Skip to main content

நூலகங்களின் தேவை

ரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் அந்த மாவட்டத்திலுள்ள நூலகங்கள் சிலவற்றுக்குப் பிரதிகள் வாங்கப்படும். பதிப்பாளரே அந்த முப்பது நாற்பது நூலகங்களுக்கு தனித்தனியாக நூலும் நூலுக்கான விலை உத்தரவு ரசீதையும் அனுப்ப வேண்டும். இதைத் தவிர அந்த ரசீதின் நகலையும் அந்தக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா நூலகங்களுக்கும் பிரதிகள் கிடைத்து விட்டன என்ற தகவல் கிடைத்தபிறகு பதிப்பாளருக்கு முதலில் ஓர் ஒப்பந்தங் கடிதம் அனுப்பப்படும். அவர் இப்போது மொத்தப் பிரதிகளுக்கும் சேர்த்து ஒரு ஒப்புதல் ரசீதை அனுப்ப வேண்டும். அதன்பிறகு பணத்திற்குக் காத்திருக்க வேண்டும். அந்த நிலை இப்போதில்லை. இப்போது பிரதிகளும் நிறைய வாங்கப் படுகின்றன. ஆதலால் இந்த நூலக ஒப்புதல் உத்தரவு முக்கியத்துவம் அடைகிறது. இது நூல்கள் என்றில்லாமல் பத்திரிகைகளுக்கும் பொருந்தும். பல பத்திரிகைகளை நூலகங்களில்தான் காணலாம்.

'காலச்சுவடு', 'நவீன விருட்சம்' போன்ற பத்திரிகைகள் நூலகங்களுக்குப் போனால்தான் நிறைய வாசகர்களை எட்ட முடியும். குடும்பத்திற்கு எல்லாருக்குமானவை என இயங்கும் வெகுஜனப் பத்திரிகைகளை நூலகங்கள் வாங்க வேண்டிய கட்டாயம்கூட இல்லை. சிறு பத்திரிகைகள் எல்லாமே வாசகர்களை மதிப்பவையாகாது. பல சந்தர்ப்பங்களில் இப் பத்திரிகைகளின் பக்கங்கள் ஒரு தனி நபர் விமரிசனத்துக்காகவே ஒதுக்கப்படுள்ளனவோ என்று தோன்றும். அதேபோல வழிபாடும் நடக்கும்.

நூலகங்களில் பத்திரிகைகள் வாங்குவது ஓரளவு அப்பத்திரிகைகளுக்கும் ஒரு சுயக்கட்டுப்பாடை ஏற்படுத்தும். பொறுப்புடன் நடத்தப்படும் சிறு பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றை நூலகங்கள் வாங்குவது மிக அவசியம். அத்தகைய பத்திரிகைகளை வாங்குவதை நூலகங்களின் பொறுப்பு, கடமை என்று கூடக் கூறலாம். தமிழக அரசே நடத்தும் 'தமிழரசு' மத்திய அரசு நடத்தும் 'போஜனா' போன்ற பத்திரிகைகளை நூலகத்தில்தான் படிக்க முடியும். அயல் நாட்டு விநியோகத்திற்கென்று மிக மெல்லிய உயர் ரகத் தாளில் மத்திய அரசு ஒரு பத்திரிகை நடத்தி வந்தது. அது இப்போதும் வெளியிடப் படுகிறது என்று நினைக்கிறேன். மகிச் சிறந்த கட்டுரைகள் கொண்டிருக்கும்.

நூலகங்களிலேயே மிகச் சில நூலகங்களில்தான் அது படிக்கக் கிடைக்கும். சிறு பத்திரிகைகளின் பொருளாதரத்திற்கு ஓரளவு உதவும் இந்த நுலகங்கள் மதிக்கத்தக்கதாக அமைவதற்கு அதற்கு வரும் நல்ல பத்திரிகைகளைச் சார்ந்திருக்க வேண்டும்.

***********************

நூலகங்கள் இப்போது நிறைய வெளியடப்படுகின்றன என்று கூறும் அதே வேளையில் அவற்றின் தரத்தைப் பற்றியும் நினைக்க வேண்டியிருக்கிறது. 'எனி இந்தியன்' என்ற பதிப்பக வெளியீட்டுப் பட்டியலைப் பாரத்து எண்ணிக்கை மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்களே என்று தோன்றியது. ஆனால் அவர்கள் நூலகளைத் தனித்தனியாகப் படித்தபோது இவ்வளவு நல்ல நூல்கள் எப்போது எழுதப்பட்டன, வெளியிடப் படுவதற்காக எவ்வளவு நாட்கள் காத்திருந்தன என்று எண்ணும்படியாக இருந்தது. அதேபோல அந்த நிறுவனம் வெளியிடும் பத்திரிகையான 'வார்த்தை' கண்ணியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

