Skip to main content

எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

 துளி - 181

02.04.2021

துளி - 181

எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

அழகியசிங்கர்  
எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன்.

ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன்.  நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் 

அவர் அதிகம் படித்தவர்.   தனியார்ப் பள்ளியில்  மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.   

அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்.

 'தாத்தா காலத்து பீரோ'  என்ற  அவருடைய சிறுகதைப் புத்தகம் வெளிவந்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறியது   ஞாபகத்திற்கு வருகிறது.  அப்போது புத்தகக் காட்சி நடந்து கொண்டிருந்த சமயம்.2017 ஆம் ஆண்டு.

கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார்.  அவருக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று தெரியும். போதி வனம் வெளியிட்ட புத்தகத்தைப் புத்தகக் காட்சியில் வாங்கிக்கொண்டேன்.

ராம் அபுத்திரனின் கதை நாடகத்தைப் புத்தகமாகக் கொண்டு வர நினைத்தார்.  என்னிடம் அதைச் சொன்னபோது நான் அதற்கு ஏற்பாடு செய்து உதவினேன்.

திருவல்லிக்கேணியில் அந்த பிரஸ் இருந்தது.  அவர் புத்தகத்தைச் சரியாக அச்சடித்துக் கொடுக்கவில்லை. ராமிற்கு பிரஸ்காரன் மீது படு கோபம்.  உடனே அவன் மீது கேஸ் போட்டார். கேஸ் முடிவு யாருக்குச் சாதகமாக வந்தது என்று தெரியவில்லை.  அந்த அளவிற்குப் போராட்ட குணம் கொண்டவர் ராம். 

அதன்பின் எஸ.எம்.ஏ ராம் நாடகங்கள் என்ற பெயரில் அவரே ஒரு தொகுப்பைத் திரும்பவும் சில வருடங்கள் கழித்துக் கொண்டு வந்தார் .  இந்த முறை அவரே புத்தகம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டு விட்டார்.  அந்தப் புத்தகத்திற்கான ஒரு அறிமுகக் கூட்டத்தை  விருட்சம் மூலம் ஏற்பாடு செய்து நடத்தினோம்.

இன்னொரு முறை நான் அவரை அடையாரிலுள்ள மலர் மருத்துவ மனையில் சந்தித்தேன்.  நான் என் பெண்ணிற்காகவும், அவர் அவருடைய பெண்ணிற்காகவும்.  

ராமிற்கு வாசகர் வட்டம் அதிகம்.  அவருடைய நாடகப் புத்தகங்களைப்  பலர் வாங்கினார்கள்.  பல ஊர்களில் அவர் நாடகங்களை அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள்.  இதெல்லாம் பெரிய அங்கீகாரம் என்று எனக்குத் தோன்றுகிறது.  இலக்கியத் தரமான நாடகங்கள் எழுதும் ஒருவருக்கு இந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பது பெரிய விஷயம். . உண்மையில் வெளி ரங்கராஜனுக்கும் அவர் வளர்ச்சியில் பங்கு இருப்பதாக நினைக்கிறேன்.

விருட்சம் கூட்டத்தில் நாடகத்தைப் பற்றி ராம் பேசிய ஆடியோவை ஒலி  பரப்ப உள்ளேன்.

திடீரென்று அவர் மறைந்த செய்தியை அறிந்தபோது வருத்தம்.  அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
May be an image of text
You and Bhaskaran Jayaraman

Comments