துளி - 184
அழகியசிங்கர்
 கவிதை வாசிக்கும் கூட்டம் ஆரம்பித்து நேற்றுடன் 46வது கூட்டம் முடிந்து விட்டது.
 சமீப காலங்களில் ஒவ்வொரு கூட்டம் போது ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன். இதை  வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறேன்.
 நேற்று நடந்த கூட்டத்தில் லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைப் புத்தகமான 'கேட்பவரே' என்ற கவிதைத் தொகுதியை அறிமுகப்படுத்தினேன்.
 இந்தப் புத்தகம் 2016ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  320 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. விலையும் ரூ.320.
 எப்போதும் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்தும்போது அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை வாசிப்பது வழக்கம்.
 நான் வாசித்த கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
 தோற்றங்கள்
 குழந்தைகளின் கண்களில் தோன்றுவது
 அவனது கண்களில் தோன்றுவதில்லை
 மனைவியின் கண்களில் தோன்றுவது
 குழந்தைகள் கண்களிலும் அவனது கண்களிலும்
 தோன்ற மறுக்கின்றன
 வீடு ஒரே சமயத்தில் குழந்தைகளின், மனைவியின்
 அவனின் மற்றும் என தோற்றங்களை
 பெருமூச்சுடன் பார்க்கத் தொடங்கும்போது
 சுவர்களைச் சிறகென அசைத்தபடி
 அறைகளின் வெற்றிடங்களில்
 நிரம்பியிருக்கும் தோற்றங்களின் அசைவுகளையும்
 சுமந்தபடி வீடு
 மெல்ல மேலெழும்புகிறது.
 அவன் கண்களில் தோன்றியவற்றையெல்லாம்
 கதை கதையாய்  சொல்லி  கட்டி எழுப்பிய
 கணிதச் சுவர்கள் அவை
 மேலெழும்புவதைத் தோன்றத் தெரியாமல்
 தனது கண்களில் வலுவாக உட்கார்ந்திருக்கிறான்
 அவன்.
 இந்தக் கவிதையை வாசிக்கும்போது யாருக்காவது இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டுமென்று தோன்றும்.
 இதோ புத்தக விபரம்.
 கேட்பவரே - கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் - வெளியீடு : படிகம், 4-184 தெற்குத் தெரு, மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி - 629 180, கன்னியாகுமரி - பக்கம் : 320 - விலை ரூ.320

Comments