**********************
தமிழ் சினிமாவுக்கு எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எனச் சில கொண்டாட்ங்கள் இருந்தன. பழைய படங்களின் நிழற்படங்கள், தீ மற்றும் வேதியல் மாற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்துச் சில படங்களின் துணுக்குகளைக் காண்பித்துக் கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஆனால் இந்த எழுபத்தைந்து ஆண்டு முடிந்து தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு வரலாறு எழுதப்படவில்லை. இருக்கிறது, பரமசிவம் எழுதியிருக்கிறார், பரமானந்தன் எழுதியிருக்கிறார் என்று உடனே சிலர் குரல் எழுப்பக்கூடும். ஆனால் பட்டியல்கள் போதாது. அந்தப் பட்டியலில் கூடத் தவறுகள் உள்ளன என்று அந்த நூலின் பின்னிணைப்புக் கூறும். ராண்டார் கை என்பவர் ஆங்கிலத்தில் பல பத்திரிகைகளில் தொடராக எழுதியிருக்கிறார். அவை நூலுருவில் வெளிவரவில்லை. இதுவரை வெளிவந்து, நான் பார்த்த நூல்கள் அதிகம் திருப்தி அளிக்கவில்லை. வரலாறு எழுதுவதற்கு ஆர்வம் வேண்டும். ஆனால் ஆர்வம் மட்டும் போதாது. சிந்தனையிலும் எழுதுவதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாடு இல்லாத எழுத்து சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் நம்பகத்தன்மையே இருக்காது. உதாரணத்திற்கு உர்து எழுத்தாளர் சாதத்ஹஸன் மண்ட்டோ இந்தி சினிமா பற்றி எழுதிய கட்டுரைகள். அந்த நாளில் இந்தி சினிமாவில் நடிகைகள் தொண்ணூறு சதவீதம் ஏழை முஸ்லிம்கள். உண்மையில் அவர்கள் மிகுந்த மன உளச்சல், வேதனைக்கு நடுவில்தான் பிழைப்புக்காக அவர்கள் சினிமாத் துறையில் இருக்க வேண்டியிருந்தது. இன்றுள்ள பாதுகாப்பும் பணவசதியும் அன்று கிடையாது. பெரிய நட்சத்திரமாக விளங்கியவர்கள் கூடப் புறநகர் ரயிலிலும் பேருந்துகளிலும் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. நாம் எதை எதையோ பாபம் என்கிறோம். அப்படி உழைத்த பெண்களைக் கேலயாகவும் தாழ்வாகவும் நினைப்பது மிகப் பெரிய பாபம் என்று நினைக்கிறேன். மண்ட்டோ கட்டுரைகள் என்றில்லை, இன்னும் பல எழுத்தாளர்கள் அன்றைய நடிகைகள் பற்றி எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் இந்த அம்சத்தில் குறையுள்ளவை.

சினிமாவை மட்டும் மதிப்பீடு செய்யும் வரலாற்றாசிரியர் இன்று மிகவும் தேவை. நடிக நடிகர்கள் முக்கிய பொருளாகக் கொண்டு இன்று நிறைய நூல்கள் வெளிவருகின்றன. ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. சினிமா நூல்களுக்கென்றே ஒரு தனி புத்தகக் கடை வைத்துவிடலாம் என்று எண்ணும் அளவுக்கு நூல்கள் உள்ளன. ஆனால் ஓரளவு நம்பகத்தன்மை கொண்ட இந்தி சினிமா வரலாறு கிடையாது. எல்லோருக்கும் உதிரி உதிரியாக எழுதத் தோன்றுகிறது. பிமல் ராய் என்றொரு (வங்காள மற்றும் இந்தி சினிமா) டைரக்டர் - தயாரிப்பாளர் பற்றி அவருடைய மகளே ஒரு நூல் எழுதியிருக்கிறார். பிமல் ராயின் எதிரிகூட ஒரு சரியான வரலாறைக் கூறியிருக்கலாம். இன்று வரை வெளிவந்த இந்தி சினிமாக்களில் மிக உன்னதமானது என்று பெரும்பாலதனோர் கருதும் ஒரு திரைப்படத்தை நடிகர் தேவ் ஆனந்த் தயாரித்தார். அது ஒரு நாவலைத் தழுவியது. அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் திரைப்படத்தை, நூல் ஆசிரியர் பல்வேறு இடங்களில் மிகக் கடுமையாக விமரிசித்தார்.

நாவலும் திரைப்படமும் வெவ்வேறு தேவையும் வீச்சும் கொண்டவை. நீலகண்ட சாஸ்திரி வரலாறில் ஒரே வரியில் எழுதியதை கமலஹாசன் திரைபடத்தில் ஒரு பாட்டு, நிறையப் படகுகள், ஏசு கிறிஸ்து வரலாறில் உள்ளபடி சவுக்கடி (முதலில் இந்தக் கருவி தென்னிந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்ததா என்று எனக்குச் சந்தேகம்தான்) எல்லாவற்றையும் கலந்து பத்து நிமிடங்கள் 'தசாவதாரத்தில்' நிகழ்த்திக் காட்டினார். குலோத்துங்க சோழன் வைணவச் சத்ருவாக இருந்தால் விக்கிரத்தின் மூக்கைத் தட்டியிருந்தாலே போதும். தேவ் ஆனந்தின் சுய சரித நூல் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்தது. ஆனால் அதில் அவர் யாரையும் குற்றம் குறை கூறவில்லை. அவருக்கும் வாழ்க்கையில் பெரும் ஏமாற்றங்கள், இழப்புகள் இருந்திருக்கின்றன. இந்தச் சுயசரிதையும், திரைப்பட வரலாறாக எடுத்துக்கொள்ள முடியாது. தேவ் ஆனந்தின் பண்புக்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog