Skip to main content

ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

 பத்திரிகைகள் பலவிதம்....



அழகியசிங்கர்



' புதிய புத்தகம் பேசுது' என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.

ஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன். இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை. பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு இதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது. வாசிப்பின் வாசல் திறப்பவர்கள் என்று தலைப்பில் இந்தப் பேட்டி வெளிவந்திருக்கிறது.

அடுத்தது இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள். நக்கீரன் கோபால் பற்றிய கட்டுரை. இதை எழுதியவர் ச.மாடசாமி. கோபால் என் வகுப்பறை மாணவர் அல்லர் மற்றொரு வகுப்பûயின் மாணவர் என்கிறார். கோபாலைப் பற்றி பற்பல நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இந்தக் கட்டுரையில்.

புதிய புத்தகம் பேசுதுவின் ஆசிரியர் ஆயிஷா இரா நடராஜன்.அவர் 15 புத்தகங்களைப் பற்றி விவரித்திருக்கிறார். சரியாக ஒரு பாரா ஒரு புத்தகத்திற்கு வீதம். இந்த முறையில் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது சிறப்பாக உள்ளது.

‘வலை வாசல் வருக’ என்ற புத்தகத்தைப் பற்றிக் கூறும்போது. வியப்போடு நமக்குச் சற்று வியர்க்கவும் செய்கிறது என்கிறார். முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம் எழுதிய கணினி இயல் குறித்து தமிழ்ப் புத்தகம்.

‘இலக்கணம் இனிது’ என்ற நா.முத்து நிலவன் புத்தகம். தமிழ் பேசும், எழுதும் நல்லுலகிற்கு மிகவும் தேவையான பங்களிப்பு இந்த நூல்.

மூன்றாவது புத்தகமாகக் ‘கண்ணில் தெரியும் கடவுள்’ என்ற ஹைக்கூ கவிதைகள் பற்றிய புத்தகத்தைப் பற்றி எழுதி உள்ளார். இந்த புத்தகம் ஒரு பல மிக அசலான ஹைச்கூ கவிதைகளை உள்ளடக்கியது.

உதய்சங்கரின் ‘பொம்மைகளின் நகரம்’ சிறார் புத்தகம். குழந்தைகளிடையே கற்பனைத் திறனை வளர்க்கும் சூப்பர் சித்திரம் என்கிறார்.

‘இந்திய சுதந்திர8ப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை ஜெ.ராஜா முகமது எழுதி உள்ளார். ஆயிஷா இந்தப் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது இந்த நூலை வாசித்தபோது பல பக்கங்களைத் திருப்ப முடியாமல் நான் கண்ணீர் கசிந்தேன் என்று குறிப்பிடுகிறார்.”

எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைத் தொகுப்பான ‘நன்றி ஓ ஹென்றி’ புத்தகத்தை நேர்த்தியான தொகுப்பு என்கிறார்.

அறிவியல் புனைவுகளை எழுதுவது கவிஞர் புவியரசு எனும் ஆளுமைக்குப் புதிதல்ல என்கிறார் ஆயிஷா.

‘நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ்’ என்ற மொழிபெயர்ப்பு புத்தகம். மொழி பெயர்த்தவர் சு. சுப்பராவ். இந்த நூல் ஒரு ஆவணம்.

‘காராபூந்தி சிறார் கதைகள்’ விழியன் எழுதியது. மின்னல்கள் எனச் சிறார் கதை ஆக்கிய விதத்தை வியக்கிறேன் என்கிறார் ஆயிஷா.

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற கி.வீரமணி புத்தகம். வேறு எந்த தமிழறிஞரையும் விடத் தமிழுக்கு அதிக பங்களிப்பைச் செலுத்தியவர் தந்தை பெரியார் என்பதை ஆழமாக நிறுவும் அற்புத படைப்பு இந்த நூல் என்கிறர் ஆயிஷா.

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு என்ற தகாஷி நாகாய் புத்தகம் மொழி பெயர்த்தவர் கு.ம ஜெயசீலன் கல்வி, குழந்தை வளர்ப்பு, அதில் அரசின் பொறுப்பு என்று எல்லாவற்றையும் கிழிக்கும் கசப்பு மருந்து இந்த நூல்.

