அழகியசிங்கர்
இன்று மதியம் மேல் பழைய தினசரி தாள்களைப் பேப்பர் கடையில் போடுவதற்கு எடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு காலத்தில் பல பத்திரிகைகள் வாங்குவேன். இப்போதெல்லாம் வாங்குவதில்லை. ஆனாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகள் தோறும் பத்திரிகைகள் வாங்குவேன். ஆனால் வீட்டில் சேர்ந்து கவலைப்படும்படி செய்துவிடும்.
அதை பேப்பர்கடையில் போடுவதைவிட வேற வழி இல்லை என்று தோன்றும். அசோக்நகரில் வசிக்கும் என் நண்பர் ராஜாமணி வீட்டிற்குச் சென்றால் வீட்டு வாசலில் கட்டுக்கட்டாய் பேப்பரை கட்டிவைத்திருப்பார். பல மாதங்களாக வாங்கிக் குவித்திருப்பார். பேப்பர் கடையில் போடுவதற்கே அவரக்கு மனசு வராது.
நானும் அப்படித்தான். இதில் என்ன பிரச்சினை என்றால் பேப்பரை மேலோட்டமாகப் பார்க்கத்தான் தோன்றுமே தவிர ஆழமாகப் படிக்க முடியாது. நேரம் இருக்காது. அல்லது அப்புறம் படிக்கலாமென்று வைத்துவிடுவோம். இதுமாதிரி பட்டதால்தான் நான் தினமும் பேப்பர் வாங்குவதை உடனே நிறுத்திவிட்டேன்.
அப்படியும் வார முடிவில் வாங்கும் பேப்பர்கள் சேர்ந்து சேர்ந்து போய்விடுகின்றன. திரும்பவும் முழுவதும் படிக்காமல் வெறுமனே புரட்டிப்போடும் பத்திரிகைகள்தான். ஆனால் இதை பேப்பர் கடையில் போடுவதற்கும் மனது வருவதில்லை.
வேறு வழியில்லாமல் என்னிடம் சேகரித்து வைத்திருந்த பேப்பர்களைப் பேப்பர் கடையில் போட்டுவிட்டேன். மனதிற்குள் கொஞ்சம் விசனமாக இருந்தது.
குரியர் கடையில் நின்றிருந்தபோதுதான் நண்பர் திருவள்ளுவனரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. அவர்தான் இன்றைய தினமணி நாளிதழை வாங்கச் சொன்னார். உடனே போய் வாங்கி வந்தேன்.
தினமணி 85 என்ற பெயரில் தினமணி நாளிதழ் இன்று மட்டும்60 பக்கங்களுக்கு மேல் வந்துள்ளது. பத்து ரூபாய்தான். பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷமாக எனக்குத் தோன்றுகிறது. தினமணி அளவில் 16 பக்கங்களுக்குக் குறையால் ஒவ்வொன்றும் வந்துள்ளது. என் நண்பர்களுக்கு எல்லாம் போன் மூலம் இதைச் சொல்கிறேன். இதழல்ல, இது இயக்கம் என்று தினமணி ஆசிரியர் கி வைத்தியநாதன் எழுதியிருக்கிறார்.
Comments