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனது அவருடைய நட்புக்கு நான் செய்த துரோகம் என்று நினைக்கத் தோன்றிற்று. இந்த உணர்வு எனக்குள் ஏற்கனவே இருக்கும் மனச்சோர்வை அதிகப்படுத்தியது. என்னையே நான் சபித்துக்கொண்டேன்.

Comments