‘101 கேள்விகளும் 100 பதில்களும்’ என்ற புத்தகத்தைத் தினகரன் எழுதியிருக்கிறார். அரிய தகவல்கள் இந்த நூஙூல் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார் ஆயிஷா.

‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ என்ற சரிதா ஜோவின் முதல் சிறார் கதை. சிறார் இலக்கிய படைப்பாளிகளில் பெண்கள் குறைவு. அதிலும் ஒரு ஆசிரியை என்கிறார்.

‘அப்பாவின் நாற்காலி’ என்ற கவிதைப் புத்தகம். வளவ துரையன் எழுதிய கவிதைகள். பல கவிதைகள் மிகவும் எளியவை என்கிறார் ஆயிஷா

‘உரக்கப் பேசு’ என்கிற சுதன்வா தேஷ்பாண்டே யின் மொழிபெயர்ப்பு நூல் மொழி பெயர்த்தவர் அ மங்கை. இன்றைய பாசிச அரசியல் சூழலில் உரக்கப் பேசப்பட வேண்டிய படைப்பு என்று முடிக்கிறார் ஆயிஷா.

இந்தப் பத்திரிகையில் ஆயிஷாவின் 15 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.

வாசிப்பு ரசனை வாழ்க்கை என்ற தலைப்பில் எஸ்.வி வேணுகோபாலன் ஒரு தொடர் கதையை எழுதிக்கொண்டு வருகிறார்.ஆர் சூடாமணி எழுதிய நெருப்பு என்ற கதையை எடுத்து அலசுகிறார்.

நேர்காணலில் சிந்து வெளி ஆய்வாளராகவும் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் பரவலாக அறியப்படுபவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இடம் பெறுகிறார். நேர்காணல் செய்தவர் சங்கர சரவணன். நீண்ட இந்த நேர்காணல் சிறப்பாக உள்ளது. பல அரிய தகவல்களைக் கொண்டது.

‘கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் மணியன் அவர்கள் வறீதையா கான்ஸ்தந்தின் புத்தகமான ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ என்ற நூலினை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புத்தகம் கடலோர மீனவர்கள் வாழ்வு, அவர்களின் தொழில் முறை குறித்து விரிவாகக் கூறுகிறது.

சிதம்பரம் இரவிச்சந்திரனின் ‘வீட்டிலிருந்து காட்டிற்கு’ என்ற சுற்றுச் சூழல் தொடர் ஒன்றும் வந்துள்ளது.

‘கொமறு காரியம்’ என்ற கீரனூர் ஜாகிர்ராஜா சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஸ்ரீநிவாஸ் பிரபு விமர்சனம் செய்துள்ளார். உடனே இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகிறது.

வெறும் பயணக் கதை அல்ல கம்யூனிச இயக்கத்தின் பிரசவ வலி என்ற கட்டுரையை க.பொ.அகத்தியலிங்கம் எழுதி உள்ளார். கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை.

கடவுளின் பெயரால் கா

மக்கூத்து என்ற கட்டுரை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் வந்துள்ளது. இப்புத்தகத்தைப் பற்றி பொ.வேல் சாமி கட்டுரை எழுதி உள்ளார். தேவதாசிகள் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாசிரியர் தரும் தகவல்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதற வைக்கும் என்று குறிப்பிடுகிறார் வேல் சாமி.

தமிழினி வெளியிட்டாக வந்த முன்னத்தி என்ற நாவலை மாற்கு என்பவர் எழுதி உள்ளார். இரு ஒரு வரலாற்று நாவல். ஒவ்வொருவரும் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியிருப்பவர். அ.ஜெகநாதன்.

இப்படி புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாதம் வெளிவந்த பத்திரிகை முழுவதும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பாரதி புத்தகலாயம் தயாரிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தாலும், அவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் புத்தகங்களையும் அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.. புத்தகம் பேசுகிறது இதழில் என் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர் சா.கந்தசாமி எழுதியிருக்கிறார். இந்தப் பத்திரிகை கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் கொண்டு வருவது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. புத்தகம் பேசுது தொண்டு தொடரட்டும்.

( தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஏப்ரல் 2021 திண்ணையில் வெளிவந்தது )


Comments