Skip to main content

அந்தத் தெருவிற்குப் போயிருக்கவே கூடாது

துளி - 183



அந்தத் தெருவிற்குப் போயிருக்கவே கூடாது



அழகியசிங்கர்




ஆமாம். அந்தத் தெருவிற்கு நான் நுழைந்திருக்கவே கூடாது.

தெரியாமல் நுழைந்து விட்டேன்.  தவிர்த்திருக்கலாம். மேலும் அந்தப் பழைய பேப்பர் போடும் கடையைப் பார்த்திருக்க வேண்டாம்.  பார்த்தும் விட்டேன்.

மாத நாவல்கள் வரிசையாக ஒரு டேபிள் முழுவதும் நிரம்பி  வழிந்தன.  அதை எதையும் தொடவில்லை.

புத்தகங்கள் குவித்து வைத்திருக்கும் இடத்தில் என் பார்வை போயிற்று.

 
எல்லாம் ஆங்கில நாவல்கள். எப்படி ஒரே நாளில் பணக்காரனாவது என்ற ரீதியில் புத்தகங்கள்.  வாழ்க்கையில் இன்னும்  சிலரிடம் எப்படிப் பழகுவது என்பதுபோல் புத்தகங்கள்.  பைபிள்,அகராதி   பயன்படுத்தாத பழைய டைரி. சிட்னி ஷெல்டன் கட்டாயம் இருக்கும்.  இங்கே புத்தகம் வாங்கும்போது எனக்கு மட்டும் கிலோ ரூ.80 கொடுப்பார்கள்.  எனக்கு மட்டும்தான் இந்தச் சலுகை.  மற்றவர்களுக்கு ரூ.100.

ஆனால் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைப் போடக் கொடுத்தால் கிலோ ரூ.7 என்று வாங்கிக்கொள்வார்கள்.

தேடும்போது ஒரு தமிழ் நாவல் கிடைத்தது.  இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள்.

எடுத்து வைத்துக்கொண்டேன்.  உள்ளே புரட்டிப் பார்த்தேன். திகைத்து விட்டேன். வட்டார நூலகம், அசோக் நகருக்குச் சொந்தமான புத்தகம்.

20.08.2019 இந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  இந்தப் புத்தகத்தைப் பேப்பர் கடையில் போட்டால் என்ன கிடைத்துவிடும்?

பேப்பர் காரனிடம் பேரம் பேசினேன்.
  
"இது என்ன விலை?"

"ஐம்பது ரூபாய்."

"இது திருட்டுப் புத்தகம்.  நூலகத்திலிருந்து திருடி வந்தது.  விற்பதே குற்றம் என்றேன்.எத்தனைப் பேர்கள் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படிப்பார்கள் தெரியுமா?"

"எனக்கு என்ன சார் தெரியும்"

"பார்த்து வாங்க வேண்டாமா?"

"புத்தகங்களோடு புத்தகமாக எடைக்குப் போடுகிறார்கள்.  எல்லாவற்றையும் பார்க்க முடியுமா?"

"சரி, நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்கிறேன்.  ஆனால் நான் படித்துவிட்டு நூலகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடுவேன்.   அப்பக் குறைவா விலைக்குக் கொடுங்கள்."


"முப்பது ரூபாய், சார்."

நான் முப்பது ரூபாய் கொடுத்தேன்.  

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு நூலகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றேன்.

அவன் தலை ஆட்டினான்.
  
  

Comments